Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

''விக்ரம் பிரபு... உங்க மேல அக்கறையோட ஒரு அட்வைஸ்!’’ - 'பக்கா’ விமர்சனம்

ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல் கஷ்டப்பட்டார்கள். பல நூறு கோடி ரூபாய் முதலீடு அந்தரத்தில் தொங்கியது. சொன்ன தேதிக்கு ரிலீஸ் செய்யமுடியாமல் படங்கள் முடங்கின. அரசுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் க்யூப் போன்ற அமைப்புகளுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. இத்தனையையும் கடந்து சினிமா ஸ்ட்ரைக் முடிவுக்கு  வந்தது. ரீ-என்ட்ரி நல்லதுதான். ஆனால், 'பக்கா' போன்ற படத்தோடு கோலிவுட் திரும்ப ரீ-என்ட்ரி ஆகியிருக்க வேண்டாம்.

பக்கா

விக்ரம் பிரபு ஊர் ஊராகச் சென்று திருவிழாவில் பொம்மை விற்கும் 'பொம்மைக்கடை' பாண்டி. ஃப்ரேமில் தனியாக நின்றால் ஸ்பேஸ் அதிகமாக இருக்குமே எனக் கூடவே சூரியையும் நிற்க வைத்திருக்கிறார்கள். நிற்க வைத்த பாவத்துக்கு அவரும் ஏதோ செய்துகொண்டே இருக்கிறார். அவை எல்லாம் இயக்குநரின் ஸ்க்ரிப்ட் பேப்பரில் 'காமெடி சீன்' என இருக்கும் போல. அவரும் விக்ரம் பிரபுவும் செய்வதைப் பார்த்து ஊர் நாட்டாமை மகள் பிந்து மாதவி ஆசை கொள்கிறார். நியாயமாக சூரி - விக்ரம்பிரபு இணை செய்வதைப் பார்த்தால் கடுப்புதான் வரும். காதல் ஹவ் சார்?

விக்ரம்பிரபுவும் பிந்து மாதவியும் சேர்ந்து என்னமோ செய்கிறார்கள். இயக்குநருக்கு போன் செய்து கேட்டால் 'அதெல்லாம் ரொமான்ஸ் ப்ரோ' எனச் சொல்வாராக இருக்கும். இது நாட்டாமைக்குத் தெரிந்து பிந்துவை அடித்து வெளுக்கிறார். சினம் கொள்ளும் பிந்து வீட்டைவிட்டு ஓடிவிடுகிறார். அவரைத் தேடி விக்ரம் பிரபு திருவிழா திருவிழாவாகச் சுற்ற, விக்ரம் பிரபுவைத் தேடி பிந்து கோயில் கோயிலாகச் சுற்ற, பார்க்கும் நமக்குக் கிருட்டு கிருட்டென தலை சுற்ற... ஹலோ எங்கே ஓடுறீங்க? இன்னும் இருக்கு! நாங்க இரண்டரை மணிநேரம் படம் பார்த்தோம்ல! இரண்டு நிமிஷ விமர்சனமாவது படிங்க பாஸ் ப்ளீஸ்!

பக்கா

மறுபக்கம் தோனி குமார் என இன்னொரு விக்ரம் பிரபு. இயக்குநரிடம் கேட்.... அதேதான் - 'டபுள் ஆக்‌ஷன் மாஸ் என்டர்டெயினர்'! அவருக்கு ஜோடி நிக்கி கல்ராணி. இருவரும் சேர்ந்து காமெடி என்ற பெயரில் கொலையும் ரொமான்ஸ் என்ற பெயரில் கொடூரக் கொலையும் செய்கிறார்கள். இந்த இரண்டு ஜோடிகளும் என்னவாயின? சேர்ந்தார்களா இல்லையா என்பதை சில திடுக் ட்விஸ்ட்களோடு சொல்வார் எனப் பார்த்தால், 'கதையே இல்ல, இதுல ட்விஸ்ட் வேறயா?' என 'வெவ்வெவ்வே' காட்டியபடி போகிறார் இயக்குநர்.

விக்ரம் பிரபு ப்ரோ...! 'கும்கி', அரிமாநம்பி' போன்ற படங்களை தந்ததற்காக ஒரு அட்வைஸ்! கதை கேட்குறதுல நிறைய கவனம் செலுத்துங்க ப்ரோ! ஒன்றுமே இல்லாத கதையில் விக்ரம் பிரபுவுக்கும் வேலை இல்லை. கால்ஷீட் கொடுத்த பாவத்திற்கு நடித்திருப்பார் போல! பிந்து மாதவி உதட்டசைவுக்கும் வாய்ஸ் ஓவருக்கும் ஒரு சீன் கூட சிங்க் ஆகவில்லை. அவரின் தோழிகள் அனைவரும் பியூட்டி பார்லர் கேட்லாக்கில் இருப்பதைப் போல ஓவர் மேக்கப்பில் படம் முழுக்க வருகிறார்கள். நிக்கி கல்ராணியும் அப்படியே. 

பக்கா

முதலில் சூரி வருகிறார், அதன்பின் சதீஷ் வருகிறார், அவரைத் தொடர்ந்து ரவிமரியா, அவருக்குப் பின் ஆனந்தராஜ், கடைசியாக சிங்கம்புலி வருகிறார். ஆனால், காமெடி மட்டும் கடைசி வரை வருவேனா என்கிறது. 'பொம்மை வித்து பொம்மை வித்து உன் மனசும் பொம்மை ஆயிடுச்சுடா!', 'வாட்ஸ் அப்ல இருக்கியா? - இல்ல வாழைத்தோப்புல இருக்கேன்', 'நான் பிராமின் இல்லடா, சுறாமீன்' - இதெல்லாம் வசனங்கள். அப்படித்தானே டைரக்டர் சார்? சரிங்க... சரிங்க!

இசை சத்யா. பாவம் கதையே இல்லாத படத்தில் அவரென்ன செய்வார்? ஏதோ செய்திருக்கிறார். ஒரு சீன் முடிந்தவுடன் இருட்டாக்கி கட் செய்து அடுத்த சீன் போவதெல்லாம் முப்பது ஆண்டுகள் பழைய டெக்னிக். எடிட்டர் சசிக்குமார் அதைத்தான் செய்திருக்கிறார். ஒளிப்பதிவுக்கும் பெரிதாக வேலையே இல்லை. அரதப்பழசான திரைக்கதை, எந்த உணர்ச்சியையும் கடத்தாத வசனங்கள் - இவையெல்லாம் சேர்ந்து அநியாயத்துக்குச் செயற்கைத்தனத்தை கொடுக்கிறது. இதனாலேயே 'ப்ளீஸ் சார்! சுகர், பி.பி எல்லாம் இருக்கு' எனத் தப்பிக்கப் பார்க்கிறார்கள் தியேட்டரில் இருப்பவர்கள். மேலும், சோதனையாகக் கடைசியாக ஒரு போலீஸ் வேறு வருகிறார். சிரிப்பு போலீஸல்ல, சீரியஸ் போலீஸாம்! சண்டை போடுகிறேன் என 'ஆட்றா ராமா ஆட்றா ராமா' வித்தை காட்டுகிறார். 90-ஸ் கிட்ஸான நமக்கோ 'டொய்ங் டொய்ங்' எனத் தவ்வும் மேரியோ வீடியோகேம்தான் நினைவுக்கு வருகிறது.

பக்கா

இந்தப் படத்திலிருந்து கற்றுக்கொள்ள ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. வாய்ப்பு என்பது அவ்வளவு எளிதாக அனைவருக்கும் அமைந்து விடாது. கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைப்பது ரொம்பக் கஷ்டம் பாஸ்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement