``நிதின் 25, மேகா ஆகாஷ், த்ரிவிக்ரம் கதை, பாட்டியின் தியரி..!" - `சல் மோஹன ரங்கா' படம் எப்படி?

சிறு வயதில் காதலித்தப் பெண்ணை அமெரிக்காவரை தேடிச் செல்லும் இளைஞனின் வாழ்க்கையில் விதி எப்படி விளையாடுகிறது என்ற கதையை காமெடி கலந்து சொல்லும் படம், சல் மோஹன ரங்கா #ChalMohanRanga

``நிதின் 25, மேகா ஆகாஷ், த்ரிவிக்ரம் கதை, பாட்டியின் தியரி..!

சிறு வயதில் காதலித்தப் பெண்ணை அமெரிக்காவரை தேடிச் செல்லும் இளைஞனின் வாழ்க்கையில் விதி எப்படி விளையாடுகிறது என்ற கதையை காமெடி கலந்து சொல்லும் படம், சல் மோஹன ரங்கா #ChalMohanRanga

ஹைதராபாத்தில் வாழும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் `எம் ஆர்’ என்னும் மோகன் ரங்கா(நிதின்). சிறு வயதில் தனக்குப் பிடித்த பெண் அமெரிக்கா சென்றதால் அவளைப் பார்க்க அங்கு செல்ல வேண்டும் என்பது அவனின் கனவு. பத்துப் பதினைந்து வருடங்களில் அமெரிக்கா மட்டுமே அவன் நினைவில் ஒட்டிக்கொள்ள, படாத பாடுபட்டும்  விசா கிடைக்காத நிலை.

அந்தச் சூழலை சமாளித்து மோகன் ரங்கா அமெரிக்கா செல்கிறான். மோகனின் அப்பா (நரேஷ்), அம்மா(பிரகதி) இவனுக்கு உதவாத நிலையில், அமெரிக்காவில் யதேச்சையாக மேகா சுப்ரமணியத்தைச் (மேகா ஆகாஷ்) சந்திக்கிறான். அமெரிக்க நண்பன் விலாஸ் (மது நந்தன்)  மூலமாக எச்1பி விசா வாங்க ரமேஷை (ராவ் ரமேஷ்) சந்திக்கச் செல்லும்போது மேகாவும் வருகிறாள்.  மோகன் ரங்காவுக்கு அமெரிக்க விசாவும் வேலையும் கிடைத்ததா, மேகா யார்... என்பதை இரண்டு மணி நேரப் படமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணா சைதன்யா.


   சல் மோஹன ரங்கா

வழக்கமான காதல் படங்களில் சொல்லப்படும் தற்செயல் நிகழ்வை, ஓசியில் கிடைத்த இன்டர்நெட் மாதிரி கொஞ்சம் அதிமாகவே உபயோகித்து இருக்கிறார் கதாசிரியர் திரிவிக்ரம். மழை, குளிர், இலையுதிர், வெயில் எனப் பல காலங்களையும் நாய்க்குட்டி, புத்தகம், ஒரே விஷயம் இரண்டு முறை நடந்தால் மூணாவது முறையும் அது மீண்டும் நடக்கும் என்று பாட்டி (ரோஹினி ஹட்டங்கடி) சொல்லும் ஆருடத்தை வைத்து படத்தை நகர்த்தியிருக்கிறார். அதனால் அடுத்தடுத்த காட்சிகள் என்னென்ன என்பதை எளிதில் யூகிக்க முடிகிறது.

படத்தில் அடிக்கடி காட்டப்படும் `எவரிதிங் இஸ் ய சைன்’ புத்தகத்தைப் பார்க்கும்போது எல்லாம் ஏதோ புதிதாக நடக்கப்போகிறது என்ற உணர்வு எழுகிறது. இருப்பினும் அந்த உணர்வை அடுத்தடுத்து வரும் சாதாரணக் காட்சிகளைக்கொண்டே அடித்துத் துவைத்து விடுகிறார்கள். இரண்டாம் பாதியில் ராவ் ரமேஷ், மனநல மருத்துவர் நராசீனு செய்யும் காமெடி கலாட்டாக்களே படத்தைக் காப்பாற்றும்  காட்சிகள். 

சல் மோஹன ரங்கா


படத்தின் ஹீரோ நிதினுக்கு இது 25-வது படம். அவருக்கு நன்கு பரிட்சையமான டெம்ப்ளேட்டில் நடித்து இருக்கிறார். ஆனால், இவரிடம் இந்தப் படத்துக்கான ஏதோ ஒன்று குறைகிறது. மேகா ஆகாஷ்  தெலுங்கில் நடிக்கும் இரண்டாவது படம். நம்ம ஊர் பொண்ணு. வேற்று மொழிப் படங்களில் நடிக்கும் கதாநாயகிகளுக்கே உள்ள லிப் சிங்க் பிரச்னை மேகாவுக்கும் இருக்கிறது. மற்றபடி `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் வரை காத்திருக்கலாம். `விக்ரம்’ படத்தில் வந்த லிஸி, மேகாவின் அம்மாவாக நடித்திருக்கிறார். அவருடன் சேர்த்து நடித்திருக்கும் பலருக்கு, பெரிய முக்கியத்துவம் இல்லை. 

மேகா ஆகாஷ்

படத்தை நகர்த்தவும்  நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் உதவுவது ஆங்காங்கே வரும் நகைச்சுவை காட்சிகள்தாம். ஆனாலும் இரண்டு மணிநேரப் படத்தை பலமணிநேரம் பார்ப்பது போன்ற ஓர் உணர்வு. படத்தொகுப்பாளர் எஸ்.ஆர்.சேகர் இதற்கு ஏதாவது செய்து இருக்கலாம். தமனின் இசையில் பாடல்கள் ஹிட் ரகம். முக்கியமாக இவரது முந்தைய காதல் படங்களின் இசை இதில் இல்லை என்பது ஆறுதல். நம்ம ஊர் ஹீரோ நட்டிதான் படத்தின் ஒளிப்பதிவாளர். அமெரிக்கா, ஆந்திரா, ஊட்டி என்று லொகேஷன்களுக்கு ஏற்றார்போல் கலர் டோனை மாற்றி கலர்ஃபுல் சேர்த்திருக்கிறார். 

பெரிய இயக்குநர் திரிவிக்ரமின் கதை, டாப் ஸ்டார் பவன் கல்யாண் தயாரிப்பு... என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. ஆனால்  `சல் மோஹன ரங்கா’ அந்த எதிர்பார்ப்புக்கு  ஈடுகொடுக்கத் தவறியிருக்கிறது. ஆனாலும் ஸ்ட்ரைக், கோடை விடுமுறை... என்று இந்த வார இறுதியில் ரிலாக்ஸ் செய்துகொள்ள தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு `சல் மோஹன ரங்கா’ கை கொடுக்கலாம். 

இயக்குநருக்கு நிறைய கேள்விகள் உள்ளன. ஆனால், ஒருசோறு பதமாக இந்தக் கேள்வியை வைக்கிறேன். `நாயகன் பத்து வயதில் வளர்த்த `ஷி ஸூ’ வகை நாய்க்குட்டி 15 வருடங்கள் உயிர் வாழுமா?’
 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!