Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காந்தி, நேரு சொன்னதெல்லாம் இருக்கட்டும்... நீங்க என்ன சொல்ல வர்றீங்க? - கேணி விமர்சனம்

தமிழக - கேரள எல்லையோரம் இருக்கும் இரு சிற்றூர்கள். இரண்டு ஊருக்கும் பொதுவாக ஒரு கேணி. கேரள கிராமமோ செழித்து பச்சைப் போர்வையை போர்த்தியபடி இருக்கிறது. தமிழக கிராமத்தில் நிலைமை தலைகீழ். டம்ளரில் அள்ளக்கூட எங்கும் தண்ணீர் இல்லை. கேணியே கதி என தமிழக மக்கள் வாளி இறக்க, கயிறு ஏறவிடாமல் இறுக்கிப் பிடிக்கிறது கேரளக் கைகள்! பற்றியெறியும் தண்ணீர் பங்கீட்டுப் பிரச்னையின் மினியேச்சர் வெர்ஷன்தான் இந்தக் கேணி!

கேணி

'தண்ணீர்தான் வருங்காலத்தின் தங்கம்' என உரக்கக் கூவுகிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக நடக்கலாம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். இந்த இரண்டுக் கூற்றுகளையும் ஒரு கதையாக நிரூபிக்க முயன்றிருக்கிறார் நிஷாத்.  அந்தவகையில் இவரைப் பாராட்டலாம். ஆனால் திரைக்கதையாக நிற்கிறதா?

தன் கணவரின் பூர்வீக வீட்டுக்கு பல ஆண்டுகளுக்குப் பின் வருகிறார் ஜெயப்பிரதா. நீண்டகாலமாக உரிமை கோரப்படாததால் அந்த வீட்டின் கேணி, சர்வேயில் கேரள எல்லைக்குட்பட்டதாக மாறியிருக்கிறது என்பது வந்தபின்தான் தெரிகிறது. இந்தப் பக்கம் வறட்சியில் வாடும் மக்களுக்காக அந்தக் கிணற்றுத்தண்ணீரை சொந்தமாக்க போராடுகிறார் ஜெயப்பிரதா! கதை இப்படி சிம்பிளாக இருந்தாலும் திரைக்கதை சும்மா சுழன்று சுழன்று அடிக்கிறது.

கேணி

ஜெயப்பிரதா, பார்த்திபன், நாசர், ரேவதி, அனுஹாசன், தலைவாசல் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரேகா என தங்கள் நடிப்பால் தனியாகவே படத்தைத் தூக்கி நிறுத்தக்கூடிய கலைஞர்கள் எக்கச்சக்கம் பேர் கேணியில் இருக்கிறார்கள். ஆனால் குழப்பமான திரைக்கதையால் அவர்களின் நடிப்பு எடுபடாமலே போகிறது. புழுதிப் புயலில் தோன்றும் மின்னலாக பார்வதி நம்பியார் மட்டும் வரும் ப்ரேம்களில் எல்லாம் சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்களால் விழி நிறைக்கிறார். 

கேணி

மூன்று பத்திரிக்கையாளர்களின் பார்வையில் படம் விரிவதாக சொல்வதெல்லாம் சரிதான். நான் லீனியர் திரைக்கதையை கையிலெடுத்ததும் சரிதான். ஆனால் ஆளாளுக்கு ப்ளாஷ்பேக் சொல்லிக்கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் எது ப்ளாஷ்பேக், எது நிகழ்காலம் என்பதே தெரியாமல் போகிறதே சாரே! தண்ணீர்ப் பிரச்னையோடு இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக முத்திரை குத்தும் மேம்போக்கான எண்ணம், போராளிகளை மாவோயிஸ்ட்களாக சித்தரிக்கும் காவல்துறையின் அராஜகம் ஆகியவற்றையும் பேச நினைத்திருக்கிறார்கள். ஆனால் ஒருகட்டத்தில் எல்லாமே ஓவர்டோஸாகி அந்தரத்தில் நிற்கின்றன.

கேணி

காட்சியமைப்புகள்தான் இப்படியென்றால் வசனங்களிலும் சொதப்புகிறார்கள். தண்ணீர் அரசியல் பேசும் படத்தில் வசனங்கள் செம ஷார்ப்பாக இருக்கவேண்டுமே! ஆனால் இதில் ஆளாளுக்கு காந்தி ஒருதடவை இப்படி சொன்னாரு, அன்னை தெரசா ஒருதடவை இப்படித்தான் சொன்னாங்க' என பிரபலங்களின் தத்துவங்களையே அள்ளித் தெளித்தபடி இருக்கிறார்கள். ஒருகட்டத்தில் நாமும் ட்யூன் ஆகி, 'இது யார் சொன்னதா இருக்கும்?' என யோசிக்கத் தொடங்கிவிடுகிறோம்.

கேணி

படத்தை ஓரளவாவது காப்பாற்றுவது நெளஷாத் ஷெரிப்பின் ஒளிப்பதிவுதான். ஒருபக்கம் பச்சை சூழ் உலகு, மறுபக்கம் கருவேலங்காடு இரண்டையும் அழகாக பேலன்ஸ் செய்வதில் அவர் திறமை மின்னுகிறது. எம்.ஜெயச்சந்திரனின் இசை ஏமாற்றுகிறது. கிடைத்த காட்சிகளை வைத்து எடிட் செய்திருக்கிறார் ராஜாமுகமது. படத்தின் இரண்டாம்பாதி அநியாய நீளம். நான்ஸ்டாப் ஸ்லீப்பர் பஸ் போல போ...............ய்க்கொண்டே இருக்கிறது. 

கேணி

லாஜிக் உறுத்தல்களும் நிறையவே இருக்கின்றன. ஊரே ஒருவாய் தண்ணீருக்காக ஏங்கும்போது நாயரின் டீக்கடையில் மட்டும் அவ்வளவு தண்ணீர் புழங்குவது எப்படி? உயர்நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணையில் டவாலி எல்லாம் கருத்து சொல்கிறார்! ஆனாலும் ஒரு நியாயம் வேணாமாங்க? பிரியப்போகும் போலீஸ் அதிகாரிகள் கண்ணீர்விடுவது, உயிருக்குப் போராடும் குழந்தைகளுக்கு மத்தியில் டாக்டர் கேம்ஸ் ஆடுவது போன்ற காட்சிகளில் எல்லாம் உச்சபட்ச செயற்கைத்தனம்.

கனமான ஒன்லைனை அமெச்சூர்த்தனமான திரைக்கதையாக எழுதி அலட்சியமாக எடுத்து வாய்பைத் தவறவிட்ட மற்றுமொரு திரைப்படம் இந்தக் 'கேணி'.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்