உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி? | Johnny English Strikes Again Movie Review

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (29/09/2018)

கடைசி தொடர்பு:20:21 (29/09/2018)

உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி?

எப்போதும் குழந்தைகளைக் கவர்ந்திழுத்துவிடும் ரோவன் அட்கின்சன் இந்தப் படத்தில் நமக்கு என்ன வைத்திருக்கிறார்? #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி?

உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி?

`மிஸ்டர் பீன்' புகழ் ரோவன் அட்கின்சனிற்கு மற்றுமொரு மணிமகுடமாக இருக்கும் என்று ஆரம்பித்த படத்தொடர் ஜானி இங்கிலீஷ். படத்தின் கதை இதுதான் என்று பிரத்தியேகமாக எதையும் கூறிவிட முடியாது. காட்சிக்குக் காட்சி ஜேம்ஸ் பான்ட் ரக ஸ்பை படங்களைக் கலாய்ப்பதுதான் இதன் வேலை. கிட்டத்தட்ட ஸ்பூஃப் பட ரேஞ்சுக்கு இறங்கி அடிப்பதுதான் ஜானி இங்கிலீஷ் ஸ்டைல். விமர்சகர்களிடம் திட்டு வாங்கினாலும் வசூலில் ஜானி இதுவரை டாப்பில்தான் வந்துள்ளார். ஜானி இங்கிலீஷ், ஜானி இங்கிலீஷ் ரீபார்ன் ஆகிய இரண்டு படங்களைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது பாகமாக வெளியாகி இருக்கிறது ஜானி இங்கிலீஷ் ஸ்ட்ரைக்ஸ் அகெய்ன். எப்போதும் குழந்தைகளைக் கவர்ந்திழுத்துவிடும் ரோவன் அட்கின்சன் இந்தப் படத்தில் நமக்கு என்ன வைத்திருக்கிறார்? #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி?

ரோவன் அட்கின்சன்

பிரிட்டனில் நிகழும் ஒரு சைபர் அட்டாக், அப்போது அன்டர்கவர் சீக்ரட் ஆபரேஷனில் இருக்கும் ஏஜன்ட்களின் முழு விவரங்களைப் பகிரங்கமாக உலகுக்குத் தெரியப்படுத்துகிறது. இதை நிகழ்த்திய ஹேக்கரை கண்டுபிடிக்க ஓய்வுபெற்ற ஏஜன்ட் ஒருவனின் உதவியை பிரதமர் (எம்மா தாம்ப்ஸன்) நாட வேண்டிய நிலை. தன் ஓய்வு வாழ்க்கையில் ஒரு பள்ளியில் புவியியல் ஆசிரியராக இருக்கும் முன்னாள் ஏஜென்ட் ஜானி இங்கிலீஷிடம் (ரோவன் அட்கின்சன்) இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. டிஜிட்டல் உலகில் ஜித்தனாக இருக்கும் அந்த ஹேக்கரை நெருங்க, முழுக்க முழுக்க டிஜிட்டல் கேட்ஜெட்ஸ் எதுவுமின்றி, பழங்கால டெக்னிக்கல் சமாசாரங்கள் கொண்டு, தன் பழைய உதவியாளர் பஃப் (பென் மில்லர்) உதவியுடன் களமிறங்குகிறார் ஜானி இங்கிலீஷ். மிஷனில் வெற்றி பெற்றாரா?

படத்தின் மிகப்பெரிய பலம் ரோவன் அட்கின்சன். தட்டுத் தடுமாறும் உடல்மொழி, அப்பாவியாகச் செய்யும் குறும்புத்தனங்கள், அறியாமலே பல செயல்கள் புரிந்து சிக்கலில் மாட்டிக்கொள்வது, இறுதியில் அது சரியான ஒன்றாகவும் முடிவது என ஜானி இங்கிலீஷ் தொடரின் முந்தைய படங்களின் அதே டெம்ப்ளேட்தான் இங்கேயும். இருந்தும் அதில் கொஞ்சம்கூட தளர்ச்சி இல்லை. குறிப்பாக அதீத ஆற்றல் தரும் மருந்தை உட்கொண்டு, மீண்டும் பழைய மிஸ்டர் பீன் நடனத்தை ஆடும் அந்தக் காட்சி, தியேட்டரையே கலகலக்க வைக்கிறது. முன்னர், தனக்கு வயதாகிவிட்டதால் குழந்தைகளின் சூப்பர் ஸ்டாரான மிஸ்டர் பீனாக இனி நடிக்கப் போவதில்லை என்று தடாலடியாக அறிவித்து அனைவரையும் சோகக்கடலில் ஆழ்த்தினார். ஆனால், இந்த மிஸ்டர் பீன் நடனத்தை மீண்டும் திரையில் பார்ப்பவர்கள், மனிதர் ஏன் மிஸ்டர்.பீனிற்கு பை-பை சொன்னார் என்று யோசிப்பார்கள். உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்!

Johnny English Strikes Again

செல்போன் திருடுவதற்காக ஹோட்டலில் அதகளம் செய்வது, கப்பலில் காந்த ஷூக்கள் மாட்டிக்கொண்டு திரிந்து வகையாகச் சிக்கிக்கொள்வது, விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு ஒரே இடத்தில் நிற்பதாக நினைத்துக்கொண்டு தெருதெருவாகத் திரிவது, இறுதிக்காட்சியில் பழங்கால போர் உடையை அணிந்துகொண்டு திண்டாடுவது எனக் குறிப்பிட்டு சொல்லும்படியான நகைச்சுவை காட்சிகள் நிறையவே உண்டு. ஜானி இங்கிலீஷின் உதவியாளராக வரும் பஃப் கதாபாத்திரத்துக்கு மற்ற இரண்டு படங்களில் என்ன வேலையோ, அதேதான் இந்தப் படத்திலும். ஜானி இங்கிலீஷ் முட்டாள்தனமாகச் செய்யும் விஷயங்களுக்கு நடுவே ஓர் சாதாரண அதிகாரியாக இவர் செய்யும் விஷயங்கள்தாம் துப்புத் துலங்க உதவும். இறுதியில் ஜானியின் கிறுக்குத்தனங்கள் அதனோடு இணைந்து பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும். அதில் சிறிதும் மாற்றம் செய்யாமல் இந்தப் படத்தையும் கடத்துகிறார்கள். 

Johnny English Strikes Again

டிஜிட்டல் மயமாகிவிட்ட உலகில் ஏதோ ஒரு மெமரியில் அடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் டேட்டாக்களும் விலைமதிப்பானவை. அதை வைத்துப் பணம் பண்ணும் சிலிக்கன் வேலி நிறுவனங்கள், பவருக்கும் (அதிகாரத்துக்கும்) ஆசைப்பட்டால் என்ன நடக்கும் என்ற சிரீயஸான ஒன்லைன் கொண்ட படம் இது. ஆனால், ரோவன் அட்கின்ஸனின் ஜானி இங்கிலீஷ் கதாபாத்திரத்தாலும், முடிந்தவரை நகைச்சுவை சேர்த்து ஜனரஞ்சகமான படமாகத் தர வேண்டும் என்ற முனைப்பாலும் காமெடி கதையாக திரையில் விரிகிறது ஜானி இங்கிலீஷ் ஸ்ட்ரைக்ஸ் அகெய்ன். அதிலும் எந்நேரமும் தன்னுடைய செயற்கை நுண்ணறிவுடன் பேசிக்கொண்டு, எல்லாவற்றையும் நொடியில் முடித்துவிடும் அந்த வில்லன் கதாபத்திரத்தை ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் போன்றே வடிவமைத்து இருக்கிறார்கள். அனலாக் (டிஜிட்டலல்லாத பழங்கால டெக்னாலஜி முறை) டெக்னாலஜி முறையால் யாருக்கும் எந்தப் பாதிப்புமில்லை. அதை வைத்து டிஜிட்டல் சக்தி படைத்த வில்லனை தவிடு பொடியாக்கலாம் என்பதெல்லாம் சரிதான். ஆனால், அதற்காக எல்லா டிஜிட்டல் கேட்ஜட்ஸும் குற்றங்களுக்குத்தான் உதவுகிறது, அதை கன்ட்ரோல் செய்யும் பலம் மற்றும் பணம் படைத்தவர்கள் அனைவரும் தீவிரவாதிகள்தான் என்பது போன்ற தொனியைத் தவிர்த்திருக்கலாமே?

Johnny English Strikes Again

ஜேம்ஸ் பாண்ட் பாணி இசை காமெடிக்கு என்றாலும், ஜானி இங்கிலீஷுக்கு அது ஒரு மாஸ் விஷயமாக நன்றாகவே க்ளிக்காகி இருக்கிறது. ஸ்பை படங்களில் பறந்து பறந்து சுழல வேண்டிய கேமரா, இதில் காமெடி என்பதால் சற்று அடக்கியே வாசித்திருக்கிறது. கிளைமாக்ஸில் உலக நாடுகள் மாநாடு நடக்கும் இடத்துக்கு அப்படி ஓர் இடத்தை செட் போட்டதையெல்லாம் காமெடி படம் என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் கடந்து போக வேண்டியிருக்கிறது. ஜேம்ஸ் பாண்ட்டை கலாய்த்து படம் எடுப்பது எல்லாம் ஓகேதான். ஆனால் அதற்காக ஜானி இங்கிலீஷ் பயன்படுத்தும் அத்தனை விஷயங்களில் ஒன்றில்கூட லாஜிக் இல்லாமல் இருப்பது ஏனோ? ஸ்பூஃப் படம்தான், அதற்காக ஒரு நாட்டின் பிரதமர், சந்தேகத்தின் வலையில் இருக்கும் டிஜிட்டல் வில்லனிடம் நாட்டின் சாவியையே கொடுக்க முன் வருவதெல்லாம், குழந்தைகள்கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் பாஸ்! எது எப்படியோ குழந்தைகளை மட்டுமல்லாமல் நம்மையும் வெடித்துச் சிரிக்க வைத்து வீட்டுக்கு அனுப்புகிறார் இந்த ஜானி இங்கிலீஷ். அதற்காக இவரின் சாகசங்களை திரையரங்கில்  தாராளமாகப் பார்க்கலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்