Published:Updated:

சமஉரிமைக்காகப் போராடும் திருநங்கை... மேரிக்குட்டி எனும் `SHE'RO! #NjanMarykutty படம் எப்படி?

வெ.வித்யா காயத்ரிர.சீனிவாசன்

மலையாள சினிமாவில் Njan Marykutty ஒரு முக்கியமான படம்!

சமஉரிமைக்காகப் போராடும் திருநங்கை... மேரிக்குட்டி எனும் `SHE'RO! #NjanMarykutty படம் எப்படி?
சமஉரிமைக்காகப் போராடும் திருநங்கை... மேரிக்குட்டி எனும் `SHE'RO! #NjanMarykutty படம் எப்படி?

ந்தியாவில் திருநங்கைகளை கண்ணியமாகக் காட்டும் படங்களும், அவர்களின் உண்மையான பிரச்னைகளை அலசும் படங்களும் எத்தனை என்றால் விரல்விட்டே எண்ணி விடலாம். அந்த வகையில் வித்தியாசமான, உணர்வுபூர்வமான கதைகளை அவ்வப்போது கொடுத்துக்கொண்டிருக்கும் மலையாளத் திரையுலகம் திருநங்கைகளுக்கு இந்த முறை மரியாதை செலுத்தியுள்ளது. நூறு படங்களைக் கடந்து வெற்றிக் குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜெயசூரியாவின் மாறுபட்ட நடிப்பில் வந்திருக்கும் `ஞான் மேரிகுட்டி'  #NjanMarykutty படம் எப்படி?

மாதுக்குட்டி (ஜெயசூரியா) தான் ஆணல்ல, ஒரு பெண் என்பதை உணர்ந்து அதற்கான சிகிச்சை மேற்கொண்டு பெண்ணாக (மேரிக்குட்டி) மாறுகிறார். ஆணிலிருந்து பெண்ணாக மாறிக்கொண்டிருக்கும் அந்த இடைப்பட்ட காலகட்டத்தில் தன் ஐ.டி. வேலையை விடுத்து போலீஸ் அதிகாரியாக விரும்புகிறார். அதற்கு அவரின் பாலினமும், அதன் மேல் காட்டப்படும் பாரபட்சங்களும் தடைகளாக வருகின்றன. சொந்தக் குடும்பமே அவரைக் கைவிட்டுவிட, உள்ளூர்க் காவல்துறையின் பகையையும் சம்பாதித்துவிட, மேரிக்குட்டி தான் நினைக்கும் போலீஸ் அதிகாரியாக முடிந்ததா? 

ஆங்கிலத்தில் `Transsexual' என்று ஒரு வார்த்தை உண்டு. அதாவது ஒரு பாலின் உடற்கூறுகளையும், மற்றொரு பாலின் உள்ளப்பண்புகளையும் பெற்றிருத்தல். படத்தில் மேரிக்குட்டி தன்னை அப்படித்தான் அடையாளப்படுத்திக்கொள்கிறாள். அறுவை சிகிச்சை முடிந்து நன்கு மழிக்கப்பட்ட தாடி, அதே சமயம் அதற்கான சுவடுகளைக்கொண்ட முகம், நடக்கும்போதும், ஓடும்போதும் கைகளை நளினமாக ஆட்டும் பெண்களின் உடல்மொழி, பெரும்பாலான காட்சிகளில் உடையாகச் சேலை, ஸ்டிக்கர் பொட்டு என நிஜமாகவே பெண்தானோ என்று மலைக்க வைக்கிறார் மேரிக்குட்டியான ஜெயசூரியா. நடிப்பில் மனிதர் மனிதியாகவே வாழ்ந்திருக்கிறார். பெண்ணாக மாறிய பின்னரும் சிறுவயதிலிருந்து தன் தோழியான ஜூவல் மேரியுடன் தொடரும் நட்பு, அவரின் மகளை தன்னுடைய மகளாகவே கருதும் அந்தத் தாய்மை, ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆசிரியராகச் சுலபமான முறையில் கணக்கைச் சொல்லித்தருவது, பின்னர் சற்றும் சளைக்காமல் மக்களை ஈர்க்க முகத்தைக் காட்டாத ஆர்.ஜே. ஏஞ்சலாக எஃப்.எம் ரேடியோவில் வேலை பார்ப்பது, போலீஸாக வேண்டி பயிற்சிகள் மேற்கொள்வது என ஒரே கதாபாத்திரத்தில் பல்வேறு முகங்கள் காட்டியிருக்கிறார். 

அதிலும் தன் தந்தை முன் தன்னை அவமானப்படுத்திய காவல்துறை சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்து அவர் காட்டும் அந்த வெற்றுப் பார்வை, அனலைக் கக்கவும் தவறவில்லை. இவ்வளவுக்கும் இடையில் ஜெயசூரியா என்ற நடிகன் எங்குமே தெரியவில்லை. நம் மனதில் மேரிக்குட்டி மட்டும் ஆழமாகப் பதிய அதுவும் ஒரு முக்கியமான காரணம். ``இது ஆணின் உலகமும் அல்ல, பெண்ணின் உலகமும் அல்ல. திறமைகளின் உலகம்" என்று நம்மைச் சிந்திக்க வைப்பது, அவ்வளவு அவமானங்களுக்குப் பிறகும் தன்னம்பிக்கையுடன் தன் கொள்கையில் உறுதியாக இருப்பது என நமக்குப் பல்வேறு பாடங்கள் எடுக்கிறார் மேரிக்குட்டி.

ஒரு காட்சியில் பொதுக் கழிப்பிடத்தில் தயக்கத்துடன் நிற்கிறாள் மேரிக்குட்டி. ஆண்களுக்கான கழிவறைக்குள் செல்வதா, பெண்களுக்கான கழிவறைக்குள் செல்வதா என்ற குழப்பம். அப்போது பெண்கள் கழிவறையிலிருந்து வெளியே வரும் ஒரு பெண் இவளை முறைத்தபடியே செல்ல, மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறைக்குள் சென்று தன் நிலையை எண்ணிச் சிரித்தபடியே அழுகிறாள். அந்த ஒற்றைக் காட்சி, நம்முடைய சமுதாயத்தில் மாற்றுப் பாலினத்தவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதைப் பொட்டில் அடித்தது போல புரிய வைக்கிறது. மேரிக்குட்டி என்ற பெயருக்கு ஒரு கடிதம் வர, இது ஏதும் பிரச்னையான கடிதமோ என்று உடனிருக்கும் ஃபாதர் வருத்தப்பட, ``இதில் என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும். இது மேரிக்குட்டி என்ற என்னுடைய பெண் பெயருக்கு வந்த முதல் கடிதம் அல்லவா? அதுவே பெரிய சாதனைதானே?" என்று ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் `மேரிக்குட்டி' ஜெயசூரியாவின் கண்களில் கிடைக்கப்போகும் பல விருதுகள் தெரிகின்றன.

மேரிக்குட்டிக்குப் பக்கபலமாக அத்தனை துணை நடிகர்களும் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக சர்ச் ஃபாதராகத் தோன்றி ஆதரவுக் கரம் நீட்டும் இன்னொசென்ட் (Innocent Vareed Thekkethala), தோழியாக வரும் ஜூவல் மேரி, மற்றொரு ஆர்.ஜேவாக வரும் அஜு வர்கீஸ், கலெக்டராக வரும் சூரஜ் வெஞ்சரமூடு, முதலில் வெறுத்து பின்னர் அதற்காக வருத்தப்படும் மேரிக்குட்டியின் தந்தை, பெண்ணாக மாறிவிட்ட தன் மகனை மறந்தவாக்கில் `மகன்' என்றே அழைக்கும் மேரிக்குட்டியின் அம்மா என அந்தப் பட்டியல் சற்றே நீளம்தான். குறிப்பாக வில்லனாக வரும் ஜோஜோ ஜார்ஜ், வன்மம் பொதிந்த போலீஸ் அதிகாரியாக மிரள வைக்கிறார். அவரிடம் மேரிக்குட்டி மாட்டிக்கொண்டு முழிக்கும்போதெல்லாம் நமக்கும் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது.

இது ஒருபுறமிருக்க, ஒன்றிரண்டு குறைகள் ஆங்காங்கே தலைகாட்டுகின்றன. மேரிக்குட்டிக்கு உதவும் அந்த வக்கீல் கதாபாத்திரம் ``எனக்கு செக்ஸ் மட்டும் போதும்" என்று வழிவது, அவரின் உடலைத் தவறாக உற்றுநோக்குவது போன்ற விஷயங்களை காமெடி என்று படத்தில் சேர்த்திருக்கிறார்கள். அதை அப்படி எடுத்துக்கொள்ளத்தான் நம்மால் முடியவில்லை! திருநங்கை என்பதால், போலீஸ் எழுத்துத் தேர்வில் மற்றவர்கள் பாஸாக தேவையான 40 மதிப்பெண்ணுக்குப் பதில், 35 மதிப்பெண் எடுத்தால் போதும் என்று கலெக்டர் கூறும்போது, தனக்குச் சலுகை பெற விருப்பமில்லை, சம உரிமையே போதும் என்று மறுக்கிறார் மேரிக்குட்டி. மற்றவர்கள் போல 40 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தால் மட்டும்தான் வெற்றியடைந்ததாகக் கருதுவேன் என வைராக்கியமாகப் பதிலளிக்கிறார். திருநங்கைகளுக்கு அந்த மரியாதை கிடைத்தால் போதும் என்கிறார். அது பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான் என்றாலும், அனைத்து மாற்றுப் பாலினத்தவருக்கும் மேரிக்குட்டிக்குக் கிடைத்த வாழ்க்கையும், உதவிகளும், ஆதரவுக் கரங்களும் கிடைக்குமா என்ன? படத்தின் இசை பக்கப்பலம் என்றாலும், அவ்வளவு அழகான இடத்தில் நடக்கும் கதைக்கு மரியாதை செலுத்தும் விதமாகக் கேரளாவின் இயற்கை அழகை கேமரா எங்குமே பிரதிபலிக்கவில்லை. இதனாலேயே படம் ஒரு நாடகத் தன்மையை அவ்வப்போது நமக்குக் கடத்துகிறது. 

ஆனால், இப்போதும் டிவி ஷோக்களில் நகைச்சுவை என்ற பெயரில் மரியாதையின்றி கலாய்க்கப்படும் திருநங்கைகளின் நிஜ வலி, சமுதாயத்தில் அவர்களுக்குக் கொடுக்கப்படாத இடம், கிடைக்காத சம வாய்ப்புகள் எனப் பல்வேறு ஏற்றத் தாழ்வுகளை படம் அலசுகிறது. இதற்காகப் படத்தை ஏதோ ஒரு சோகக்கதையாக கடத்தாமல், அவ்வகை மனிதர்களுக்கு உத்வேகம் கொடுக்கும் விதமாக எடுத்தது பாராட்டப்படவேண்டியது. அந்த வகையில், மலையாள சினிமாவில் Njan Marykutty ஒரு முக்கியமான படம்! அதற்காகவே படத்தின் இயக்குநர் ரஞ்சித் சங்கருக்கும், இப்படியொரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ஜெயசூர்யாவுக்கும் தாராளமாகத் தரலாம் ஒரு பூங்கொத்து!

வெ.வித்யா காயத்ரி

எளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்! 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.

ர.சீனிவாசன்

Creative Writer | Movie Observer | Science Enthusiast | Still Human