நாலு ஃபைட், ரெண்டு ட்விஸ்ட், கொஞ்சம் த்ரில்... இது மம்மூட்டியின் மசாலா சினிமா! #AbrahaminteSanthathikal

உண்மையான மலையாள சினிமா ரசிகர்கள் லால் ஏட்டனடிமிருந்து ‘புலி முருகன்’ இல்லை, ‘த்ரிஷ்யம்’ தான் எதிர்பார்க்கிறார்கள். மம்மூக்காவிடமிருந்து ‘ஆபிரஹாமிண்டே சந்ததிகள்’ இல்லை, ‘முன்னறியிப்பு’ தான் எதிர்பார்க்கிறார்கள். ‘அங்கமாலி டைரீஸ்’, ‘சூடானி ஃப்ரம் நைஜீரியா’, ‘Ee.Ma.Yau’ என மலையாளத் திரையுலகம் வேறு பாணியில் பயணித்துக் கொண்டிருப்பதை அதே திரையுலகின் டாப் ஸ்டார்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் இது!

நாலு ஃபைட், ரெண்டு ட்விஸ்ட், கொஞ்சம் த்ரில்... இது மம்மூட்டியின் மசாலா சினிமா! #AbrahaminteSanthathikal

பெங்காலி, இரானியப் படங்கள் வரிசையில் வித்தியாசமான கதைக் களங்கள், நல்ல கதையம்சம் கொண்ட படங்கள், கதை நடக்கும் இடத்தின் வாழ்வியலோடு சேர்ந்து பயணிக்கும் காட்சிகள் என மலையாளப் படங்கள் எப்போதும் எதார்த்தம் பேசும் செல்லுலாய்டுகளாக இருக்கும். அதிலும் தற்போதைய இளம் இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் அந்த எதார்த்தத்திற்கு மேலும் அழகூட்டி வருகிறார்கள். இதனால் பல வருடங்களாக சூப்பர்ஸ்டார்களாக இருக்கும் மோகன்லால், மம்மூட்டி போன்றோருக்குக் கட்டாய வெற்றி என்பது இங்கே அவசியமாகிறது. அதற்காக அவர்கள் அடிக்கடி கையாளும் ஒரு முறைதான் இந்த மசாலா சினிமாக்கள். அவர்களுக்கென இருக்கும் ரசிகர்கள் படையை குஷிப்படுத்தி, அவர்களின் கொண்டாட்டச் சுபாவங்களுக்கு தீனிபோட்டு விசில் சத்தங்களுடன் வெற்றி பெறும் அதே எம்.ஜி.ஆர் காலத்து ஃபார்முலாதான். இது ஃப்ரீ ஹிட்டில் இறங்கி அடிப்பது போலத்தான். அவுட் ஆகிவிட்டாலும் பெரிய பாதிப்பில்லை. அந்த வரிசையில் மம்மூட்டியின் கணக்கில் ஒரு படம், இந்த ஆபிரஹாமிண்டே சந்ததிகள். #AbrahaminteSanthathikal

Abrahaminte Santhathikal

டெரிக் ஆபிரஹாம் (மம்மூட்டி) ஒரு கடமையே கண்ணான போலீஸ் அதிகாரி. துப்பாக்கிச் சுடுவதில் திறமைசாலியான அவரின் தம்பியின் (அன்சான் பால்) மேல் அவனின் காதலியையே கொன்றதாக வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. சந்தர்ப்பச் சூழ்நிலை, ஆதாரங்கள், சாட்சிகள் என அனைத்தும் அன்சான் பாலையே குற்றவாளி எனக் கைகாட்ட, மம்மூட்டியின் மேல் ஏற்கெனவே தனிப்பட்ட பகை கொண்ட இரண்டு அதிகாரிகள் அந்த வழக்கை மம்மூட்டியிடமே கொடுக்கிறார்கள். அதே பகை லிஸ்டில் இருக்கும் மம்மூட்டியின் முன்னாள் காதலியான கனிகா, அரசு தரப்பு வக்கீலாக ஆஜராக, தம்பி, மம்மூட்டியின் கைகளாலேயே சிறையில் தள்ளப்படுகிறான். சகோதரன் இப்போது பகைவனாகிறான். பலி வாங்கத் துடிக்கிறான். அவன் காதலியை உண்மையில் கொன்றது யார்? சகோதரர்கள் பகையை விடுத்து ஒன்று சேர்ந்தார்களா? இந்தக் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாகக் காய்கள் நகர்த்தி, சில பல ட்விஸ்ட்கள் வைத்து எண்டு கார்டு போடுகிறார்கள்.

தெலுங்குப் பட ஹீரோ போல, அதிரடி தீம் மியுசிக், அவரை பற்றி அவரின் உயர் அதிகாரியே பேசும் பில்டப் வசனங்கள் என்று ரசிகர்களின் விசில் சத்தங்களுடன் அறிமுகமாகிறார் மம்மூட்டி. இறுக்கமான உணர்வுகளை வெளிப்படுத்தாத முகம், எப்போதும் விறைப்பாகத் திரியும் உடல் மொழி என மம்மூட்டியின் இயல்பான குணங்களே டெரிக் ஆபிரஹாம் கதாப்பாத்திற்கும் நன்கு பொருந்தி போயிருக்கிறது. தன் தம்பியை சிறையில் சந்தித்து, “இந்தக் கொலைய நீ செய்யல இல்ல?” என்று பரிதவிப்போடு கேட்பது; தம்பி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, சிறைக்கு இழுத்துச் செல்லப்படும்போது, ஓர் அண்ணனாக எதுவும் செய்ய முடியாமல், தம்பியின் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தவிர்ப்பது; கிளைமேக்ஸ் காட்சியில் அத்தனை பெரிய போலீஸ் கூட்டத்திற்கும் அல்வா கொடுப்பது, அதைக் காட்டிக்கொள்ளாமல் இறுக்கமான டெரிக் ஆபிரஹாமாக ஆர்டர்கள் பிறப்பிப்பது; என ஒரு சில காட்சிகளில் மம்மூட்டி என்ற மாபெரும் நடிகன் வெளிப்படுகிறான். அதைத் தவிர்த்து பார்த்தால், இது அவருக்கான ஸ்கிரிப்ட்டல்ல என்பது எளிதில் புரிந்து விடும். ஹிட் ஃபார்முலா ஸ்கிரிப்ட் ஒன்றைப் பிடித்து விட்டு, அதில் மம்மூட்டி எனும் கலைஞனை திணிக்கப் பார்த்திருக்கிறார்கள்.

Abrahaminte Santhathikal

படத்தின் இயக்குநர் ஷாஜி படூர் பல வருடங்களாக உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். பல ஹிட் மலையாளப் படங்களுக்கு உறுதுணையாக இருந்தவர். ஒரு புது இயக்குநர் என்பதையும் பொருட்படுத்தாமல் அவரின் மேல் இருந்த நம்பிக்கையின் பேரில் இந்தப் படத்தை கொடுத்ததாக மம்மூட்டியே தெரிவித்திருந்தார். அதனாலே என்னவோ, எப்படியும் ஹிட் அடிக்க வேண்டுமென நிறைய மசாலாக்களை தூவி விட்டுள்ளார் ஷாஜி. அதற்குக் கோபி சுந்தரின் பின்னணி இசை பெரிதும் உதவியிருக்கிறது. நாத்திகர்களை தேடித் தேடி கொடூரமாகக் கொலை செய்யும் சீரியல் கில்லர், குழந்தைகளையும் விட்டு வைக்காத இரக்கமற்ற கொலைகாரனான அவனைத் தேடும் மம்மூட்டி என்று திகிலுடன் படத்தை ஆரம்பித்து விட்டு, பின்பு அதற்கும் படத்தின் முக்கியக் கதைக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லையென டீலில் விடுவது, நியாயமாரே?

எதற்கெடுத்தாலும் டப் டப்பென சுடும் போலீஸ் அதிகாரி பாத்திரங்கள் மலையாளப் படங்களிலும் வேண்டுமா? இயல்பான போலீஸ் கதைகள் பலவற்றைச் சொன்ன மலையாள சினிமா முற்றிலும் இப்படிச் செயற்கையான ஒரு கதையை கூறுவது சற்றே வருத்தமாகவும் இருக்கிறது. இருந்தும் தன்னுடைய அனுபவத்தால், திரைக்கதையை தடதடக்க வைத்து இரண்டாம் பாதியில் பாஸ் மார்க் பெறுகிறார் இயக்குநர். அண்ணன் - தம்பி பாசம் என நீண்ட நெடிய சென்டிமெண்ட் காட்சிகள் அமைக்க வாய்ப்புகள் இருந்தும், அதைத் தவிர்த்தது பெரும் ஆறுதல். எதார்த்தமாக தன் சக அதிகாரியிடம் தன் தம்பியை காப்பாற்றிவிடலாமா என்று கெஞ்சி கேட்பது மட்டும் மலையாள சினிமா டச்! தம்பியாக வரும் அன்சான் பால் நடிப்பில் இன்னமும் உழைக்க வேண்டும். ஆக்ஷன் காட்சிகள் தவிர மம்மூட்டியின் நடிப்பிற்கு முன், சற்றே தொங்கலாகத்தான் தெரிகிறார். வில்லன்களாகத் தோன்றும் இரண்டு போலீஸ் அதிகாரிகள் வேண்டுமானால் மம்மூட்டியை பழிவாங்க முயற்சிப்பார்கள். முன்னாள் காதலி கனிகாவுமா இவ்வளவு வன்மத்துடன் திரிவார்? அதற்கான பலமான பின்கதை மற்றும் காரணங்கள் மிஸ்ஸிங்!

AbrahaminteSanthathikal

“‘மங்காத்தா’ படம் மாதிரி ஒரு ட்விஸ்ட் வருமோ?” என ரசிகர்கள் முன்னரே அதைக் கணித்து விட்டாலும், அதை ‘ரமணா’ யூகிசேது போல ஒரு போலீஸ் அதிகாரியை வைத்து அவரின் யூகமாக விவரிக்கிறார்கள். சுவாரஸ்யமாக இருந்தாலும், வில்லன்களான உயர் அதிகாரிகள் அதைக் கூடவா யோசிக்கவில்லை? அதிலும் ஆரம்பம் முதல் மம்மூட்டிக்கு உதவிய கமிஷனரையே காமெடி பீஸ் ஆக்கியதெல்லாம் உச்சக்கட்டம்! இருந்தும், எந்த வகை சந்தர்ப்பச் சாட்சியங்கள், ஆதாரங்கள் தன் தம்பியைச் சிறையில் தள்ளியதோ, இறுதியில் அதே வகை ஆதாரங்கள், சந்தர்ப்பச் சாட்சியங்கள்கூட இல்லாமல் மம்மூட்டி அவரைத் திறமையாக காப்பாற்றுவது சுவாரஸ்யமான அடப்போட வைக்கும் முடிச்சுதான். அது மட்டுமே படத்தையும் காப்பாற்றியிருக்கிறது.

 

 

ஆனால், உண்மையான மலையாள சினிமா ரசிகர்கள் லால் ஏட்டனடிமிருந்து ‘புலி முருகன்’ இல்லை, ‘த்ரிஷ்யம்’ தான் எதிர்பார்க்கிறார்கள். மம்மூக்காவிடமிருந்து ‘ஆபிரஹாமிண்டே சந்ததிகள்’ இல்லை, ‘முன்னறியிப்பு’ தான் எதிர்பார்க்கிறார்கள். ‘அங்கமாலி டைரீஸ்’, ‘சூடானி ஃப்ரம் நைஜீரியா’, ‘Ee.Ma.Yau’ என மலையாளத் திரையுலகம் வேறு பாணியில் பயணித்துக் கொண்டிருப்பதை அதே திரையுலகின் டாப் ஸ்டார்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் இது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!