``விஜய் சேதுபதி அனுபவிச்சது நமக்குக் கிடைக்கலையே!" - `டிராஃபிக் ராமசாமி' விமர்சனம்

`டிராஃபிக் ராமசாமி' படத்தின் விமர்சனம்

``விஜய் சேதுபதி அனுபவிச்சது நமக்குக் கிடைக்கலையே!

எத்தனையோ சமூகப் பிரச்னைகளை எதிர்த்து நின்று போராடிய `ஒன் மேன் ஆர்மி' டிராஃபிக் ராமசாமியின் கதையே இந்த `டிராஃபிக்  ராமசாமி'. அவர் தொடர்ந்த பல பொதுநல வழக்குகளில் மீன்பாடி வண்டி வழக்கை மட்டும் படத்தின் கதையாக எடுத்துக்கொண்டு `பய'பிக் காட்டியிருக்கிறார்கள்.

டிராஃபிக் ராமசாமி

மனைவி, மகள், பேத்தி எனக் குடும்பத்தோடு வாழ்ந்து வரும் ராமசாமி, எப்படி `டிராஃபிக்' ராமசாமி ஆனார்? எனத் தொடங்குகிறது படம். தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என இல்லாமல், சமூகத்தில் நடக்கும் சின்னஞ்சிறு தவறுகளையும் தட்டிக்கேட்டு பொதுநல வழக்குகள் தொடுக்கிறார். அப்படி ஒருமுறை, மீன்பாடி வண்டி மோதி இளைஞர் ஒருவர் இறப்பதைப் பார்க்கும் அவர், அதன் பின்னால் நடந்தேறிய அநியாயத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவர ஒரு வழக்கு தொடுக்கிறார். வழக்கில் அவருக்குக் கிடைத்தது கிரீன் சிக்னலா, ரெட் சிக்னலா? அதற்காக உடளவிலும் மனதளவிலும் அவர் சந்தித்த கஷ்டங்கள் என்னென்ன என்பதே படம் சொல்லும் கதை.

தலைகீழாகத் தொங்கியபடி போலீஸிடம் அடிவாங்குவது, சண்டைக் காட்சிகளில் சேற்றில் விழுந்து புரள்வது, நிஜமாகவே கன்னத்தில் அறை வாங்குவதென ஆச்சர்யப்படவைக்கிறார், நடிகர் எஸ்.ஏ.சி. உடல்மொழியிலும், முகபாவனைகளிலும் மட்டும் ஏனோ பழைய எஸ்.ஏ.சி-யாகவே இருக்கிறார். வெள்ளைச் சட்டை, காக்கி பேன்ட், பாக்கெட் முழுக்க கேஸ் கட்டுகள், நெற்றியில் நாமம் என ரியல் டிராஃபிக் ராமசாமியின் தோற்றத்தில் நெற்றியில் நாமம் மட்டும் மிஸ்ஸிங்.

ராமசாமி மனைவியாக ரோகினி நடித்திருக்கிறார். நடிப்பில் குறையொன்றுமில்லை. வழக்கறிஞராக லிவிங்ஸ்டன். சில இடங்களில் காமெடி செய்து சிரிக்கவைப்பவர், பல இடங்களில் `இவர் காமெடிதான் செய்கிறாரா?' எனச் சிந்திக்க வைக்கிறார். ஆள் கடத்தல், கையை வெட்டுதல், கொலை செய்தலுக்கு ஜி.எஸ்.டியோடு விலைப்பட்டியல் போட்டுவைத்திருக்கும் ஆர்.கே.சுரேஷின் கதாபாத்திரத்தில் அத்தனை சினிமாத்தனம். கமிஷனராகக் குறைவான காட்சிகளில் வந்தாலும், நிறைவான நடிப்பைத் தந்திருக்கிறார், பிரகாஷ் ராஜ். எஸ்.ஏ.சி-யின் பேத்தியைத் தவிர, மற்ற குடும்ப உறுப்பினர்களை வெறும் அட்மாஸ்பியரைப் போலத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். `ஒன் மேன் ஆர்மி' புத்தகத்தைப் படிப்பவராக கேமியோ ரோலில் விஜய் சேதுபதி. ரவுடிகளிடமிருந்து எஸ்.ஏ.சி-யைக் காப்பாற்றுபவராக விஜய் ஆண்டனி. இரண்டு நிமிடங்கள் வருகிறார், மூன்று பேரைக் பொளக்கிறார்!  

டிராஃபிக் ராமசாமி

பலரும் ராமசாமியை ஜோக்கராக அவதானித்துவரும் நிலையில், அவரைப் பெருமைப்படுத்தும் வகையில் தனது முதல் படம் இருக்க வேண்டுமென நினைத்த இயக்குநர் விக்கிக்கு வாழ்த்துகள். என்ன, நினைத்ததை நிறைவாகச் செய்துமுடிக்கவில்லை அவர். ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கிறார்கள் என்றதும் எதிர்பார்ப்புகள் எகிறியிருந்த நிலையில், அவர் தொடர்ந்த ஒரேயொரு வழக்கை மட்டும் வைத்துப் படமெடுத்திருப்பது ஏமாற்றம்.

`பயம் இருக்கிறவங்க பப்ளிக் லைஃபுக்கு வரக் கூடாது', `இப்போ நீதி கிடைக்க காந்தியும் இல்லை; காமராஜரும் இல்லை; காலிப்பசங்கதான் இருக்காங்க', `court is the ultimate temple of justice' எனப் படத்தில் இருக்கும் சில வசனங்கள் ரொம்பவே ஷார்ப். மீதியெல்லாம் கொஞ்சம் சானை பிடித்திருக்கலாம். `பேசாம நீயும் இந்தியன் தாத்தா மாதிரி ஆகிடுங்க தாத்தா', `மாண்புமிகு டிராஃபிக் ராமசாமியின் பேத்தி பேசுறேன்' எனக் குழந்தையின் மழலைப் பேச்சு அழகு. ஆனால், சில இடங்களில் அந்தக் குழந்தை பேசும் வசனமும் யதார்த்தத்திலிருந்து மொத்தமாய் விலகி நிற்கிறது.

ஒருவருடைய வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படத்தில் கிளாமர் சாங்கும் `சாமி... ராமசாமி... டிராஃபிக் ராமசாமி...' என தேவி ஸ்ரீ பிரசாத் ஸ்டைல் தீம் மியூசிக்கும் தேவைதானா?! `கம் ஆன் கம் ஆன்' எனப் பாட்டுப்பாடி ஆடிக்கொண்டே நீதிமன்றம் வரும் நீதிபதி அம்பிகா, வயதான ஜெனிலியாவைப் போல் நடித்து வெறுப்பேற்றுகிறார். பெயரில் `டிராஃபிக்' இருப்பதால் ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை சென்னையின் டிராஃபிக்கை காட்டுவதெல்லாம் என்ன மாதிரியான ரசனை?! படத்தின் இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அனைத்தும் பெரிதாய் ஈர்க்கும்படி இல்லை. படத்தில் டிராஃபிக் ராமசாமியின் மூக்குக் கண்ணாடி சைஸில் ஒரு லாஜிக் ஓட்டையும் இருக்கிறது. கொஞ்சமாவது கவனித்து, திருத்தியிருக்கலாம்!

டிராஃபிக் ராமசாமி

படத்தில் இடையிடையே  `ஒன் மேன் ஆர்மி' புத்தகத்தைப் படித்துவிட்டு 'ப்பா...', 'செம்ம்ம...' என ரசித்துக் கொண்டிருப்பார், விஜய்சேதுபதி. தேவையில்லாத சினிமாத்தனங்களை முற்றிலும் தவிர்த்து, அவர் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி பதிவு செய்திருந்தாலே, விஜய் சேதுபதிக்குக் கிட்டியே அதே பேரனுபவம் நமக்கும் கிட்டியிருக்கும். ப்ச்ச்..!

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!