Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"புடுங்குனது பூராவுமே தேவையில்லாத ஆணிதான்!" - 'ரெய்டு' படம் எப்படி? #RaidReview

கறுப்பு பண அரசியல்வாதி, அவனைக் குறிவைத்துக் கவிழ்க்கும் நேர்மையான வருமான வரித்துறை அலுவலர், இவர்களுக்கு  இடையே நடக்கும் விளையாட்டே'ரெய்டு' திரைப்படம். #RAID.

ரெய்டு

1980களில் இந்திய வருமான வரித்துறையால் பல இடங்களில் வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டன. அந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்டது ரெய்டு.

40 வயதுடைய வருமான வரித்துறை அதிகாரி அமே பட்நாயக் (அஜய் தேவ்கன்) 7 வருட பணியில் 50-க்கும் அதிகமான முறை இடமாற்றம் செய்யப்பட்ட நேர்மையான அரசு அதிகாரி. இந்தமுறை உத்திரபிரதேச மாநிலம் லக்னோ நகரில் பணிபுரிந்து வருகிறார். சராசரி இல்லத்தரசியாக இவர் மனைவி, இலியானா டி' க்ரூஸ். உத்திரபிரதேச மாநிலத்தின் மிகப்பெரிய அரசியல்வாதியும் ‘டௌஜி' என்று அழைக்கப்படுபருமான ரமேஸ்ஹ்நர் சிங் (சோரப் ஷுக்லா) ஊருக்கு மத்தியில் ஏக்கர் கணக்கு வயல்வெளிகளுக்கு நடுவே ‘ஒயிட் ஹவுஸ்’ என்ற பங்களாவில் தன் உடன் பிறந்தவர் மற்றும் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.

பட்நாயக்கின் வரும் போன் காலில் ‘டௌஜி’ பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பணம் மற்றும் கணக்கில் சேரா சொத்துகள் பற்றிய துப்பு கிடைக்கிறது. அந்த முகம்தெரியாத நபர் கொடுத்த விபரங்களின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளும் அமே பட்நாயக் மற்றும் குழுவினருக்கு அவர்கள் எதிர்பார்த்தது கிடைத்ததா, டௌஜி சிக்கினாரா, முகம் தெரியாத அந்த நபர் யார்... என்ற கேள்விகளுக்கான பதிலை இரண்டு மணி நேரக் கதையாக சொல்கிறது, ரெய்டு.  

ரெய்டு

படத்தின் முதல் பாதியில் நாயகன் அமேவின் நேர்மையைப் பற்றி நமக்குப் பாடம் எடுக்கப்படுகிறது. அமே ஒரு பார்ட்டிக்குச் செல்கிறார், அங்குதான் டௌஜியை முதல்முறையாகப் பார்க்கிறார் (ஆனால், இது முக்கியமல்ல). அந்தப் பார்ட்டியில் தரும் இலவச மதுவைக் குடித்தால் தனது பெயருக்குப் பங்கம் வரும் என்று அறிந்து வெளியில் இருந்து தன் சொந்த செலவில் ஒரு பாட்டில் மதுவை வாங்கிச் சென்று குடிக்கிறார் (நேர்மையோ நேர்மை).

கேசரியில் ஆங்காங்கே தட்டுப்படும் முந்திரிபோல கதாநாயகி படத்தில் அவ்வப்போது தட்டுப்படுகிறார். டௌஜியின் அம்மாவாக வரும் மூதாட்டி திரையரங்கையே சிரிப்பால் அதிரச் செய்கிறார். 'இசை' படத்தில் நடித்த சாவித்திரி முக்கியக் கதாபாத்திரத்தில் கவனிக்க வைத்திருக்கிறார்.

வீட்டில் எங்கெங்கு பணம் பதுக்கப்பட்டுள்ளது என முன்னரே தெரிந்தும், அதை எடுக்காமல் படத்தை ஓட்ட வேண்டும் என நாயகனும் வில்லனும் பேசிக்கொண்டேயிருப்பது, நம்மை அலுப்படையச் செய்கிறது. தனது வீட்டிலிருக்கும் பணத்தைக் காப்பாற்ற டௌஜி (அன்றைய) பிரதமர் இந்திரா காந்தியைச் சந்திப்பது, தனது குடும்பத்தில் இருப்பவர்கள் மீது சந்தேகப்படுவது, இறுதியில் சிறைக்குச் செல்வது... என அனைத்தும் மேம்போக்காகவே இருக்கிறது. பல அலட்சியங்களுடன் படத்தை இயக்கியிருக்கிறார், இயக்குநர் ராஜ் குமார் குப்தா. மிகவும் சின்னக் கதைக்கு முடிந்த அளவு முக்கி முக்கி இழுத்து ஒரு திரைக்கதை எழுதியிருக்கிறார், ரித்தேஷ் ஷா. மூன்று நாட்களில் 420 கோடியை டௌஜி வீட்டிலிருந்து கைப்பற்றும் காட்சிகள் வேகமாக நகர்ந்தாலும், பின் வரும் நிகழ்வுகள் ஆமைபோல் நடக்கிறது. டௌஜி, அமே இருவருக்கும் நடுவே பல சுவாரஸ்யமான (?!) சம்பவங்கள் படத்தைப் பஞ்சரான வண்டிபோல உருட்டிச் சென்ற அனைத்து புகழும் இவரையே சேரும்.

‘ஒரே மந்தையின் இரண்டு ஆடுகள் வெவ்வேறு பாதையில் சென்றது’ என்பதுபோல படத்தின் காட்சிகளும் அமித் திரிவேதியின் இசையும் இருக்கிறது. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அனைத்தும் கதைக்கு ஒட்டாமலேயே இருப்பதும் பெரிய ஏமாற்றம்.  80-களில் நடக்கிறது என்று கூறும் வகையில் எந்த ஒரு கலையமைப்பும் உற்று நோக்கக்கூடியதாக அமையவில்லை. ‘நோ ஒன் கில்டு ஜெஸ்ஸிக்கா’ இயக்கிய ராஜ் குமார் குப்தா இயக்கியுள்ள படம் என்ற எதிர்பார்ப்பிற்குச் சற்றும் தீணியிடாமல், நம்மை ஏமாற்றுகிறது படம்.

நேர்மையற்ற அரசியல்வாதி, நேர்மையான அதிகாரி என நாம் பார்த்துப் பழகிய கதைக்கு எந்த வகையிலும் புத்துயிர் கொடுக்காமல் நம்மை டயர்ட் ஆக்குகிறது இந்த 'ரெய்டு'.  

 

 

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்