வெளியிடப்பட்ட நேரம்: 10:08 (15/10/2018)

கடைசி தொடர்பு:10:29 (15/10/2018)

குழந்தைகளுக்கான நீதிக்கதைதான்... ஆனால், இது ஒரு பதறவைக்கும் ஹாரர் சினிமா! #Tumbbad விமர்சனம்

சபிக்கப்பட்ட நிலத்தில், சபிக்கப்பட்ட கடவுளின் செல்வத்தைக் கவர்ந்து, மூன்று தலைமுறைகளாக தன் குடும்பத்தின் வயிற்றை நிரப்ப முயலும் அவனின் பேராசையைவிட சிறியதுதான் அவன் பிறந்த தும்பாட் கிராமம். திகில், பேராசை, தைரியம்... ஹாரர் ஃபேன்டஸி படமான #Tumbbad சொல்லும் செய்தி என்ன?

குழந்தைகளுக்கான நீதிக்கதைதான்... ஆனால், இது ஒரு பதறவைக்கும் ஹாரர் சினிமா! #Tumbbad விமர்சனம்

எப்போதும் மழை பெய்துகொண்டிருக்கும் மஹாராஷ்டிராவின் தும்பாட் கிராமத்தில் வாழ்கிறது ஒரு குடும்பம். துணையிருந்த கிழவன் இறந்துவிட, கூடவே ஒரு விபத்தில் இளைய மகனும் இறந்துவிட, மீதமிருக்கும் ஒரே மகன் விநாயக்குடன் கிராமத்தைவிட்டு வெளியேறுகிறாள் அந்தப் பெண். ஆனால், விநாயக்குக்கு தும்பாட் கோயிலின் உள்ளே சபிக்கப்பட்ட `கடவுள் குழந்தை’யின் புதையலை எடுத்து பணக்காரனாக வாழ ஆசை. வருடங்கள் கழித்து இளைஞனாக மீண்டும் தும்பாட் வருகிறான். கொஞ்சம் கொஞ்சமாகப் புதையலை எடுத்து சொத்துச் சேர்க்கிறான். ஆனால், அதைச் செய்ய அவன் ஒவ்வொரு முறையும் தன் உயிரைப் பணயம் வைக்க வேண்டியிருக்கிறது. இந்நிலையில், தன் அடுத்த தலைமுறைக்கும் அதே பேராசையைக் கடத்தப் பார்க்கிறான். அதில் வெற்றி பெற்றானா, உண்மையில் அந்தப் புதையல் இருக்கும் இடத்தில் என்ன ஆபத்து இருக்கிறது, மெதுவாகவும் நிறைவாகவும் கொஞ்சம் பயமுறுத்தியும் பதில் சொல்கிறது #Tumbbad.

Tumbbad

தேவை, பேராசை இரண்டுக்குமான வித்தியாசத்தை விளக்கும் காந்தியின் சொல்லோடு தொடங்குகிறது `தும்பாட்’. அதுதான் இந்தப் படம் சொல்லும் சேதியும்கூட. தேவைக்கு எப்போதும் இந்த உலகில் எல்லாமும் கிடைக்கும். பேராசைக்கு இந்த உலகமே போதாது. இது ஏதோ குழந்தைக்கான நீதிக்கதை கணக்காகத் தோன்றினாலும், படத்தின் கதையில் சிறுவர்களே முக்கியப் பங்கு ஆற்றினாலும், இது முழுக்க முழுக்க பெரியவர்கள் பார்த்துப் பயப்பட வேண்டிய ஹாரர் படம். இதுவரை இந்திய சினிமா அவ்வளவாகப் பயன்படுத்தாத கதைக் களத்தை தன்னுடையதாக்கி, காட்சிப்படுத்துவதில் எவ்வித சமரசமும் இன்றி நிஜமாகவே திகிலூட்டுகிறது தும்பாட். ஒரு நாவல் போல அத்தியாயங்களாக விரியும் கதை மூன்று காலகட்டங்களில் நடக்கிறது. இதில் முதல் அத்தியாயம் ஒரு மர்ம நாவலின் தொடக்கம் என்றால், இரண்டாவது குடும்ப விருப்பு, வெறுப்பு, மனிதர்களின் பேராசை ஆகியவற்றைக் குறித்து விவரிக்கிறது. இறுதி அத்தியாயம் திரும்பப் பதறவைக்கும் ஹாரர் வடிவம் எடுத்து எதிர்பார்த்திராத திருப்பத்துடன் முடிகிறது.

Tumbbad

தும்பாட் திரையில் விரியத் தொடங்கிய முதல் சில நிமிடங்களின், அங்கே இருக்கும் அந்தக் குடும்பத்தின் வாழ்வியல் நம்மைக் குழப்பியடிக்கிறது. அதிலும் அந்தச் சபிக்கப்பட்ட குழந்தையின் முன்கதை முடிந்தவுடன் வரும் அந்தக் குடும்பம் குறித்த தொடக்கக் காட்சி யாரும் யோசிக்கத் தயங்கும் விஷயம். அதிலிருந்து மீளும் முன்னரே, அந்தக் குடும்பத்தின் ரகசியக் கைதியான அந்த பயமூட்டும் பாட்டி குறித்த ஹாரர் அத்தியாயங்கள் விரிய, அந்த இரண்டு சிறுவர்கள்போல நாமும் சற்று அரண்டுதான் போகிறோம். ஹாரர், சூப்பர்நேச்சுரல் வகை படம்தான் என்றாலும், அந்த பய அத்தியாயங்கள் அனைத்திலும் அத்தனை எதார்த்தம். முக்கியமாக ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவின் நிலை, அப்போது அங்கே வாழ்ந்த குடும்பங்களின் வாழ்க்கை என எல்லாவற்றிலும் ஒரு நம்பகத்தன்மை இழையோடுகிறது.

தும்பாட் கோயிலில், அந்தக் கிணற்றின் கீழே நடக்கும் புதையல் தொடர்பான அத்தனை காட்சிகளும் படத்துக்கு மிக முக்கியமானவை. அதில் சற்றுப் பிசிறுத்தட்டினாலும், படம் பார்ப்பவர்களுக்கு அது ஹாரர் உணர்வைக் கொடுக்காமல் சிரிப்பை வரவழைத்துவிடும். அதைப் படம் சரியாகச் சமாளித்திருக்கிறது. அதற்கு மிக முக்கியக் காரணங்கள் படத்தின் ஒளிப்பதிவாளர் பங்கஜ் குமாரும், கலை இயக்குநரும். மழையும், இடியும் சூழ, ஒருவித இருட்டோடு, மெல்லிய பயத்தைப் பரவவிடுகின்றன தும்பாட் கிராமத்தின் காட்சிகள். இந்தியாவில் இதுவரை வெளிவந்த ஹாரர் படங்களிலிருந்து, தும்பாட் தனித்துத் தெரிய இந்தக் காட்சிகள் பெரிதும் உதவியிருக்கின்றன. அட்மாஸ்பெரிக் த்ரில்லராக (Atmospheric Thriller) தோன்றும் இந்த ஒவ்வோரு காட்சியும் ஓவியம் என்றால், புனே நகரில் அந்தக் குறுகலான வீட்டில் அரங்கேறும் குடும்ப டிராமாக்கள் படமாக்கப்பட்ட விதம் இன்னமும் ஆச்சர்யமூட்டுபவை. வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இதை சாத்தியமாக்கிய படக்குழுவை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

Tumbbad

முதல் பாதியில் மிரட்டும் அந்தக் கிழவி, வெள்ளைக்காரனின் பேராசைக்கு இசைந்து கொடுத்து பிரச்னையில் மாட்டிக்கொள்ளும் அந்த அடகுக் கடை பெரியவர், தும்பாட் சென்று புதையல் எடுத்து வருவதையே தன் குடும்பத் தொழிலாகப் பாவித்து, தன் மகனை அதற்குத் தயார் செய்யும் விநாயக், அப்பாவின் சொல்கேட்டு அதுவரை நல்ல பிள்ளையாக நடந்துவிட்டு, ஒரு கட்டத்தில் அவரையே எதிர்க்கும் அந்த மகன் கதாபாத்திரம், முதன்முதலாக தன் மகனுக்கு (நமக்கும்தான்) அந்தப் புதையல் கிணற்றின் உள்ளே என்ன இருக்கிறது என்று விநாயக் காட்டும் அந்தக் காட்சி, இறுதியில் மீண்டும் அதே கிணற்றில் நடக்கும் களேபரங்கள்... எனப் படத்தில் சுவாரஸ்யம் சேர்க்கும் விஷயங்கள் நிறையவே உண்டு. ஆனால், ஒரு சில இடங்களில், காட்சியின் நேர்த்தி மற்றும் படமாக்கப்பட்ட விதத்தைக் கண்டு மெய்சிலிர்க்கும்போது அந்த ஹாரர் உணர்வு சற்றே குறைந்துவிடுகிறதோ என்றும் தோன்றாமல் இல்லை.

Tumbbad

முதல் அத்தியாயம் டெரராக விரிய, இறுதி அத்தியாயமும் அதை ஓவர்டேக் செய்யும் வகையில் நிகழ்ந்து முடிந்துவிட, இரண்டாவது அத்தியாயம் மட்டும் செல்ஃப் எடுக்காமல் திணறுகிறது. ஆண் திமிருடன், அத்தனை சொத்துகளுடன், விநாயக் அடிக்கும் கும்மாளங்கள் ஏனோ நம்மூர் சீரியல்களையே நினைவூட்டுகின்றன. அந்த இரண்டாவது அத்தியாய டிராமாக்களுக்கு இன்னும் கொஞ்சம் கடிவாளம் போட்டிருக்கலாமே ஜி. ஆனால், படம் இரண்டு மணிநேரங்களுக்கும் குறைவாகவே ஓடுவதால், அதைப் பொறுத்துக் கொள்ளலாம். ஆணாதிக்கம், சாதியுணர்வு, பேராசை ஆகியவை நிரம்பிய மனிதன், கொடிய பேய்களைக் காட்டிலும் ஆபத்தானவன் என்பதை வலியுறுத்துகிறது `தும்பாட்’. விநாயக்காக மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சோஹம் ஷா. இந்தத் திரைப்படத்தைத் தயாரித்திருப்பவரும் அவரே.

Tumbbad

சாதாரண நீதிக்கதையை, டார்க் ஹாரராக மாற்றியிருந்தாலும்… இறுதியில் ஒரு ட்விஸ்ட் வைத்து நம்மை ஆச்சர்யப்படுத்தியிருந்தாலும்... கதை நடக்கும் கதைக்களத்தை பலர் தங்களுடன் பொருத்திப் பார்க்க முடியாமல் தவிக்கலாம். மற்ற ஜானர் படங்களைவிட ஹாரர், த்ரில்லர் படங்களில் நாம் கதை மாந்தர்களோடு ஒன்றிப்போவது, பயணிப்பது என்பது மிகவும் முக்கியம். அப்போதுதான் அவர்களின் பதற்றம் நமக்கும் தொற்றிக்கொள்ளும். இது நிகழப் படத்தின் கதைக்களமும் மிகவும் முக்கியமான விஷயம். `தும்பாட்’ அந்த விஷயத்தில் சறுக்கியிருக்கிறது. இருந்தும், மேக்கிங் மற்றும் சுவாரஸ்யத்துக்காக சமகால இந்திய ஹாரர் சினிமாக்களில் ஒரு முக்கியமான இடத்தைத் தனதாக்கிக் கொள்கிறது இந்த `தும்பாட்’. அதற்காகவே இந்தக் கிராமத்துக்கு ஒரு விசிட் அடிக்கலாம்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்