வெளியிடப்பட்ட நேரம்: 10:23 (18/06/2018)

கடைசி தொடர்பு:10:23 (18/06/2018)

பவர்ஸ்டாரை முதலமைச்சராக நடிக்க வெச்சது குறியீடா ..! - ’கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ விமர்சனம்

பவர்ஸ்டாரை முதலமைச்சராக நடிக்க வெச்சது குறியீடா ..! - ’கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ விமர்சனம்

தன்னை ஏமாற்றிய தொழிலதிபரை பழிவாங்க வேண்டும் என நினைக்கும் தொழிலதிபர். இதனால் என்ன நடக்கிறது; யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே ’கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ படத்தின் ஒன்லைன் (அப்படின்னு நாமளே நினைச்சுக்க வேண்டியதுதான்).  

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா

தன்னிடம் வாங்கிய 25 கோடிக்கு பொய் கணக்கு காட்டி ஏமாற்றிய தொழிலதிபரை பழிவாங்க, அவரின் மனைவியையும் குழந்தையையும் கடத்த திட்டமிடுகிறார் பணத்தை இழந்த தொழிலதிபர். இந்தத் திட்டத்தை அரங்கேற்ற ஆர்.வி.உதயகுமார், ஆர்.சுந்தர்ராஜன், நெல்லை சிவா, வெங்கல் ராவ்வை கிளப்பிவிடுகிறார்கள். இந்த டுபாக்கூர் கேங்ஸ்டர் நால்வரும் பல குட்டிக்கரணம் அடித்தும் அவர்களால் இதை செய்ய முடியாததால், ‘பாடியில பவரு ப்ரைன்ல தவறு’ உள்ள நான்கு இளைஞர்களைப் பிடித்து, அவர்களுக்கு ட்ரைனிங் கொடுத்து அவர்களை தயார் செய்கிறார்கள். அதற்கு ஒரு பாடல் வைத்து பில்டப் கொடுத்திருப்பதில் இருந்தே கண்ணைக்கட்ட ஆரம்பிக்கிறது. இவர்கள் அவரின் மனைவியையும் குழந்தையையும் ஒரு வழியாக கடத்துகிறார்கள். அதன் பின் வரும் பிரச்னையை எப்படி சமாளிக்கிறார்கள்; இந்த குற்றவாளிகளை காவல்துறை அதிகாரி சின்ன சேலம் சிங்காரம் (பாக்யராஜ்) எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே மீதி படம். 

ஒரு படத்தில் எத்தனை ஜானர்களை ட்ரை பண்ண முடியுமோ அதை எல்லாம் டச் செய்திருக்கிறார் இயக்குநர் ரஜாக். ஆள்கடத்தல் - கேங்ஸ்டர் என ஆரம்பமாகும் படம், காமெடி, த்ரில்லர், ஹாரர், ட்ராவல் மூவி என பல தடங்களில் பயணிக்கிறது. ஆனால், எதிலுமே சுவாரஸ்யமே இல்லை என்பதை இயக்குநர் புரிந்துகொள்ள வேண்டும். 

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா

கால் ட்ராக்கிங்கிற்கும் கால் ஹேக்கிங்குக்கும் வித்தியாசம் தெரியாமல் காட்சியமைக்கப்பட்டு பார்ப்பவர்களை சுத்தலில் விடுவது; ’கால் கட்டானா கம்ம போட்டு ஒட்டு’ போன்ற கடுமையான காமெடி வசனங்களை படம் முழுக்க வைத்திருப்பது (இந்த காமெடிகளுக்குப் பதில் வாட்ஸ் அப் ஃபார்வேர்டுகளை வைத்திருந்தால்கூட ஆடியன்ஸ் சிரித்திருப்பார்கள்) என அடுத்தத்தளத்துக்குச் செல்லும் தமிழ் சினிமாவை, பின்னுக்கு இழுக்கும் படமாக இதை எடுத்திருக்கிறார்கள். 

படத்தின் பாடல்கள் அனைத்துமே எரிச்சலூட்டுகிறது. இந்தப் படத்தில் பேயை எதுக்கு வைத்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. பழங்குடி மக்களின் தலைவனாக வரும் மன்சூர் அலிகானும் அந்த இனத்து மக்களும் பேசும் மொழியிலே தெரிகிறது இயக்குநரின் அசால்ட். படத்தில் `சின்ன சேலம் சிங்காரம்’ என்பதைத் தவிர வேறு எந்த கதாபாத்திரத்தின் பெயரையுமே இயக்குநர் சொல்லவில்லை; இதுவும் படத்தில் முதலமைச்சராக பவர்ஸ்டாரை நடிக்க வெச்சதும் குறியீடா இயக்குநரே.

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா

காமெடி வசனங்கள்தான் கடுப்படிக்கிறது என்றால், ’தர்ஷூ…’ என்று தன் குழந்தையை கூப்பிடுவதை மட்டுமே ஒரு அம்மா கதாபாத்திரத்துக்கு வசனமாக வைத்திருக்கிறார்கள். எந்தப் படத்திலும் எதாவது ஒரு விஷயமாவது பார்ப்பவர்களுக்கு ஆறுதல் தரும். ஆனால், இந்த `கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ படத்தில் அப்படி எதுவும் இல்லாமல், நம் கவனம் முழுவதையும் பாப்கார்ன் பக்கமே திருப்பிவிடுகிறது. 

மன்சூர் அலிகான், பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜ் போன்ற ஏராளமான சீனியர் நடிகர்கள்; நடிகை இனியாவின் தங்கை, பல புதுமுக நடிகர்கள் என  பலரது கால்ஷீட்டை இந்தப் படம் மூலம் வீணடித்திருக்கிறார்கள்.

இந்த வாரம் வெளிவந்த விஜய் மில்டனின் கோலிசோடா -2, சல்மான் கான் நடித்த ரேஸ்-3  படத்தின் விமர்சனங்களைப் படிச்சுட்டீங்களா பாஸ்..!?


டிரெண்டிங் @ விகடன்