Published:Updated:

``வஞ்சகர்கள் இருக்கிறார்கள்... வஞ்சகம் எங்கே பாஸ்?’’ 'வஞ்சகர் உலகம்' விமர்சனம்

Vikatan
``வஞ்சகர்கள் இருக்கிறார்கள்... வஞ்சகம் எங்கே பாஸ்?’’ 'வஞ்சகர் உலகம்' விமர்சனம்
``வஞ்சகர்கள் இருக்கிறார்கள்... வஞ்சகம் எங்கே பாஸ்?’’ 'வஞ்சகர் உலகம்' விமர்சனம்

குருதியின் வாடையும் தோட்டாவின் சத்தமும் நிரம்பிக்கிடக்கும் வஞ்சகர் உலகத்தில் கொல்லப்படும் ஒரு பெண். கொலையாளி யார், கொலைக்கான காரணம் என்ன? கதை சொல்கிறது `வஞ்சகர் உலகம்'.

ஒரு பெண், அவளது வீட்டில் இறந்துகிடக்கிறாள். துப்பு துலக்கத் தொடங்குகிறது காவல்துறை. அவள் வீட்டுக்கு எதிர்வீட்டில் வசிக்கும் இளைஞன், அவளது கணவன், அவளது முன்னாள் காதலன்... என அனைவரும் விசாரிக்கப்படுகிறார்கள். 'இந்தக் கொலையின் ஏதோவொரு புள்ளியில், நிழலுலக தாதா ஒருவனும் சம்பந்தப்பட்டிருக்கிறான்' எனச் சந்தேகப்பட்டு, இன்னொருபுறம் துப்பு துலக்கத் தொடங்குகிறார்கள் இரு பத்திரிகையாளர்கள். காவலர்களும் பத்திரிகையாளர்களும் இணைந்து கொலையாளியைக் கண்டுபிடித்தனரா... நிழலுலகில் மறைந்து வாழும் தாதாவை வெளியுலகிற்கு அம்பலப்படுத்தினரா? இந்த இரண்டு முடிச்சுகளையும் அவிழ்க்கிறது, 'வஞ்சகர் உலகம்'.

ஒரு காலத்தில் நிழலுலக தாதா துரைராஜுக்கு எல்லாமுமாய் இருந்து, பின்னர் எதுவும் வேண்டாமென சமத்தாக ஒதுங்கி வாழும் சம்பத்தாக, குருசோமசுந்தரம். ஐந்தரை அடி உயரம், அறுபது கிலோ எடையென ரவுடி பாத்திரத்திற்கேற்ற மிரட்டலான உடலில்லை. அதற்குப் பதில், நடிப்பில் மிரட்டியிருக்கிறார் மனிதர். தியேட்டர் இருளில் தீக்குச்சி கொளுத்தும் காட்சி, மரண மாஸ். இன்னும் அவரிடமிருந்து வாங்கியிருக்கலாம் இயக்குநரே! சாம் என்கிற சண்முகமாக புதுமுக நடிகர், சிபி புவனச்சந்திரன். ஆங்காங்கே அடித்த கௌன்டர் வசனங்கள், எமோஷனல் கலந்த லவ் காட்சிகள், தன்னைப் பற்றியும் தன் லவ்வைப் பற்றியும் கொடுக்கும் ஜஸ்டிஃபிகேஷன்... முதல், படம் என்ற நெருடல் இல்லாமல் மெச்சூர்டான நடிப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார். வெல்கம்! சாந்தினி, தனக்குக் கொடுக்கப்பட்ட சிறிய கதாபாத்திரத்தை சரியாகப் பயன்படுத்தி, சிறப்பாகவே நடித்திருக்கிறார். 

தவிர, காவல்துறை அதிகாரிகளாக நடித்திருக்கும் அழகம்பெருமாள், வாசு விக்ரம் இருவரும் நல்ல தேர்வு. ஜான் விஜய்யை இன்னும் எத்தனை நாளைக்கு இதேமாதிரியான கதாபாத்திரத்தில் பார்க்கப்போகிறோமென அவருக்கே வெளிச்சம். சம்பத்தின் நண்பன் பாலாவாக நடித்திருக்கும் `லென்ஸ்' ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனின் நடிப்பில் குறையொன்றுமில்லை. விக்ரம் வாசுவும் அவருடன் வரும் காவலரும் பேசும் வசனங்கள், ஆங்காங்கே நம்மை கிச்சுக்கிச்சு மூட்டுகின்றன. பத்திரிகையாளர்களாக வரும் விஷாகன் வணங்காமுடி - அனிஷா அம்ப்ரோஸ் அண்ட் கோ, கொஞ்சமாவது நடித்திருக்கலாம். அனிஷா, பேசும் வசனங்கள்தான் வாயில் ஒட்டவில்லையென்றால், அவர் வந்துபோகும் காட்சிகளும் படத்தில் ஒட்டவில்லை. 

நல்லதொரு கதைக்களம். ஆனால், பல படங்களின் தாக்கத்தால் வித்தியாசமான திரைக்கதையில் சொல்ல முற்பட்டு, அதுவே கடைசியில் சிக்கலிலும் முடிந்துவிட்டது. தாங்கள் உருவாக்கிய சிக்கலில் தாங்களே சிக்கிவிட்டனர் என்ற நிலைதான் இயக்குநர் மனோஜ் பீதாவிற்கும் திரைக்கதை எழுதிய விநாயக்கிற்கும். கர்னாட்டிக் இசைப் பின்னணியில் நடக்கும் ஷூட்-அவுட், தியேட்டரில் கொலை செய்யும் காட்சி, குரு சோமசுந்தரமும் அழகம்பெருமாளும் காரில் பேசும் காட்சி, ஸ்னீக் பீக்கில் வந்த காட்சி, மேளதாள சத்தத்தோடு நடக்கும் `அந்த' காட்சியென சில இடங்களில் பார்வையாளர்கள் பக்கமிருந்து கைதட்டல் சத்தம் கேட்கிறது. இதைத் தவிர, மற்ற நேரங்களில் செல்போன் டிஸ்ப்ளே மட்டுமே தெரிகிறது. பல காட்சிகளை கனெக்ட்டும் செய்ய முடியாமல், அயர்ச்சி ஏற்படுகிறது.  இரண்டு மணி நேர திரைப்படத்தை நான்கு மணிநேரம் அமர்ந்து பார்த்தது போன்றதோர் உணர்வு.

`வஞ்சகர் உலகம்' எனும் தலைப்புக்கு ஏற்ப விஷுவல்களையும் கதாபாத்திரங்களையும் சிறப்பாக வடிவமைத்துவிட்டு, அவற்றின் முழு பரிமாணத்தையும் பார்வையாளர்களிடம் கொண்டுசேர்க்கத் தவறிவிட்டனர். முன்கூட்டியே கணித்துவிடும் முக்கியமான ட்விஸ்டும், படத்தின் பெரும் மைனஸ். ஆனால், அந்த ட்விஸ்ட்தான் `வஞ்சகர் உலகம்' எனும் தலைப்புக்குக் காரணம் சொல்கிறது. உணர்வு மிகுந்த அக்கருத்தை, ஆழத்தோடும் அழகாகவும் பேசியிருக்கலாம். அதை விட்டுவிட்டு, பக்கம் பக்கமாக தேவையே இல்லாத வசனங்களைப் பேசித்தீர்க்கிறார்கள் கதாபாத்திரங்கள். நமக்கே தொண்டை வற்றி தண்ணீர் தவிக்கிறது!

'நியோ-நாயர்' (Neo-Noir) படங்கள் என்றவுடன் எல்லாவற்றுக்கும் கிட்டாரைத் தூக்காமல்... தவில், மிருதங்கம், நாகஸ்வரம் என வெரைட்டி காட்டியிருக்கிறார், இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். அவரின் பின்னணி இசைதான் வஞ்சகர் உலகத்தில் முழுமையாக உயிர் வாழ்ந்தது. யுவன் சங்கர் ராஜாவின் குரலில், `தீயாழினி' பாடல், ராஜபோதை. ரோட்ரிகோ டெல் ரியோ ஹெராரா மற்றும் சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவு, விஷுவலாக படத்தைக் காப்பாற்றியிருக்கிறது. சண்டையில் துப்பாக்கி வெடிக்கும் காட்சிகள் படமாக்கபட்ட விதமும் அருமை. உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் சிபியின் மனதில் ஓடும் நினைவலைகளைத் தொகுத்த இடத்தில் கவனம் ஈர்க்கிறார், படத்தொகுப்பாளர் ஆண்டனி. 

எதிர்பாராத திருப்பங்களுடன் திரைக்கதை அமைத்து, வழவழ வசனங்களையும் குறைத்திருந்தால், 'வஞ்சகர் உலகம்' தமிழ் சினிமா உலகில் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

'தி நன்' படத்தின் விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

Vikatan