வெளியிடப்பட்ட நேரம்: 11:23 (01/07/2018)

கடைசி தொடர்பு:11:42 (01/07/2018)

"ஆக்‌ஷன் அதர்வா, அதகள கருணாகரன், 'மரண' காமெடி..." - 'செம போத ஆகாதே' படம் எப்படி?

'செம போத ஆகாதே' பட விமர்சனம்.

அதீத போதையில் ஒருவர் எடுக்கும் தவறான ஒரு முடிவு எதில் போய் முடிகிறது, அதனால் எழும் பிரச்னைகளை சமாளிக்க என்னெவெல்லாம் செய்கிறார்கள்... என்பதை 'செம போத ஆகாதே' என அட்வைஸாக சொல்கிறார்கள். 

செம போத ஆகாதே

ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் ரமேஷுக்கு (அதர்வா) காதலி மதுவைப் (மிஷ்டி) பிரிந்த சோகம். குடித்துக்கொண்டு திரியும் நண்பனை மீட்டெடுக்க, போதையில் தவறான ஒரு ஐடியாவைச் சொல்கிறார், கருணாகரன் (நந்து). அந்த ஐடியா என்ன, முடிவினால் இருவரும் என்னென்ன பிரச்னைகளையெல்லாம் சந்திக்கிறார்கள், பிரச்னைகளுக்குத் தீர்வு என்ன... என்பதுதான், 'செம போத ஆகாதே' படத்தின் கதை. இதை ஹியூமர், கிளாமர், ஆக்‌ஷன், த்ரில்லர்... எனக் கலந்துகட்டிக் கொடுத்திருக்கிறார், இயக்குநர் பத்ரி வெங்கடேஷ். 

ஹீரோ அதர்வா. ஆக்‌ஷன், அதிரடி, ஹியூமர் எனக் கலந்துகட்டி அடித்திருக்கிறார். காதலியின் பிரிவால் மது அருந்துவது, அல்ப ஆசைக்காக சிக்கலில் மாட்டிக்கொண்டு முழிப்பது, நண்பன் செய்யும் ராவான காமெடிகளால் எரிச்சல் ஆவது, ஆங்காங்கே அடியாட்களை துவம்சம் செய்வது எனக் கவர்கிறார். 

த்ரில்லர் கதையெனச் சொல்லி, படம் பார்ப்பவர்களுக்குப் பல்பு கொடுக்காமல், அதில் ஆக்‌ஷன் கொஞ்சம் காமெடி கொஞ்சம் என திரைக்கதை பின்னியிருக்கும் பத்ரிக்கு வாழ்த்துக்கள். ஆனால், இதுமாதிரி பல கதைகளை தமிழ்சினிமா பார்த்திருக்கே ப்ரோ!

அதர்வா

கருணாகரனின் காமெடி படத்திற்கு மிகப்பெரிய பலம். 'உன் மாமானாரை ஃப்ரீஸர்லதானே வெச்சிருக்கே. அதுல பாலை வெச்சிக்கோ போமா', 'இன்னிக்கு செத்தா நாளைக்குப் பால். இதென்ன இன்னிக்கே பால்?' போன்ற ரகளைப் பேச்சும், டைமிங் காமெடிகளுமாய் அசத்தியிருக்கிறார். குறிப்பாக, கருணாகரன் காட்டும் முகபாவனைகள் அல்டிமேட் ரகம். அதர்வா வீட்டிற்குக் கீழ் வீட்டில் இருக்கும் தேவதர்ஷினி, சேத்தன், மனோபாலா மூவரும் போட்டி போட்டு காமெடி செய்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர, ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், 'ஆடுகளம்' நரேன்... மூவரும் அவரவருக்குக் கொடுத்த கேரக்டரைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள்.  

படத்தின் முக்கியமான திருப்புமுனைக்குக் காரணமாக இருக்கிறார், அனைகா சோட்டி. கிளாமரைத் தவிர, படத்தில் பெரிய ஸ்கோப் இவருக்கு இல்லை. ஹீரோயின் மிஷ்டி, வழக்கமான ஹீரோயினாக வந்து போகிறார். 

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை எதிர்பார்த்த அளவிற்கு இல்லையென்றாலும், பின்னணி இசையில் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளுக்கு யுவனின் பின்னணி இசை அதிரடிக்கிறது. சேஸிங், ரேஸிங் என எல்லாக் காட்சிகளுக்கும் கலர்ஃபுல் ஃபீல் கொடுத்திருப்பதோடு, விதவிதமான கோணங்களில் விளையாடியிருக்கிறது கோபி அமர்நாத்தின் கேமரா. பிரவீன் கே.எல் எடிட்டிங்கிலும் ஏமாற்றம் இல்லை. படத்திற்குத் தேவையில்லாத பாடல்காட்சிகளுக்கு 'கட்' கொடுத்திருக்கலாம். திலீப் சுப்பராயனின் எதார்த்தமான ஆக்‌ஷன் காட்சிகள் படத்திற்கு எக்ஸ்ட்ரா எனர்ஜி.

செம போத ஆகாதே

'செம போத ஆகாதே' என அட்வைஸ் கொடுத்து, அதற்கு ஒரு கதையைப் பின்னியிருக்கும் இயக்குநர் பத்ரி, திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். காதலர்களுக்குள் ஏற்படும் மனஸ்தாபம் குழந்தைத்தனமாக இருப்பது, படம் நெடுக நீளும் லாஜிக் மீறல், அப்படிப் பண்ணலாமே... என ஆடியன்ஸுக்கே எழும் கேள்விகள்... போன்றவை படத்தின் டேமேஜ் ஏரியாக்கள்.  

போரடிக்காத திரைக்கதை, ஆங்காங்கே இருக்கும் ஜாலி மொமென்ட்ஸுக்காக 'செம போத ஆகாதே'வுக்கு தைரியமாக விசிட் அடிக்கலாம்!

 


டிரெண்டிங் @ விகடன்