`யார் நீ... யார்ரா நீ... யார்ர்ர்ர்ர்ர்ர்ர்ரா நீ..!' - `அசுரவதம்’ விமர்சனம்

`யார் நீ... யார்ரா நீ... யார்ர்ர்ர்ர்ர்ர்ர்ரா நீ..!' - `அசுரவதம்’ விமர்சனம்

`யார்ரா நீ’, படம் நெடுக சசிகுமாரிடம் இந்த ஒற்றைக் கேள்வியை அச்சம், கோபம், குழப்பம் என அத்தனை வடிவத்திலும் கேட்டுவிடுவார் வசுமித்ரா. அக்கேள்விக்கான பதில்தான் `அசுரவதம்'.

அசுரவதம்

கதை தொடங்கி ஐந்தாவது நிமிடத்தில் சமயனுக்கு ( வசுமித்ரா ) ஒரு போன்கால் வருகிறது. எதிரிலிருந்து `என்ன சமயா டென்ஷனா இருக்கா... இன்னும் ஒரு வாரத்துக்கு இப்படித்தான் இருக்கும். அதுக்கப்புறம் நீ செத்துடுவ' என்ற மிரட்டலோடு கால் கட் ஆகிறது. எதிரிலிருந்து பேசியது யார், சமயனை ஏன் கொலை செய்வதாக மிரட்ட வேண்டும், மிரண்டுபோகும் சமயன் அடுத்து என்ன செய்தான், மிரட்டல் வெறும் மிரட்டலாகவே நமுத்துப் போகறதா அல்லது உண்மையாகவே நடந்தேறுகிறதா என நகர்கிறது கதை.

வழக்கமாக, பக்கம் பக்கமாய் வசனம் பேசும் சசிகுமார், இந்தப் படத்தில் வார்த்தைகளைக் குறைத்து முகபாவங்களால் பேசியிருக்கிறார். சிறப்பானதொரு நடிப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார். அசுரவதத்தின் அசுரன் வசுமித்ரா. த்ரில்லர் படத்துக்குண்டான திக்திக் உணர்வை, இசை, கேமரா கோணங்கள் எல்லாவற்றையும் தாண்டி நமக்கு கடத்துகிறது வசுமித்ராவின் உடல்மொழி. பயம், சந்தேகம், ஆங்காரம் என ஒவ்வொரு உணர்விலும் விளையாடியிருக்கிறார். `யார் நீ... யார்ரா நீ... யார்ர்ர்ர்ர்ர்ர்ர்ரா நீ... என ஒரே வசனத்தை ஒவ்வோர் உணர்வோடு வெளிப்படுத்தி நடிகனாய் நிமிர்ந்து நிற்கிறார். இந்த அசுரவதத்தில் அசுரனையும் வதைப்பவனையும் தவிர மற்றவருக்கு பெரிய இடமில்லை. ஆனாலும், மற்ற நடிகர்கள் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் குறையேதுமின்றி நடித்துக்கொடுத்திருக்கிறார்கள்.

அசுரவதம்

படத்தின் நிஜ நாயகன் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர். அவரின் கேமரா கோணங்களும் லைட்டிங்கும் திரையைவிட்டு நம் கண்களை விலக்காமல் வைக்கின்றன. வசுமித்ரா அமர்ந்திருக்கும் ஒற்றை ஆள் அகலமுள்ள சந்து, மின்னலின் வெளிச்சத்தில் வீட்டுக்குள் நடக்கும் சண்டைக்காட்சி என எல்லா இடங்களிலும் கதிரின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறக்கிறது. கதையின் ஓட்டத்துக்கு 360 டிகிரி சுற்றி சுழண்டு பரபரப்பைக் கூட்டியிருக்கும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் குளுமையும் கலந்திருப்பது கச்சிதம். கதிரின் உழைப்பை முழுமையாக்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆர்.கோவிந்த்ராஜ். ஆக்‌ஷன், சேஸிங் காட்சிகளில் படத்தொகுப்பு பரபரக்கிறது. சண்டைக் காட்சிகளில் பின்னி பெடலெடுத்திருக்கிறார் சண்டை வடிவமைப்பாளர் திலீப் சுப்பராயன். குறிப்பாக, குறிஞ்சி லாட்ஜுக்குள் நடக்கும் சண்டைக் காட்சி அசுரவதம் எனும் பெயருக்கு நியாயம் சேர்த்திருக்கிறது.

வசுமித்ரா வீடு, கண்ணாடி, அழுக்கு படிந்த  ஜீப் மற்றும் காய்ந்த புற்களுடனான மொட்டைமாடி, அந்த இருண்மை நிறைந்த ஹேண்ட் கிரில்கள் அமைக்கப்படாத லாட்ஜ், கரும்புக்காடு என்று படத்தின் மூடுக்கு ஏற்ப லொகேஷன்களைப் பிடித்திருக்கிறார்கள். அந்த லோகேஷனில் தன்னுடைய கலையையும் அழகாகச் சேர்திருந்தார் ஆர்ட் டைரக்டர் குமார் கங்கப்பன். நடிகர்களிடமும் டெக்னிக்கல் டீமிடமும் இயக்குநர் மருதுபாண்டியன் நன்றாக வேலை வாங்கியிருப்பது தெரிகிறது. அதேபோல் படத்தின்  மிக முக்கியமான, அதேநேரம் குரூரமான அந்தக் காட்சியை விளக்கியிருக்கும் விதம், இயக்குநரின் புத்திசாலித்தனத்தையும் காட்டுகிறது. மிக வழக்கமானதொரு பழிவாங்கல் கதை. அதற்கேற்ற டெம்ப்ளேட்டான திரைக்கதையில் புதுமையான காட்சிகளமைத்து வித்தியாசப்படுத்த முயன்றிருக்கிறார் இயக்குநர் மருதுபாண்டியன். முதற்பாதியில் அதை முழுமையாக உணர முடிகிறது.

அசுரவதம்

படத்தில் இரண்டே பாடல்கள். இரண்டுமே மான்டேஜ் பாடல்கள். அதுவும் பொருந்தாத இடங்களில் என்பதால் கவனத்தைக் கொஞ்சம்கூட ஈர்க்கவில்லை. வழக்கமாகப் பின்னணி இசையில் பின்னும் கோவிந்த், இந்தப் படத்தில் ஏமாற்றியிருக்கிறார். முதலில் கேட்க  புத்துணர்வைத் தரும் பின்னணி இசை, போகப்போக அயர்ச்சியையே ஏற்படுத்தியிருக்கிறது. இவர் தீம் மியூசிக் போடுவதற்காக ஸ்லோமோஷன் காட்சிகளா அல்லது ஸ்லோமோஷன் காட்சிகளுக்காக இவர் இசைத்திருக்கிறாரா எனக் குழம்புமளவுக்கு படத்தில் அத்தனை ஸ்லோமோஷன் காட்சிகள். நம் பொறுமையைக் கொஞ்சம் சோதிக்கிறது.

முதல் 30 நிமிடம் பரபரக்கும் திரைக்கதை, இசை, காட்சியமைப்பு, இயக்கத்தோடு சேர்ந்து நம்மைக் கட்டிப்போடுகிறது. அதன் பிறகு, அந்தப் பரபரப்பே நம்மைத் தொய்வடையவும் செய்கிறது. முதல் பாதி முழுக்க ஹீரோவும் வில்லனும் கேட் அண்டு மவுஸ் கேம் ஆடிக்கொண்டேயிருக்கிறார்கள். சஸ்பென்ஸும் ஒருகட்டத்துக்கு மேல் சலிக்கும் என்பதற்கு இந்தப் படத்தின் முதல்பாதி சரியான உதாரணம்.

அசுரவதம்

வழக்கமான பழிவாங்கும் கதைதான். அதுவும் என்ன காரணத்துக்காக என்பதை டீசர், ட்ரெய்லர், போஸ்டர் மற்றும் படத்தின் முதல் காட்சியைப் பார்த்தே கண்டுபிடித்துவிடலாம். தனக்கு நேர்ந்த கொடுமைக்கு வில்லனை பழிதீர்க்க ஹீரோ தேர்ந்தெடுக்கும் சில வழிகள்... ஹீரோவுக்கும் வில்லனுக்குமான வித்தியாசத்தையே குறைக்கிறது. ஒப்புக்கு, 'அவர் ரொம்ப நல்லவர்' வசனம் வேறு! 

'நான் யாருன்னு உன் பொண்டாட்டியைக் கேளு சொல்லுவா' - இதுதான் ஹீரோ அடிக்கடி பேசும் டயலாக். ப்ரீ க்ளைமாக்ஸில் ஹீரோவின் செய்கைகள் நியாயப்படுத்தப்பட்டாலும் அதுவரை ஓர் ஆணின் ஈகோவைக் கிளறும் வேறு தொனியில்தானே இந்த வசனம் ஒலிக்கிறது? இதனாலேயே இயக்குநர் சொல்லவரும் கருத்து லேசாக உறுத்துகிறது.  

முதல் அரைமணி நேரம் பற்ற வைத்த பரபரப்பை இறுதிவரையில் தக்கவைத்திருந்தால் அசுரவதம் இன்னும் கூராகக் குத்தியிருக்கும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!