மீண்டும் ஹாக்வர்ட்ஸ்... ரௌலிங்கின் மந்திர விரல்கள் #TheCrimesOfGrindelwaldல் என்ன செய்திருக்கிறது? | Film Review - Fantastic Beasts: The Crimes of Grindelwald

வெளியிடப்பட்ட நேரம்: 11:42 (15/11/2018)

கடைசி தொடர்பு:12:26 (15/11/2018)

மீண்டும் ஹாக்வர்ட்ஸ்... ரௌலிங்கின் மந்திர விரல்கள் #TheCrimesOfGrindelwaldல் என்ன செய்திருக்கிறது?

ஐந்து பாகங்களாக வெளிவர இருக்கும் Fantastic Beasts and Where To find Them படத்தின் இரண்டாம் பாகம் , கதைக்களத்தை இன்னும் அகலமாக்கி, அடுத்த தளத்துக்கு நகர்ந்திருக்கிறது. ஆனால் இந்த வேகம் போதுமா? (SpoilerFree)

மீண்டும் ஹாக்வர்ட்ஸ்... ரௌலிங்கின் மந்திர விரல்கள் #TheCrimesOfGrindelwaldல் என்ன செய்திருக்கிறது?

ஜேகே ரௌலிங் தன் மந்திர விரல்களை வைத்து ஹாரி பாட்டர் சீரிஸ் கதைகளை எழுத ஆரம்பித்ததிலிருந்தே, அவருக்கு எல்லாமே நற்செய்திதான். ஹாரி பாட்டர் படங்களுக்குச் சில ஆண்டுகளுக்கு முன் நிகழும் கதையான Fantastic Beasts and Where To find Them திரைப்படம் ஹாரி பாட்டரைப் போல், இன்னும் பேசப்படவில்லை. ஹாரி பாட்டர் புத்தகங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சினிமா. Fantastic Beasts and Where To find Them திரைப்படமாக மட்டுமே வெளியாகிக்கொண்டிருக்கிறது. நியூட் ஸ்கமேண்டரின் வாழ்க்கையில் நிகழும் விஷயங்களை தொட்டுச் செல்கிறது Fantastic Beasts and Where To find Them . இரண்டு பிரமாண்டங்களுக்குமான இடைவெளியை, வெள்ளியன்று வெளியாகும் இரண்டாம் பாகம் The Crimes of Grindelwald மூலம் இன்னும் சற்று குறைத்திருக்கிறார்கள். 

The Crimes of Grindelwaldமேஜிக் தெரியாத மனிதர்கள் ( No-maj ) கண்களிலிருந்து மறைந்தே வாழ்கிறது மந்திரக்காரர்களின் உலகம். இவ்வளவு வலிமை இருக்கும் நாம் ஏன் மறைந்து வாழ வேண்டும் என்பது கிரிண்டல்வால்டின் விருப்பம். நாம் ஏன் மறைந்து வாழ வேண்டும், நாம் அவர்களை ஆள வேண்டும் என்பது கிரிண்டல்வால்டின் சாய்ஸ். அதை எப்படி ஹாக்வர்ட்ஸ் குழு முறியடிக்கிறது என்பதுதான் Fantastic Beasts: The Crimes of Grindelwald படத்தின் கதை. சென்ற பாகம், அமெரிக்காவின் நியூயார்க் என்றால், இந்த முறை கதையின் களம் பிரான்ஸின் பாரிஸ்.

ஹாரி பாட்டரில் வரும் சீனியர் கதாபாத்திரங்களையும், Fantastic Beasts and Where To find Them முதல் பாகத்தில் வரும் கதாபாத்திரங்களையும் சரியான விகிதத்தில் கலந்து ஒரு நாஸ்டால்ஜியா ஃபீலுடன் கூடிய கதை நகர்வுக்கு வழி செய்தியிருக்கிறார் எழுத்தாளரான ஜேகே ரௌலிங். Fantastic Beasts உலவ வேண்டும் என்பதற்காக அந்த சர்க்கஸ் காட்சிகளும், வீடு காட்சிகளும் திணிக்கப்பட்டு இருந்தாலும், அவை சுவாரஸ்யமாகவே இருக்கின்றன.

Johnny Deppமுதல் பாகத்தின் இறுதியில் கிரிண்டல்வால்ட் ( ஜானி டெப் ) கைது செய்யப்பட்டாலும், ஐந்து பாகங்களின் வில்லனான அவரை ஜஸ்ட் லைக் தட் சிறையிலேயே வைத்துவிடுவார்களா என்ன? எதிர்பார்த்தது போலவே தப்பிக்கிறார். ஆனால், ஜானி டெப்பின் உடல்மொழியும், கொஞ்சம் ட்விஸ்டும் அக்காட்சிகளில் அபாரம் (டிரெய்லரில் வருபவை ). கிரிண்டல்வால்ட் , இனி தன் நம்பிக்கைக்கு உரியவர்கள் மூலம் முதல் பாகத்தின் சைலன்ட் வில்லனான அந்தச் சிறுவனைத் தேட வேண்டும். நியூட் ஸ்கமேண்டரும் (எட்டி ரெட்மெய்ன் ) தன் நண்பர்களுடன் அதே சிறுவனைத் தேடுகிறார். இன்னொரு குழுவும் தேடுகிறது. இறுதியில் பாரிஸ் என்ன ஆகிறது, அடுத்த பாகத்துக்கான லீட் போன்றவற்றுடன் படம் நிறைவுபெறுகிறது.

2016ம் ஆண்டு வெளியான முதல் பாகத்துக்குப் பின் எட்டி ரெட்மெய்ன் நடிக்கும் அடுத்த படம் இதுதான். தி தியரி ஆஃப் எவரிதிங், டேனிஷ் கேர்ள் என நடிப்பில் அசுரபலத்தைக் காட்டும் எட்டிக்கு இந்தப் படம் சரியான தீனியா என்றால் சந்தேகமே. மிகப்பெரிய கதாபாத்திரப் பட்டியலுக்குள் அவ்வப்போது தனக்கான இடத்தைப் பெறுவதே போதும் என்றாகிவிடுகிறது அவருக்கு. முதல் பாகத்தில் மனிதர் அந்த மிருகத்துடனான சில நடவடிக்கைகளை செய்து அசத்தியது கண் முன் வருகிறது. நியூட்டின் காதலி, நண்பன், நண்பனின் காதலி எல்லாம் அதேதான், சின்னச் சின்ன டிவிஸ்ட்டுகளுடன்.

The Crimes of Grindelwaldஹாரி பாட்டருக்கும், Fantastic Beasts and Where To find Them படங்களுக்குமான முதல் தொடர்பை வெற்றிகரமாக லாஞ்ச் செய்துவிட்டார்கள். ஆம், ஆல்பஸ் டம்பிள்டோராக ஜூட் லா அட்டகாசமாக இருக்கிறார். டம்பிள்டோரின் சிறுவயது கதாபாத்திரத்தில் அட்டகாசமாகப் பொருந்துகிறார். ஹாரி பாட்டர் படங்களின் ஆணிவேரான ஆல்பஸ் டம்பிள்டோருக்கு மிகவும் பிடித்த மாணவன் நியூட் தான் என்பது இத்தனை நாள்களாக பாட்டர் ரசிகர்களுக்குத் தெரியும். அதைக் கடந்து இதில் பல சுவாரஸ்யங்களைச் சேர்த்திருக்கிறார்கள். முதல் பாகத்தில் நியூட் ஏன் அமெரிக்கா வந்தார், இதில் ஏன் பாரிஸ் என எல்லாவற்றுக்கும் விளக்கம் சொல்லப்படுகிறது. இன்னும் சில சீனியர்களும் படத்தில் வருகிறார்கள். புரட்சியாளரான ஜேகேரௌலிங், ஏன் டம்பிள்டோர் கிரிண்டில்வால்டை கொல்ல முடியாது என்பதற்கு வைத்திருக்கும் லாஜிக் சிறப்பு.. (ஃபைனல் டிரெய்லர் )

ஹாரி பாட்டர் படங்களில் பிரிட்டிஷ் மந்திர உலகமான ஹாக்வர்ட்ஸ் மட்டுமே பேசுபொருள். இதில் இன்னும் பெரிதாக கொண்டு போக, முதல் பாகத்தில் அமெரிக்கா, இரண்டாம் பாகத்தில் பிரான்ஸ் எனக் கண்டங்கள் விரிகின்றன.

The Crimes of Grindelwald

ஹாக்வர்ட்ஸ் கட்டடம், சில நாஸ்டால்ஜியா கதாபாத்திரங்கள், படத்தில் வரும் சில சம்பவங்கள் எனச் சிறப்பாகவே இருக்கிறது இந்த இரண்டாம் பாகம். ஹாரி பாட்டரின் ரயில் பிளாட்ஃபார்ம்  சுவர் போலவே இதிலும் ஓர் அதிசயம் இருக்கிறது. ஆனால், இந்த டி20 யுகத்துக்கான வேகத்தில் அல்லாமல் , ஸ்லோ மோஷனில் இருக்கிறது. 3Dக்கு என நேர்ந்து விட்டதைப் போல், அத்தனை காட்சிகளும்  சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. VFX காட்சிகளும் தரம். ஆனால். நம் போதாத காலம், இங்கு அனைத்துத் திரையரங்குகளிலும், 2D வெர்சன்தான் வெளியாகியிருக்கிறது. கிரிண்டல்வால்ட் தப்பிக்கும் காட்சியாகட்டும், இறுதிச் சண்டைக்காட்சியாகட்டும், ஜேம்ஸ் நியூட்டன் ஹோவர்டின் இசை மிரட்டுகிறது. இதிலும் சில வசனங்கள் அட சொல்ல வைக்கிறது. சேலமண்டர்ஸ் டீம்!

படத்தின் பெரிய மைனஸ் என்றால், காட்சி நகரும் விதம்தான். மிகவும் மெதுவாக நகரும்படியான திரைக்கதை, ஒரு கட்டத்துக்கு மேல், சலிப்பை ஏற்படுத்துகிறது. இயக்குநர் டேவிட் யேட்ஸூம், ஜேகே ரௌலிங்கும் இதை அடுத்த பாகத்தில் சரி செய்வார்கள் என நம்பலாம். அதே போல், க்ரைம்ஸ் ஆஃப் கிரிண்டில்வார்டு எனப் பெயர் வைத்துவிட்டு, இதில் கிரிண்டல்வால்டின் பின்கதைக்கான விசுவல் காட்சிகள் பெரிதாக எதுவும் இல்லை. ஜானி டெப் மாதிரியான நடிகருக்கு மான்டேஜில் சிறுவயது ஆர்ட்டிஸ்ட்டை வைத்தே ஒப்பேற்றுவதெல்லாம் டூ பேட். 

 

 

ஹாரி பாட்டர் படங்களையும், Fantastic Beasts and Where To find Them படத்தைப் பார்க்காதவராக இருந்தாலும், குறைந்தபட்ச விக்கிபீடியாவைச் சற்று மொபைலில் உலுக்கிவிட்டுச் சென்றாலே, புரியும் அளவுக்கு எளிமையான கதைதான். மொத்தத்தில் பாட்டர் ரசிகர்களுக்குப் படத்தில் வரும் கனெக்ஷன்ஸ் மிகவும் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. எதையுமே பார்க்காமல், முதல் முறையாக இப்படிப்பட்ட படங்களை பார்ப்பவர் என்றால், சின்னத்தம்பி படத்தில் கவுண்டமணி திரை அரங்கில் செய்யும் நிலைதான் ஏற்படும்!.


டிரெண்டிங் @ விகடன்