மினி சுற்றுலா, மூன்று முகமூடி கொலைகாரர்கள்... முடிவு என்ன?" - 'தி ஸ்ட்ரேஞ்சர்ஸ் ப்ரே அட் நைட்' படம் எப்படி? #TheStrangersPreyatNight

ஒருநாள் சாயங்காலத்தை தன் குடும்பத்துடன் ஜாலியாகக் கழிக்கலாம் என மினி சுற்றுலாவுக்கு வந்திருக்கும் ஒரு குடும்பத்தை, ஏன் எதற்கு என்று கேட்காமலேயே கொலை செய்ய முயற்சிக்கும் மூன்று முகமூடிக் கொலைகாரர்கள். உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட `தி ஸ்ட்ரேஞ்சர்ஸ் ப்ரே அட் நைட்' (The strangers prey at night) படம் எப்படி?

தி ஸ்டேஞ்சர்ஸ் ப்ரே அட் நைட்

மைக் (மார்டின் ஹெண்டர்ஸன்) அவரது மனைவி சிண்டி (கிறிஸ்டினா ஹெண்ட்ரிக்ஸ்), மகள் கென்ஸி (பெய்லி மேடின்ஸன்), மகன் லூக் (லீவிஸ் புல்மேன்) எனத் தன் குடும்பத்துடன் நேரத்தைக் கழிக்க, உறவினர் ஒருவருக்குச் சொந்தமான இடத்துக்கு ஜாலி ட்ரிப் செல்கிறார்கள். போர்டிங் ஸ்கூலில் சேரப்போகும் கென்ஸியை குஷிப்படுத்தவே இந்த ட்ரிப்பிற்கு பிளான் போட்டிருக்கிறார், மைக். ஆனால், அதில் கென்ஸிக்குத் துளியும் உடன்பாடு இல்லை. அழுது ஆர்ப்பாட்டம் செய்துகொண்டே அவருடன் புறப்படுகிறார், கென்ஸி. பலமணி நேரப் பயணத்துக்குப் பின் ஒரு வழியாக அந்த இடத்துக்கு வந்து சேர்கிறது மைக் குடும்பம். வந்தவர்களுக்கு அதிர்ச்சி. அந்த இடத்தில் யாரும் இல்லை. உறவினரும், `நான் உங்களைக் காலையில் பார்க்கிறேன்' என்று ஒரு பேப்பரில் எழுதி வைத்துவிட்டு சாவியை வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.  

கொஞ்சநேரம் கழித்து முகம் தெரியாத நபர் ஒருவர் கதவைத்தட்டி, `டமாரா இருக்காங்களா?' எனக் கேட்டுவிட்டு ஓடிவிடுகிறார். அதேநேரத்தில் வெளியே காற்றுவாங்கச் செல்லும் கென்ஸியும், லூக்கும் ஒரு கோர சம்பவத்தைப் பார்க்கிறார்கள். அதற்குப்பின் மூன்று முகமூடிக் கொலைகாரர்கள் தங்களைக் கொல்ல வருவதை உணர்ந்த ஒட்டுமொத்தக் குடும்பமும், தங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் வழியைத்தேடி ஓடத் தொடங்குகிறார்கள். கென்ஸியும் லூக்கும் பார்த்தது என்ன... ஏன் எதற்கு என்று தெரியாமலே கொல்லத் துடிக்கும் கொலைகாரர்கள் யார்... அவர்களிடமிருந்து மைக்கின் குடும்பம் தப்பித்ததா, இல்லையா... என்பதைத் த்ரில்லிங்காக சொல்ல முயற்சித்திருக்கிறார், இயக்குநர் ஜொஹான்னஸ் ராபர்ட்ஸ். 

கெய்லி மேடின்ஸன்

படத்தின் ஒன்லைன் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தினாலும், கதை நகரும் தன்மை சற்று தொய்வுதான். `ஏன் இதெல்லாம் பண்ற?' எனக் கேள்வி கேட்கும் மைக்கின் குடும்பத்தில் இருக்கும் நான்கு பேர், ’ஏன் இதெல்லாம் பண்ணக்கூடாது?' எனச் சொல்லி கொல்லத்துடிக்கும் மூன்று முகமூடி சைக்கோக் கொலைகாரர்கள்... எனப் படத்தில் மொத்தமே ஏழு கதாபாத்திரங்கள்தான். 2008-ல் வெளிவந்த `தி ஸ்ட்ரேஞ்சர்ஸ்' படத்தின் இரண்டாம் பாகம் இது. ஆனால், அந்தப்படம் கொடுத்த சுவாரஸ்யத்தை இது கொடுக்கத் தவறிவிட்டது. ஒட்டுமொத்தக் கதையும் இரவிலே நடப்பதால் படம் படுவேகமாக நகர்வதுபோலத் தோன்றுகிறதே தவிர, சுவாரஸ்யம் குறைவு. ஒரு இரவில் நடக்கும் கதை. அதற்கு இன்னும் கொஞ்சம் த்ரில்லரைக் கூட்டிருந்தால், சுவாரஸ்யத்திற்குப் பஞ்சமில்லாத ஒரு படம் பார்த்த திருப்தி இருந்திருக்கும்.  

தங்களுக்குக் கொடுத்த கதாபாத்திரத்தை ஏழு பேரும் மிகச் சரியாக செய்திருக்கிறார்கள். முக்கியமாக, பெய்லி மேடின்ஸனின் நடிப்பு அதிக கவனம் பெறுகிறது. படத்தில் இவர்தான் அதிக நேரம் இடம்பெறுகிறார். பயத்தில் வெளிக்காட்டும் ஃபேஸ் ரியாக்‌ஷன், `தன் குடும்பத்தை காரணமேயில்லாமல் இப்படிச் செய்துவிட்டாயே' எனத் துப்பாக்கியை எடுத்து கொலைகாரனை சுட்டுத்தள்ளும்போது வெளிப்படுத்திய கோபமாகட்டும்... வெரைட்டி ரியாக்‌ஷன்ஸ் கொடுத்து அசத்திவிட்டார். புகைக்கும் சிகரெட்டை மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம் பெய்லி. இவரைத் தவிர, `எவனா இருந்தாலும் வெட்டுவேன்' எனக் கொலைகாரர்களின் அச்சுறுத்தலான நடிப்பு, தம்பி லூக்கின் அச்சப்படும் நடிப்பு என அனைவரின் நடிப்பும் தேவையான அளவுக்கு இடம்பெற்றிருந்தது. 

தி ஸ்ட்ரேஞ்சர்ஸ் ப்ரே அட் நைட்

படத்தின் மற்றொரு பலம், ஏட்ரியன் ஜான்ஸ்டனுடைய இசை. அதிக வசனங்கள் இல்லை என்றாலும் 'த்ரில்லர்' ரக இசையின் மூலம் பார்வையாளர்களை அதிரடித்துள்ளார். அதேபோல் ரையான் சாமுலின் ஒளிப்பதிவும் கவனிக்க வைத்திருக்கிறது. முக்கியமாக நீச்சல் குளத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சியில் அதிகமாகவே மெனக்கட்டிருக்கிறார், ஒளிப்பதிவாளர். கதை ஆரம்பிக்கும்வரை, படம் ஸ்லோமோஷனில் நகரும் எஃபெக்ட் கொடுக்கிறது. பிறகு, கதையை வேறு எப்படிக் கடத்துவது எனத் தெரியாமல் சுற்றலில் விடுகிறது, திரைக்கதை. வாய்ப்பு கிடைத்தும் தன் குடும்பத்தைக் கொல்ல முயற்சிக்கும் கொலைகாரர்களை, லூக் கொல்லாமல் போனதற்கு, கதையை இழுத்துவிடுவதற்கான முயற்சியாகத் தெரிந்தது. ஆங்காங்கே இடம்பெற்ற சண்டைக் காட்சிகளை இன்னும் அதிக இடத்தில் வைத்திருந்தால், படம் இன்னும் சூடு பிடித்திருக்கும். 

அடுத்த பாகத்தை இயக்கப்போவது இதே இயக்குநராக இருந்தாலும் சரி, வேறு இயக்குநராக இருந்தாலும் சரி... தவறவிட்ட சில விஷயங்களைக் கருத்தில் கொண்டு ஸ்கெட்ச் போட்டால், `தி ஸ்ட்ரேஞ்சர்ஸ்' இன்னும் அதிகமாக அச்சுறுத்துவார்கள்.

 

 

`கிராக் பார்ட்டி' பட விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!