Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

``பாக்கெட் நாவல் ரசிகர்களுக்கு, ஒரு சுவாரஸ்ய சினிமா!" - `இரவுக்கு ஆயிரம் கண்கள்' விமர்சனம்

பெருமழை பெய்யும் இரவில் ஒரு கொலை நடக்கிறது, அந்தக் கொலையை செய்தது யார், கொலைக்கான காரணம் என்ன எனத் தமிழ் ரசிகர்களுக்கு மற்றுமொரு `ஹூ டன் இட்?' கதையைச் சொல்லியிருக்கிறது, `இரவுக்கு ஆயிரம் கண்கள்'.

இரவுக்கு ஆயிரம் கண்கள்

ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத மூன்று பேர், ஒரு பிளாக்மெயில் கும்பலால் மிரட்டப்படுகிறார்கள். மூவரும் அந்த பிளாக்மெயில் கும்பலின் தலைவனை பதிலுக்குப் பழிவாங்க அவன் வீட்டுக்கு வெவ்வேறு நேரத்தில் சென்று திரும்புகிறார்கள். அந்த வீட்டில் ஒரு பெண் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறாள். அது கொலையா, தற்கொலையா? கொலை என்றால், கொலையாளி யார், அந்த மூவரில் ஒருவரா, அல்லது வேறொரு நபரா? எதற்காக அவள் கொலை செய்யப்பட்டாள்... போன்ற பல கேள்விகளுக்குச் சில திடீர், பகீர் திருப்பங்களோடு பதில் சொல்கிறது, படம். 

அருள்நிதி

கதையின் நாயகனாக அருள்நிதி, எல்லா த்ரில்லர் பட ஹீரோக்களைப்போல இவரும் இறுக்கமான முகத்துடனேயே வலம் வருகிறார். கோபம், குழப்பம், விரக்தி என எல்லா உணர்வுகளையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். மஹிமா நம்பியார், அஜ்மல், சுஜா வரூணி, வித்யா பிரதீப், சாயா சிங், ஆனந்தராஜ், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், ஆடுகளம் முருகதாஸ், அச்யுதா குமார்... எனப் படத்தில் நிறைய நடிகர், நடிகைகள். அத்தனை பிரச்னையிலும் சிரித்த முகத்துடனேயே உலவும் மஹிமா நம்பியார், கொலை செய்யச் சென்ற இடத்தில் காமெடி செய்யும் ஆனந்தராஜ் எனச் சில கதாபாத்திர வடிவமைப்பிலும், அவர்களது நடிப்பிலும் இருக்கும் செயற்கைத் தனத்தைத் தவிர்த்திருக்கலாம். மற்றபடி, எல்லோருமே அவரவருக்குக் கொடுக்கபட்ட கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். ஜான் விஜய்க்கு இந்தப் படத்திலும் வழக்கமான `ஜான் விஜய்' கதாபாத்திரம், அலுப்பு தட்டுகிறது பாஸ்!

மஹிமா நம்பியார்

படம் பார்த்து முடித்தபின், ஒரு பாக்கெட் க்ரைம் நாவல் படித்த அனுபவம் கிடைக்கிறது. வசந்த், கணேஷ், பரத் எனப் படத்தில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களில்கூட பாக்கெட் க்ரைம் நாவல்களின் தாக்கத்தை உணரமுடிகிறது. கதையில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மற்ற கதாபாத்திரங்களோடு ஏதோவொரு `லிங்க்' இருப்பதாக, ஏதோவொரு சூழலில் சந்திப்பதாகவே திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். அனைத்துமே தற்செயல்களாக இருந்தாலும், அதில் ஒரு நியாயம் வேண்டாமா? படத்தைப் பார்க்கும்போது, கதையின் களமான சென்னையில் மொத்தமே நான்கு தெருவும், அதில் நாற்பது பேர் மட்டுமே வாழ்வதுபோல் இருக்கிறது. இடியாப்பம்போல் இருந்திருக்க வேண்டிய திரைக்கதை, தற்செயல்கள் அதிகமானதால் இட்லி ஆகிவிட்டது. ஆனாலும், விறுவிறுவென வேகமாய் நகரும் திரைக்கதையும் பதில் தெரியாத கேள்விகளும் நம்மைச் சீட்டோடு கட்டிப்போடுகின்றன.

சமூக வலைதளங்களால் ஏற்படும் சில சிக்கல்களைப் படத்தில் பேச முயற்சி செய்திருக்கிறார்கள், அதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவே பேசியிருக்கலாம். மனிதர்களின் ஆசைதான் அவர்களை அழிவுக்கு இட்டுச்செல்கிறது என்பதை அடிப்படை நாதமாகப் பேசவந்திருக்கும் இயக்குநர், அதைப் படத்தில் ஆங்காங்கே புத்தர் சிலைகளோடு தொடர்புபடுத்திக் குறியீடாய்க் காட்டியிருப்பது அற்புதம்! வசனங்களை இன்னும் சுருக்கி, யதார்த்தம் கூட்டியிருக்கலாம். முக்கியமாக, தமிழ் சினிமா இயக்குநர்கள் ஒரு வீடியோவை ஸ்டோர் செய்ய, இன்னும் பென் டிரைவையே நம்பிக் கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது. 

அஜ்மல்

படத்தின் ஒருசில காட்சிகளிலும் போஸ்டர்களிலும் இருக்கும் `ரிச்னெஸ்'ஸைப் படம் முழுக்க தக்கவைக்க தவறியிருக்கிறார், ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங். சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசை பல இடங்களில் ஓவர் டோஸ். சஸ்பென்ஸ் எனும் மேட்டரைக் கூட்ட ஓவர் டியூட்டி பார்த்திருக்கிறார், படத்தொகுப்பாளர் சான் லோகேஷ். `இரவுக்கு ஆயிரம் கண்கள்' போல ஆயிரம் `பாக்கெட் நாவல்' திரைக்கதைகள் தமிழ்சினிமா பார்த்திருக்கிறது, முடிவில் இருக்கும் ஒற்றை சுவாரஸ்யத்தை அறிய கொஞ்சம் பொறுமையும் வேணும் பாஸ்.

'இரும்புத்திரை' படத்தின் விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement