ஓர் இரவு, இரண்டு கோடி பணம்... தமிழ் சினிமாவின் 186-வது த்ரில்லர் படம்..! - 'போத' விமர்சனம்

சுரேஷ் இயக்கிய 'போத' படத்தின் விமர்சனம்

ஓர் இரவு, இரண்டு கோடி பணம்... தமிழ் சினிமாவின் 186-வது த்ரில்லர் படம்..! - 'போத' விமர்சனம்

ஒரு நாள் இரவு, இரண்டு கோடி பணம், மூணு கார், நான்கு துப்பாக்கி, ஐந்தாறு கதாபாத்திரங்களென தமிழ் சினிமா தந்திருக்கும் 186-வது த்ரில்லர் படமே இந்த `போத'.

போத பட விமர்சனம்

சினிமாவில் பெரிய ஹீரோவாகும் லட்சியத்தோடு வாழ்ந்து வருகிறான, மணிகண்டன் (விக்கி). ஏ.வி.எம் உருண்டை, பிரசாத் லேப் என ஸ்டுடியோ ஸ்டுடியோவாக ஏறி இறங்கியும் வாய்ப்பு கிடைக்காமல் வாழ்க்கையை வெறுக்கிறான். அப்போது ஒரு குறும்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவன் சட்டையை பிடித்து இழுக்கிறது, அதேநேரத்தில் அதற்கு முப்பதாயிரம் பணமும் வேண்டுமென அவன் சட்டை பாக்கெட்டில் கை நுழைக்கிறது. எங்கே கை நுழைத்த வாய்ப்பு கை தவறி போய்விடுமோ என்ற பயத்தில், காசுக்காக கிகாலோ ( ஆண் பாலியல் தொழிலாளி ) தொழிலுக்குள் விழுகிறான். அந்த தொழில் விஷயமாக ஒரு வீட்டுக்குள் சென்றிருக்கையில், அங்கே அசம்பாவிதம் ஒன்று நடக்கிறது. அந்த அசம்பாவிதத்தை அரங்கேற்றியது யார், ஏன் என்பதை காமெடி, ட்விஸ்ட், டர்ன் எல்லாம் கலந்து சொல்வதாக நினைத்து... கடைசி வரை தெளியவைக்காமலேயே அடித்திருக்கிறது இந்த `போத' டீம்.

நாயகன் மணிகண்டனாக விக்கி. நடித்திருக்கிறார், உயரமாக இருக்கிறார், ஜிம்முக்கு செல்கிறார். நாயகியென, அதாவது மணிகண்டனுக்கு ஜோடியென படத்தில் யாருமில்லை. சிறப்பு! நாயகனின் நண்பனாக மிப்பு, செல்போன் சர்வீஸ் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் முக்கியமான கதாபாத்திரம் அவருடையது. அதை உணர்ந்து தம்மால் முடிந்தளவு நடித்திருக்கிறார். படத்தில் வரும் எல்லா கேரக்டர்களும் காமெடி பண்ணுகிறேன் என சாவடி அடிக்கிறார்கள். இவரும் அதில் விதிவிலக்கல்ல. மிப்புவை விட மிகமிக முக்கியமான பாத்திர்த்தில் ராகுல் தாத்தா நடித்திருக்கிறார். சண்முகசுந்தரமும் நடித்திருக்கிறார்.   

போத பட விமர்சனம்

முதல் பாதி முழுக்க காமெடி என்ற பெயரில் ஏதேதோ செய்கிறார்கள். அதற்கு, பார்வையாளர்களிடமிருந்து சிரிப்பு சத்தம் அல்ல, கொட்டாவிக்கு சொடக்கு போடும் சத்தம் கூட வரவில்லை. அரங்கிற்குள் படத்தின் பின்னணி இசையின் சத்தம் மட்டும்தான் கேட்கிறது, கேட்கிறது, கேட்டுக்கொண்டே இருக்கிறது.  கூச்சம் இல்லாத இடத்தில் கிச்சு கிச்சு மூட்டினால்  கடுப்பு கிளம்புமல்லவா.. அந்த ரகத்தில்தான் இருக்கிறது ஒவ்வொரு காமெடியும். திரில்லர் அத்தியாயங்கள் கொஞ்சம் விறுவிறுப்பாய் அமைந்திருந்தது கொஞ்சம் ஆறுதல். 

முதற்பாதி முழுக்க ஏனோ தானோவென நகர்கிறது, இரண்டாம் பாதியில் இருக்கும் கொஞ்சநஞ்ச விறுவிறுப்பை முதற்பாதியிலும் கொண்டுவந்திருக்கலாம். திரைக்கதை இன்னும் இன்னும் சுவாரஸ்யமாக அமைத்திருக்கலாம், இயக்குநர் சுரேஷ்.ஜி ப்ரோ. அதற்கான அத்தனை வாய்ப்புகளும் கதையில் நிறைந்திருந்தது. உண்மையில் படத்தில் கொஞ்சமேணும் போதையேற்றுவது ரத்தினகுமாரின் ஒளிப்பதிவும் சித்தார்த் விபினின் பாடல்களும்தான். அதிலும் ஒரு பாடலில் `வாட் டஸ் தி ஃபாக்ஸ்' பாடலின் சாயல். பின்னணி இசை படத்திற்கு எந்த விதத்திலும் உதவி செய்யவில்லை. சில இடங்களில் கதாபாத்திரங்கள் செய்யும் காமெடியைவிட பின்னணி இசை எரிச்சல் மூட்டுகிறது. சோடியம் விளக்கு வெளிச்சம் பரவிக்கிடக்கும் ஓர் இரவு, போலீஸ் சேஸிங், டிராவலர் பேக்கில் பணம், உடலை துளைக்கும் தோட்டாக்கள், விடிய விடிய ஓடிக்கொண்டேயிருக்கும் கதாபாத்திரங்களென தமிழ்சினிமாவின் மற்றுமொரு சினிமாவாகவே வந்திருக்கிறது இந்த `போத'.

போத

கிகாலோ என்பது இந்த கதைக்கு ஊறுகாய் அளவில்கூட உதவி செய்யாது. 'சின்னபுள்ள தனமா காமெடி பண்ற' என்ற காலகட்டம் மாறி சிறுவர்களே இப்போது நன்றாக காமெடி செய்து வருகிறார்கள். அதனால், `போத' ஏறவில்லை.

 

'கூடே' படத்தின் விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!