வெளியிடப்பட்ட நேரம்: 12:04 (27/05/2018)

கடைசி தொடர்பு:11:05 (28/05/2018)

மதுரை சம்பந்தப்பட்ட படம்னாலே இப்படித்தான் எடுக்கணுமா இயக்குநரே..? - `காலக்கூத்து' விமர்சனம்

மதுரை சம்பந்தப்பட்ட படம்னாலே இப்படித்தான் எடுக்கணுமா இயக்குநரே..? - `காலக்கூத்து' விமர்சனம்

ஒரே வருடம் ஒரே நாளில் பிறந்த வெவ்வேறு குணாதிசயங்கள் உள்ள இருவரின் கதைதான் இந்த 'காலக்கூத்து'.

தாய் தந்தையை இழந்த ஈஸ்வரன் (பிரசன்னா) தன் தாத்தாவால் அரசுப் பள்ளியில் சேர்க்கப்படுகிறான். எப்போதும் தனிமையில் விரக்தியுடன் இருக்கும் இவனுக்கு தனக்கு பிறந்தநாள் என்று ஹரி (கலையரசன்) மிட்டாய் கொடுக்கிறான். அதற்கும் அவனிடமிருந்து நோ ரியாக்‌ஷன் என்பதால் கோபமடைந்த ஹரி வார்த்தைகளை விட, இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது. இந்தச் சண்டை எப்படி சரியாகி இவர்களுக்குள் நட்பு மலர்கிறது? அந்த நட்பில் காலம் எப்படி விளையாடுகிறது என்பதே 'காலக்கூத்து' படத்தின் கதை. 

காலக்கூத்து

பள்ளியில் இருந்த அதே லந்தோடு வேலைக்கு செல்லாத இளைஞனாக மதுரையை வலம் வருகிறார் கலையரசன். தன் காதலி தன்ஷிகாவை பார்க்க எந்நேரமும் கல்லூரிக்கு முன்னிருக்கும்  டீக்கடையில் அலப்பறை செய்துகொண்டு சிகரெட் பிடிப்பதுதான் இவரது ஹாபி. இவருக்கு நேர்மாறாக ஆட்டோ மொபைல் வொர்க் ஷாப்பில் வேலை பார்த்து வரும் பிரசன்னாவை, மறைந்திருந்து சைட் அடிக்கும் ஸ்ருஷ்டி டாங்கே என கதை நகர்கிறது. ஸ்ருஷ்டி பிரசன்னா மீது வைத்திருக்கும் காதலை கலையரசன் சொல்ல, 'சின்ன வயசுல இருந்து எனக்குன்னு யார் இருந்தாலும் அவங்க இறந்துடுறாங்க. ஏன் இந்தப் புள்ள நல்லாயிருக்குறது பிடிக்கலையா?' என்று கேட்க, 'உனக்கு பிடிச்சுதுனா, சொல்லு என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்' என்கிறார் கலையரசன். மறுநாள், பயந்து பயந்து தன் காதலை நேரடியாக பிரசன்னாவிடம் சொல்லும் ஸ்ருஷ்டியிடம் 'பிடிச்சிருக்கு' என்று சட்டென ரிப்ளை செய்து இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர்.  இந்த இரண்டு காதல் ஜோடிகளுக்கும் என்ன மாதிரியான பிரச்னைகள் வருகிறது, அதை எப்படி எதிர்கொள்கிறார்கள்? இதற்கிடையில், கவுன்சிலர் மகனுக்கும் பிரசன்னாவுக்கு ஏற்படும் வாய்க்கால் தகராறு, இறுதியில் அவர்கள் தங்கள் காதலியை கரம் கோர்க்கிறார்களா இல்லையா என்பதே படத்தின் மீதி கதை. 

காலக்கூத்து

மண் வாசம் வீச வேண்டும் என்று நினைத்து மதுரை பேச்சு வழக்கை திணித்திருக்கிறார் இயக்குநர்  நாகராஜன். வசனங்களை கேட்கும்போது 'அதான் எல்லாரும் வந்துட்டாய்ங்கல்ல... அப்புறம் என்ன ஏஏஏ...னு இழுத்துட்டு இருக்க' என்ற 'மாயி' பட காமெடி வசனம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. மதுரை சம்பந்தப்பட்ட படம் என்றாலே இப்படித்தான் எடுக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. யாருக்கு என்ன நடந்தா நமக்கு என்ன, குடிப்பதிலும் வெட்டி பந்தாவிடுவதுமாக ஒரு கேரக்டர் படம் முழுக்க கலையரசனுடனே வருகிறது. ஸ்ருஷ்டியின் ரோல் எதற்கு என்றே தெரியவில்லை. இருந்தாலும், அவர் சின்ன சின்ன எக்ஸ்ப்ரஷனில் தன் பங்கை சரியாக செய்திருக்கிறார். பல இடங்களில் டிவி சீரியல் சாயலை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.வி. சங்கர். ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பாடல்களுக்காக மட்டும் பல நாடுகளுக்கு செல்லும் இயக்குநர்களுக்கிடையே ஒரு தெரு, ஒரு கோவில், பெட்ரூம் என ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு இடத்தில் மட்டுமெடுத்து தயாரிப்பாளருக்கு மிச்சபடுத்திக் கொடுக்கும்  இயக்குநரும் தமிழ் சினிமாவில் இருக்கிறார் என்பது நல்ல செய்திதான். ஆனால், அதற்கும் கொஞ்சம் மெனக்கெட்டு சுவாரஸ்யமாக எடுத்திருந்தால் கூடுதல் பாராட்டுகள் கிடைத்திருக்கும். படத்தின் இறுதியில் வரும் மெசேஜிற்கும் படத்திற்கும் சம்பந்தமே இல்லையே என நினைக்க வைக்கிறது.  பிரசன்னா, கலையரசன், தன்ஷிகா மூவரும் படத்தின் க்ளைமாக்ஸில் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார்கள். நல்ல நடிகர்களை வைத்து படமெடுத்த இயக்குநர், அவர்களுக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்கவில்லை என்பதுதான் வருத்தமான செய்தி. அடுத்த முறையாவது நடிகர்களுக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுங்கள் இயக்குநரே!

இந்தப் படத்தைப் பார்க்க வந்ததும் ஒரு வேளை 'காலக்கூத்து'தானோ ? 
 


டிரெண்டிங் @ விகடன்