Published:Updated:

``தப்பு நடந்தா நான் வருவேன்... கணக்க நேர் செய்வேன்!” சூப்பர் ஹீரோல இது எந்த வகை? #TheEqualizer2

ர.சீனிவாசன்
``தப்பு நடந்தா நான் வருவேன்... கணக்க நேர் செய்வேன்!” சூப்பர் ஹீரோல இது எந்த வகை? #TheEqualizer2
``தப்பு நடந்தா நான் வருவேன்... கணக்க நேர் செய்வேன்!” சூப்பர் ஹீரோல இது எந்த வகை? #TheEqualizer2

CBS தொலைக்காட்சியில் `The Equalizer' என்ற பெயரில் 1985 முதல் 89 வரை ஒரு தொடர் ஒளிபரப்பாகிறது. அது அப்படியே தூசுத் தட்டப்பட்டு 2014 ம் ஆண்டு `The Equalizer' என்று அதே பெயரில் படமாக வெளியாகிறது. டென்சல் வாஷிங்டன் ஹீரோ. அப்போது வெளியான கமர்ஷியல் ஆக்ஷன் மசாலாக்களில் அதிகம் வசூலைக் குவித்த படம், டென்சலுக்கும் `ஆக்ஷன் ஹீரோ' பட்டத்தைப் பெற்று தருகிறது. அப்படி என்ன விசேஷம் அதில் என்று கேட்டால், சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டு தவறு செய்பவர்களைத் தண்டிக்கும் ஹீரோ என்று பழைய `நான் சிகப்பு மனிதன்' காலத்து சூப்பர்ஹீரோ ஒன்லைன்தான். முதல் பாகம் வெளிவருவதற்கு 7 மாதங்களுக்கு முன்னரே 2 ம் பாகம் குறித்து முடிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது அதன் 2 ம் பாகம் The Equalizer 2 (#EQ2) என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.

முன்னாள் மெரைன் மற்றும் இன்டலிஜன்ஸ் ஆபீஸரான ராபர்ட் மெக்கால் (டென்சல் வாஷிங்டன்) டாக்ஸி டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார். ஆனால், யாருக்கும் தெரியாமல், அதிகாரத்தில் இருக்கும் தன் தோழி சுசன் ப்ளம்மர் (மெலிஸ்ஸா லியோ) உதவியுடன் பாதிக்கப்படும் மக்களுக்கு ரகசியமாக உதவும் ஈக்வலைசராகத் திரிகிறார். இந்த நிலையில் சுசன் கொள்ளையர்கள் இருவரால் மூர்க்கமாகத் தாக்கப்பட்டு இறந்து போகிறார். சுசன் ப்ளம்மரின் இறப்பு சாதாரண கொள்ளைச் சம்பவம் இல்லை என்பதை உணரும் மெக்கால், சுசன் இறுதியாக விசாரித்துக் கொண்டிருந்த கொலை வழக்கு ஒன்றுக்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறது என்பதைக் கண்டறிகிறார். உண்மையில் சுசனை கொன்றவர்கள் யார். அவர்களுக்கும் மெக்காலுக்கும் என்ன சம்பந்தம். மெக்காலின் ஈக்வலைசர் அவதாரம் தொடர்கிறதா, விடை திரையில்...

ஆக்ஷன் படமாகவே இருந்தாலும், முதல் பாகம் சற்றே மெதுவாக நகரும். நிறைய கதாபாத்திரங்கள், ஆங்காங்கே மெலோ டிராமா, சென்டிமென்ட் என கமர்ஷியல் சினிமாவாக அதை நகர்த்தியிருப்பார்கள். அதே டெம்ப்ளெட்டை இதற்கும் பொருத்தியிருக்கிறார்கள். தன் சகோதரியின் ஒரே ஓவியத்தை அரசாங்கம் தவறுதலாக ஏலம் விட்டுவிட்டதால் அதற்காகத் தள்ளாத வயதிலும் கோர்ட்டு படியேறும் முதியவர், கணவன் கடத்திச் சென்றுவிட்ட பெண் பிள்ளைக்காக அழும் புத்தகக்கடை பெண், மெக்காலின் பயணிகளாக வரும் முதல் முறை போருக்குச் செல்லும் ராணுவ வீரர், உயர்கல்விக்கு இடம் கிடைத்ததும் தாய்க்கு போன் செய்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் மகள் என ஒரு சில காட்சிகளில் வரும் கதாபாத்திரங்கள்கூட மனதில் நிற்கின்றன. முக்கியமாகப் படத்தின் பெரும்பாலான காட்சிகளில் வரும் மெக்காலின் அபார்ட்மென்டில் குடியிருக்கும் கறுப்பினச் சிறுவன் மைல்ஸ் கவருகிறான். ஓவியம் கற்க கல்லூரி செல்வதா, தன் அண்ணனை கொன்றவர்களைப் பழிவாங்க கேங்ஸ்டர்களுடன் சேர்வதா எனக் குழம்பும் இடத்தில், மெக்கால் அவன் மனதை மாற்றும் அந்தக் காட்சி, படம் நெடுக அவர்கள் இருவரும் தோன்றும் காட்சிகள், அவ்வளவு ஆக்ஷன், த்ரில்லுக்கு மத்தியிலும் கவிதை வாசிக்கிறது.

படத்தின் மிகப்பெரிய பலம் ராபர்ட் மெக்காலின் கதாபாத்திரம். OCD-யின் பாதிப்பு கொண்டவன் போல எல்லாவற்றிலும் சுத்தமாக இருப்பது, ஒரு கோட்டை வரைந்துகொண்டு அதைத் தாண்டாமல் வாழ்வது என வித்தியாசமான ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருகிறார். இன்டர்ன்ஷிப்பிற்கு வந்த பெண்ணுக்குத் தொந்தரவு கொடுத்த நிறுவன ஆட்களைத் துவம்சம் செய்யும் அந்தச் சண்டைக் காட்சி, படத்தின் ஆரம்ப காட்சியில் இஸ்தான்புல் வரை சென்று ஓடும் ரயிலில் புத்தகக்கடை பெண்ணின் மகளை மீட்கும் அந்தக் காட்சி, டாக்ஸியில் பயணியாக ஏறும் கூலிப்படை கொலைகாரனை வீழ்த்தும் அந்தக் காட்சி போன்றவை ஆக்ஷன் `பொக்கே'கள். அதேபோல, மெக்காலேவின் அபார்ட்மென்டுக்குள் வரும் ஆட்களிடம் சிறுவன் மைல்ஸ் மாட்டிக் கொள்ளாமல் இருக்க, தொலைவிருந்தே மெக்காலே காய்களை நகர்த்தும் அந்த சீக்குவன்ஸ் இதயத்துடிப்பை எகிற வைக்கிறது.

இவ்வளவு பாசிட்டிவ் விஷயங்கள் இருந்தும் படம் ஒரு டெம்ப்ளேட்டிற்குள் அடைபட்டுக்கிடக்கிறது என்பதை நன்கு உணர முடிகிறது. ஒரு எமோஷனல் காட்சி வந்தால், அடுத்து சண்டைக் காட்சி வந்தே தீரும்...  வசனங்கள் அதிகமாக வரும் காட்சி வந்தால், மீண்டும் பின்னால் ஒரு சண்டையோ, ட்விஸ்டோ வரும் என நம் ஹீரோவின் கதாபாத்திரம் போலவே இவர்களும் கோடு போட்டுக் காட்சிகளை நகர்த்தியிருக்கிறார்கள். படத்தின் ஆரம்பத்தில் இருந்தே புயல் வரவிருக்கிறது என்கிற செய்தி எச்சரிக்கையாக ஒலித்துக் கொண்டேயிருக்க, எதிர்பார்த்ததுபோல கிளைமாக்ஸ் புயலுக்கு நடுவே நடக்கிறது. முதல் பாகத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற காட்சி என்றால், அது மெக்காலே தன் அறிவைப் பயன்படுத்தி எதிரிகளைப் பொறி வைத்துப் பிடிக்கும் காட்சிகள்தாம். அதுதான் அந்தப் படத்தை மற்ற ஆக்ஷன் படங்களிலிருந்து தனித்தும் காட்டியது. மெக்காலே எதிரிகள் செய்யவிருப்பதை முன்னரே யூகித்து காய்களை நகர்த்துவதில் கில்லாடி என்பதை நம் மனத்திலும் பதிய வைத்தது. ஆனால், அப்படிப்பட்ட காட்சிகள் இங்கே மிஸ்ஸிங். அதற்காக இறுதிவரை நாம் காத்திருக்க வேண்டும். 

இறந்ததாகக் கருதப்படும் எக்ஸ்-மிலிட்டர் வீரனான மெக்காலேவே தான் ஒரு போலீஸ் அதிகாரி எனக் காவலர்களை ஏமாற்றிவிட்டு நகருக்குள் நுழையும்போது, உண்மையான அதிகாரிகளான வில்லன் குரூப்ஸ், தேமேவென நிற்கும் காவலர்களை சுட்டுவிட்டு உள்ளே நுழைவதெல்லாம் எதற்கு என்று புரியவில்லை. அதேபோல இறுதியில் வில்லனும் ஹீரோவும் ஒன் டு ஒன் சண்டைக் காட்சியில் கட்டாயம் மோத வேண்டும் என்பது எழுதப்படாத விதியோ? 

சட்டத்தை தன் கையில் எடுத்து மக்களுக்கு உதவும் நாயகன் கதாபாத்திரத்துக்கு முன்னால், வில்லன் தரப்பு நியாயங்களும் சற்றே ஏற்றுக்கொள்ளும் வகையில் இருந்தாலும், அதை ஒரே காட்சியில், ஒரே வசனத்தில் கடந்து விடுவதால், நாமும் அதைப் பின்னர் மறந்துவிடுகிறோம். அதற்கு இன்னும் அழுத்தம் சேர்த்து விவாதித்து, காட்சிகளிலும் சற்று வேகம் கூட்டியிருந்தால் இந்தக் கணக்கை நேர் செய்யும் `The Equalizer 2' நூற்றுக்கு நூறு வாங்கியிருப்பான்.

இறுதிக்காட்சியில் ஈக்வலைசர் கதாபாத்திரத்தை சூப்பர் ஹீரோவாக உருவகப்படுத்தி வரைகிறான் மைல்ஸ். ``இந்த சூப்பர்ஹீரோ பறப்பானா?" என அவனிடம் கேட்கும் பெண்ணிடம் ``இவன் டாக்ஸிதான் ஓட்டுவான்" எனக் கூறுவது சூப்பர்ஹீரோக்கள் நம்முடனே வாழ்ந்துகொண்டும் இருக்கிறார்கள் என்பதை உணர வைக்கிறது. அதனால்தான் இந்த `The Equalizer' படத்தொடர் டென்சல் வாஷிங்டனிற்கு ஒரு முக்கியமான மைல்கல்!

ர.சீனிவாசன்

Creative Writer | Movie Observer | Science Enthusiast | Still Human