மீண்டும் ப்ரிடேட்டர்... அர்னால்டு ஆரம்பித்த விளையாட்டு இப்போது எப்படி இருக்கிறது? #ThePredator | The Predator English Movie Review

வெளியிடப்பட்ட நேரம்: 09:34 (15/09/2018)

கடைசி தொடர்பு:10:43 (15/09/2018)

மீண்டும் ப்ரிடேட்டர்... அர்னால்டு ஆரம்பித்த விளையாட்டு இப்போது எப்படி இருக்கிறது? #ThePredator

முன்னர் அர்னால்டு அசத்திய, ஆனால் தற்போது அதள பாதாளத்தில் தவித்துக்கொண்டிருக்கும் ப்ரிடேட்டர் சீரிஸை இயக்குநர் ஷேன் ப்ளாக் மீட்டுள்ளாரா? #ThePredator படம் எப்படி?

மீண்டும் ப்ரிடேட்டர்... அர்னால்டு ஆரம்பித்த விளையாட்டு இப்போது எப்படி இருக்கிறது? #ThePredator

க்ஷன் ஹீரோ அர்னால்டு ஸ்வார்சுநேகர் நடிப்பில் ப்ரிடேட்டர் படத்தொடரின் முதல் பாகம் வெளியாகி 31 ஆண்டுகள் கடந்துவிட்டன. அர்னால்டின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்த அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு வெளிவந்த ப்ரிடேட்டர் படங்கள் அந்த அளவு வரவேற்பையும், பாராட்டையும் பெற முடியாமல் தவித்தன. கடந்த 2010-ம் ஆண்டு வெளிவந்த மூன்றாம் பாகமும் தோல்வியையே தழுவியது. இப்போது அதன் நான்காம் பாகமான #ThePredator படத்தை இயக்கியிருக்கிறார் ஷேன் ப்ளாக். இவர் அர்னால்டு நடித்த ப்ரிடேட்டர் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியதோடு அல்லாமல் `கிஸ் கிஸ் பேங் பேங்’, `தி நைஸ் கைஸ்’ மற்றும் `அயர்ன் மேன் 3’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். அதள பாதாளத்தில் தவித்துக்கொண்டிருக்கும் ப்ரிடேட்டர் சீரிஸை மனிதர் மீட்டுள்ளாரா, #ThePredator படம் எப்படி?

The Predator

தொலைதூர கிரகத்திலிருந்து ஒரு முக்கியமான பொருளை தன் விண்கலத்தில் ஏற்றிக்கொண்டு ப்ரிடேட்டர் ஒன்று பூமியை நோக்கி வருகிறது. விபத்தில் மாட்டிக்கொண்ட அந்த விண்கலத்திலிருந்து ஒரு பாடில் தப்பித்து வேறு இடத்தில் விழுந்த ப்ரிடேட்டர் ஒன்றைக் கண்டறிகிறான் ராணுவ வீரனான க்வின் மெக்கென்னா. அதன் ஷில்டையும், அது வந்த விண்கலம் விழுந்த இடத்தைக் கண்டறிய உதவும் சாதனத்தையும் பாதுகாப்பு கருதி தன் வீட்டுக்கே தபால் மூலம் அனுப்பிவிடுகிறான். அதை அவனின் மகனான ஆட்டிஸம் பாதிப்புள்ள புத்திசாலி சிறுவன் ரோரி பயன்படுத்தத் தொடங்குகிறான். இந்நிலையில், தங்கள் விண்கலத்தை மீட்டேடுக்க வருகிறது மற்றொரு ஹண்டர் ரக ப்ரிடேட்டர் ஒன்று. அதனிடமிருந்து தன் புதிய நண்பர்கள் உதவியுடன் தன் மகனை மெக்கென்னா காப்பாற்றினானா. இந்தப் புதிய ப்ரிடேட்டரின் உண்மையான நோக்கம் என்ன. முதலில் வந்த விண்கலம் கொண்டுவந்த அந்த ரகசிய பொருள் என்ன. இந்த ஆட்டத்தில் உள்நாட்டு ராணுவம் என்ன செய்கிறது. இதற்கு காமெடி, ஆக்ஷன் எனக் கலந்துகட்டி பதில்களைச் சொல்லியிருக்கிறது படம்.

The Predator

நிதானத்துடன் யோசித்து அதிரடி செய்யும் கதாபாத்திரமான க்வின் மெக்கென்னாவாக `நார்கோஸ்’ சீரீஸ் புகழ் பாய்ட் ஹொல்ப்ரோக் (Boyd Holbrook). சுற்றியிருப்பவர்கள் செய்யும் காமெடிக்கு சிரிக்கக்கூட நேரமில்லாத கதாபாத்திரம். தன் மகனைக் காப்பாற்ற இவர் எடுக்கும் முடிவுகள், காட்டும் அதிரடிகள் கைதட்டல் ரகம். ராணுவ வீரன் என்றாலே நாட்டை மிகவும் மதிப்பான், தனக்கு இடப்பட்ட கட்டளைகளை மீறாமல் இருப்பான் என்று பார்த்துப் பழகிய கதாபாத்திரமாக இல்லாமல் மிகவும் எதார்த்தமான மனிதராக ஒவ்வொரு காட்சியிலும் வந்துபோகிறார். அவருக்கு உதவிசெய்ய வரும் நண்பர்கள் குழுவின் அடாவடிகளைச் சமாளிக்க மனிதர் படும்பாடு சிரிப்பை வரவழைக்கத் தவறவில்லை.

‘ஒரு மொட்ட, ஒரு மீசை, நாலஞ்சு ஸ்கூல் பசங்க’ என்று ரஜினியின் பழைய பன்ச்போல இணையும் அந்த நண்பர்கள் குழுதான் படத்தையே தாங்கிப் பிடிக்கிறது. ஏன், சூப்பர்ஹிரோஸ்தான் டீமாக சேர வேண்டுமா, முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் இந்நாள் குற்றவாளிகளான நாங்கள் சேரக்கூடாதா என்று சாகசம் காட்டுகிறது இந்த அணி. ப்ரிடேட்டர்களைப் பார்த்து முதலில் பயந்துவிட்டு, பின் 5 நிமிடங்கள் மட்டுமே பழகிய நண்பனுக்காக அதை வேட்டையாடவும் அவன் மகனை மீட்கவும் உதவி செய்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் பாத்திரப்படைப்பும் அதற்கான சரியான நடிகர்களைத் தேர்ந்தெடுத்ததும் அருமை. அவர்களுக்கு இடையேயான உரையாடல்கள் கிச்சுக்கிச்சு மூட்டவும் தவறவில்லை. தாங்கள் தோன்றும் அனைத்துக் காட்சிகளிலும் ரசிக்க வைக்கும் அவர்களுக்கு இன்னமும் கூடுதல் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாமே?

The Predator

கதாநாயகி ஒலிவியா முன். இந்தக் கூட்டத்தில்  மாட்டிக்கொண்டு விழிபிதுங்கும் உயிரியல் ஆசிரியர் கதாபாத்திரம். ப்ரிடேட்டரை முதன் முதலில் ஆராய்ச்சிக் கூடத்தில் பார்த்து ஆச்சர்யப்படுகிறார்; யாரோ முகம் தெரியாத விஞ்ஞானியின் வேண்டுகோளுக்கு இணங்க ப்ரிடேட்டரை கொல்ல அதன் பின்னே ஓடுகிறார்; பின்னர், ப்ரிடேட்டர் வந்த நோக்கத்தைக் குறித்து கிளாஸ் எடுக்கிறார்; அதைத் தடுக்க போர் புரிகிறார் எனக் கொஞ்சம் காதில் பூ சுற்றும் ரோல்தான். என்னதான் இவர் நாய் வளர்ப்பவர் என்றாலும், வேட்டையாட வந்த ஏலியன் நாய்களை ஏதோ எதிர்வீட்டு நாய்கள் போல டீல் செய்வது எல்லாம்... அடப்போங்க பாஸ். ஜீனியஸ் சிறுவன் ரோரியாகத் தோன்றும் ஜேகப் ட்ரெம்ப்ளே கவனம் ஈர்க்கிறார். ஆட்டிஸம் பாதித்த சிறுவனாக, அதே சமயம் ஜீனியஸாக அவர் செய்யும் விஷயங்கள் அப்ளாஸ். முக்கியமாக ஹேலோவீன் பண்டிகைக்கு ஏலியன் ஷீல்டை மாட்டிக்கொண்டு இவர் செய்யும் அடாவடிகள் அட்டகாசம். ஆனால், பிற்பாதியில் ராணுவ அதிகாரிகள், விஞ்ஞானிகளுக்கே புரியாத ஏலியன் டெக்னாலஜியை இவர் ஜஸ்ட் லைக் தட் இயக்குவது எல்லாம் த்ரீ மச்!

The Predator

முதல் ஒரு மணிநேரம் சிரிக்கவும் வைத்து சாகசமும் காட்டும் படம், பின்னர் டெம்ப்ளேட் ஆக்ஷன் படமாக மாறிவிடுகிறது. அத்தனை பாதுகாப்பின் கீழ் இருக்கும் விண்கலத்துக்குள் ஐந்தாறு நபர்களை மட்டும் வைத்துக்கொண்டு உள்ளே நுழைவதும், மொத்த ராணுவ வீரர்களையும் சுட்டு வீழ்த்துவதும்... ``இன்னும் எத்தனை படங்களுக்கு இதையே செய்யப் போகிறீர்கள் ஹாலிவுட்?” என்று கேட்க வைக்கிறது. அதிலும் வேட்டையாட வந்த அசாஸின் ரக ப்ரிடேட்டர் இவர்களுக்குச் சில நிமிடங்கள் ஹெட்ஸ்டார்ட் வழங்குவது எல்லாம் நம்ம ஊர் மசாலா. அர்னால்டு நடித்த ப்ரிடேட்டரின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம் அந்த யுத்தத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்றே நமக்குத் தெரியாது. அழிக்கவே முடியாத அந்த ஏலியனைப் பாடுபட்டு வெற்றிகொள்ளும் அர்னால்டு கதாபாத்திரம் உண்டாக்கிய பதைபதைப்பை மற்ற ப்ரிடேட்டர் (இதையும் சேர்த்துத்தான்) படங்கள் கடத்தத் தவறுகின்றன.

The Predator

அர்னால்டு தன் ப்ரிடேட்டர் படத்தின் இறுதிக்காட்சியில், ப்ரிடேட்டரைப் பார்த்து ``What the hell are you?” என்று கேட்கும் வசனம் மிகப் பிரபலம். அதைச் சாகும் நிலையில் இருக்கும் அந்த ப்ரிடேட்டர் நக்கல் செய்யும். என்னவென்றே தெரியாத ஜந்துவை வீழ்த்திவிட்டு கோபத்துடன் அவர் கேட்கும் அந்தக் கேள்வி அத்தனை மாஸாக இருக்கும். இந்தப் பாகத்தில் ப்ரிடேட்டர் குறித்து அத்தனை விஷயங்கள் தெரிந்த பின்னரும், இறுதிக்காட்சியில் ஹீரோ அதே டயலாக்கைப் பேசுவது என்ன லாஜிக்கோ. அது சரி, அது மட்டுமேவா இந்தப் படத்தின் பிரச்னை?

லைலா மஜ்னு திரைப்படத்தின் விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close