யோகி பாபு, இதை நீங்கள் உணர்ந்தால் `செம'..! - `செம' விமர்சனம்

யோகி பாபு, இதை நீங்கள் உணர்ந்தால் `செம'..! - `செம' விமர்சனம்

நாயகனுக்கு மூன்று மாதத்தில் திருமணம் நடக்கவில்லையெனில், அடுத்த ஆறு வருடத்திற்கு நடக்காது என கட்டம் பயமுறுத்துகிறது. அந்த மூன்று மாதத்திற்குள் நாயகனுக்கு திருமணம் நடந்ததா, இல்லையா என அரை வரியில் எழுதிவிடக்கூடிய இந்தக் கதைதான் 'செம' படத்தின் ஒருவரிக் கதை.

செம

மூன்று மாதத்திற்குள் திருமணம் நடக்காவிட்டால், அடுத்த ஆறு ஆண்டிற்கு நாயகனுக்கு திருமணம் நடக்காது என கொளுத்திப் போடுகிறார் ஜோதிடர். அதனால், மகனுக்கு விரைவில் திருமணம் முடிக்க பெண் பார்க்க கிளம்புகிறார் நாயகனின் அம்மா. எந்த வரனும் கைகூடாமல் போக 93வது முறையாக தற்கொலை முயற்சி செய்கிறார். இறுதியாக, நாயகி வரன் கைகூட,  அனைவரும் செம ஹேப்பி. ஆனால், அதிலும் ஒரு டவிஸ்ட்.  அது என்ன டவிஸ்ட், நாயகனுக்கு திருமணம் முடிந்ததா, இல்லையா என்பதை, லாஜிக் எனும் சமாச்சாரத்தை மொத்தமாய் மூட்டைக் கட்டி பரண் மேலே தூக்கி எறிந்துவிட்டு திரைக்கதை அமைத்திருகிறார்கள்.

நாயகன் 'குழந்தை'யாக ஜி.வி.பிரகாஷ். பார்க்கவும் குழந்தையாக இருக்கிறார். நடிப்பில் இன்னும் தவழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். நாயகி 'மகிழினி'யாக அர்த்தனா பினு. அழகாக இருக்கிறார். உணர்ச்சிகளை உள்வாங்கி அழகாகவும் நடித்திருக்கிறார். ஏதிர்பாராத நேரங்களில் யோகி பாபு தூவும் கவுன்டர்கள், நிறைய இடங்களில் குபீர். வயது மூத்தவர்களை 'டா' போட்டு அழைப்பது மட்டுமே காமெடியில்லை என்பதை உணர்ந்தால் செம. ஜி.வியின் அம்மாவாக சுஜாதா நல்ல தேர்வு. பொருத்தமான பாத்திரம் அவருக்கு. மன்சூர் அலிகான், கோவை சரளா ஜோடி செய்யும் காமெடி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. படத்தில், மன்சூர் அலிகான் கதாபாத்திர பெயருக்கான பெயர்காரணம் செமையோ செம.  

செம

சிம்பிளான கதை, அதை ஜாலியாக சொல்ல முயற்சித்து பாதி கிணறு தாண்டிவிடடார் இயக்குனர் வள்ளிகாந்த். கை கொடுங்கள் இயக்குநரே... சரி, வேணாம். பவர் போயிடும்! வெறும் வசனங்களின் வழி மட்டுமே அல்லாது, காட்சிகளையும் சந்தர்ப்பங்களையும் பல இடங்களில் நகைச்சுவையாய் அமைத்திருப்பது படத்தின் பெரும் பலம்.  

ஒரு காட்சியில் 'பன்னி மூஞ்சி வாயா' என ஜி.வி. ஒருவரை திட்ட, ' என்ன வெச்சிட்டு அப்படி சொல்லாதப்பா' என வருந்துவார் யோகிபாபு. ஆனால், படத்தில் வெரைட்டி வெரைட்டியாய் அத்தனை மூஞ்சிகளை திட்ட பயன்படுத்தியிருக்கிறார்கள். ஓவர்டோஸ் உருவகேலி பாஸ்! படத்தில் அத்தனை லாஜிக் மீறல்கள். ஒரு உண்மை கதையை இத்தனை லாஜிக் மீறல்களோடா சொல்ல வேண்டும். ஆஸ்பத்திரியில் சிசேரியன் பற்றி பேசும் காட்சிகளெல்லாம் அபத்தம்.

செம

விவேக் ஆனந்தின் ஒளிப்பதிவு இரு துருவங்களில் நிற்கிறது. சில இடங்களில் அடடகாசமான லைட்டிங் மற்றும் கோணங்கள். சில இடங்களில் அமெச்சூரான கோணங்கள். ஜி.வியின் பின்னணி இசை இன்பமாய் இருக்குத்தய்யா. ஆல்பம் ஆல்ரெடி ஹிட்! 'அஷ்டமி, நவமி கெட்ட நாள்தான். ஆனா, அன்னைக்கும் நல்ல நேரம்னு ஒன்னு இருக்குல்ல. ' வசனங்களால் கவனிக்க வைக்கிறார் பாண்டிராஜ். கவனித்தோம்! 

'செம' - செமத்தியாக இருந்திருக்க வேண்டிய படம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!