வெளியிடப்பட்ட நேரம்: 20:16 (26/03/2018)

கடைசி தொடர்பு:20:16 (26/03/2018)

நேரடியாக நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸான முதல் இந்தியப் படம்..! - ‘Love Per Square Foot’ படம் எப்படி?

மும்பை போன்ற பெருநகரங்களில் பல மாடிகள் கட்டப்பட்டிருக்கும் அபார்ட்மென்ட்களில் வீடு வாங்க வேண்டும் என்பது பலரின் கனவு. சொந்த வீடு வாங்கி, அதில் குடியேறுவதற்காக தன் வாழ்க்கை முழுவதையும் உழைத்துக் கொண்டே இருப்பவர்களை நாம் தினமும் கடந்துகொண்டுதான் இருக்கிறோம். பெரும் இடநெருக்கடியைக் கொண்ட மும்பை நகரத்தில் வீடு வாங்குவதற்காகப் போலியாக திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கும் இருவரைப் பற்றிய கதை தான் `லவ் பெர் ஸ்கொயர் ஃபூட்’ (Love Per Square Foot).

Love Per Square Foot

நெட்ஃப்ளிக்ஸில் நேரடியாக ரிலீஸாகியிருக்கும் முதல் இந்தியப் படமே `லவ் பெர் ஸ்கொயர் ஃபூட்.’ விக்கி கெளஷல், அங்கிரா தர், ரத்னா பதக், சுப்ரியா பதக், ரகுபிர் யாதவ் ஆகியோர் நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்தை ஆனந்த திவாரி இயக்கியுள்ளார்.

மும்பையில் இரயில்வே குவார்ட்டர்ஸில் குடும்பத்துடன் வாழ்கிறான் சஞ்சய் (விக்கி கெளஷல்). சஞ்சயின் தந்தை இன்னும் சில நாள்களில் ஓய்வுபெறப்போகிறார். சிறுவயது முதலே பல இரயில்வே குவார்ட்டர்ஸ்களில் வாழ்ந்து வந்த சஞ்சய்க்கு ஒரே ஒரு லட்சியம் இருக்கிறது. அது, மும்பையில் சொந்த வீடு வாங்குவது. சஞ்சய் வேலைபார்க்கும் ஐ.டி நிறுவனத்தில், தனக்கு பாஸ் ஆக இருக்கும் ராஷியுடன் தொடர்பு வைத்திருக்கிறான். ராஷி ஏற்கெனவே திருமணமானவள்.

இடிந்துபோகும் நிலையில் இருக்கும் வீடு ஒன்றில் தன் தாயுடன் வாழ்கிறாள் கரீனா (அங்கிரா தர்). அவளது காதலனின் கட்டுப்பாட்டில் வாழ விரும்பாமல், தனக்கென்று சொந்தமாக இடம் ஒன்று வேண்டும் என்று கனவு காண்கிறாள். அப்போது அந்த அறிவிப்பு வருகிறது. புதிதாக திருமணமானவர்களுக்கு லாட்டரி முறையில் வீடு தரப்படும் என்ற அந்த அறிவிப்பு இவர்கள் இருவரையும் இணைக்கிறது. சொந்த வீட்டுக்காக கணவன் மனைவியாக நடிக்க ஒப்புக்கொள்ளும் இருவரும் நெருங்கிப் பழகுகின்றனர். அவர்களது உறவு என்ன ஆனது, இருவரும் சொந்த வீடு வாங்கினார்களா என்பது மீதிக்கதை.

லவ் பெர் ஸ்கொயர் ஃபூட்

சஞ்சய் சதுர்வேதியாக நடித்திருக்கிறார் விக்கி கெளஷல். ஏற்கெனவே அனுராக் காஷ்யப் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து பாலிவுட்டை மிரட்டியவர். வெப் சீரியஸ்களிலும், விளம்பரப்படங்களிலும் நடித்த அங்கிரா தர் கரீனாவாக நடித்துள்ளார். பாலிவுட் சினிமாவின் பழம்பெரும் நடிகைகளான சகோதரிகள் ரத்னா பதக், சுப்ரியா பதக் இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

பெருநகரங்களில் மனிதர்களுக்கான வீடு என்பது எவ்வளவு அவசியமானது என்பதை `லவ் பெர் ஸ்கொயர் ஃபூட்’ பேச முயற்சி செய்கிறது. பெருநகரங்களின் சாலையோரங்களில் வாழும் மனிதர்கள் தலைக்கு மேல் கூரை வேண்டும் என்று மட்டும்தான் யோசிப்பார்கள். `லவ் பெர் ஸ்கொயர் ஃபூட்’ நுகர்வு கலாசாரத்தால் பாதிக்கப்பட்ட இன்றைய தலைமுறையினரின் பிரதிநிதிகளாக இருப்பவர்களின் கதையைப் பிரதிபலிக்கின்றது. இயக்குநர் ஆனந்த் திவாரி கதையை இந்த மையத்தில் வைத்திருக்கிறார். எனினும் திரைக்கதை பல பாதைகள் மாறி மாறி, மீண்டும் அரதப் பழசான பாலிவுட் Rom-Com வகையிலேயே முடிந்துவிடுகிறது.

அதுமட்டுமல்லாமல், பெருநகரங்களில் காதலர்கள் படும் துன்பத்தையும் இந்தத் திரைப்படத்தில் காட்டுகிறார்கள். கூட்டமாக இருக்கும் ரயிலிலும், ஆட்டோக்களிலும், காவல்துறையினரிடம் சிக்காமலும் காதலர்கள் ஒரு முத்தத்தைப் பகிர்ந்து கொள்வது எவ்வளவு சிரமம் என்பதை போகிற போக்கில் காட்டிவிட்டுச் செல்கிறது இந்தத் திரைப்படம்.

லவ் பெர் ஸ்கொயர் ஃபூட்

நெட்ஃப்ளிக்ஸ் இந்திய இயக்குநர்களுக்குக் கிடைத்திருக்கும் வரம். சென்சார், தயாரிப்பாளர்களின் அழுத்தம், திரையரங்குகளுக்கான காத்திருப்பு, பார்வையாளர்களை கவர வேண்டிய சமரசம் முதலான அனைத்துப் பிரச்னைகளையும் இந்திய இயக்குநர்களுக்கு உடைத்துத் தந்திருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். ஆனால், அதிலும் வழக்கமான பாலிவுட் கமெர்ஷியல் திரைப்படங்களைப் போலவே இந்தத் திரைப்படமும் வெளிவந்திருப்பது மிகப்பெரிய ஏமாற்றம். 

`வீடு என்பது வெறும் கட்டடம் அல்ல; அது அங்கு வாழும் மனிதர்களால் நிரப்பப்பட்டது’ என்பதை நமக்கு உணர்த்த இரண்டு மணி நேரம் பாடுபடுகிறது `லவ் பெர் ஸ்கொயர் ஃபூட்’. நல்ல நடிகர்களையும், அருமையான கதைக்களத்தையும் மட்டுமே நம்பாமல், திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால், நெட்ஃபிளிக்ஸில் ட்ரெண்ட் ஆகியிருக்கும் `லவ் பெர் ஸ்கொயர் ஃபூட்’ .