``இப்படியும் ஒரு ஸ்பைடர்மேன் படம் எடுக்கலாமா?" Spiderman: Into the Spider-Verse படம் எப்படி? | Spider-Man: Into the Spider-Verse English Movie Review

வெளியிடப்பட்ட நேரம்: 13:12 (16/12/2018)

கடைசி தொடர்பு:09:52 (25/02/2019)

``இப்படியும் ஒரு ஸ்பைடர்மேன் படம் எடுக்கலாமா?" Spiderman: Into the Spider-Verse படம் எப்படி?

வெவ்வேறு பிரபஞ்சங்களின் வாயில்களைத் திறக்க நினைக்கிறான் வில்லன். அவனிடமிருந்து உலகைக் காக்க போராடுகிறார்கள் ஆறு அட்டகாச ஸ்பைடர்மேன்/வுமன்கள்.

``இப்படியும் ஒரு ஸ்பைடர்மேன் படம் எடுக்கலாமா?

ப்ரூக்ளினைச் சேர்ந்த சிறுவன் மைல்ஸ் மொரல்ஸை ரேடியோஆக்டிவ் சிலந்தி ஒன்று கடித்து விடுகிறது. ஸ்பைடர்மேனாக/சிறுவனாக மாறும் அவனுக்கு அந்த மாற்றங்கள் பயத்தைக்கொடுக்கின்றன. சுவாரஸ்யம் என்னவென்றால் குயின்ஸ் நகரில் நம்முடைய பீட்டர் பார்க்கர் ஸ்பைடர்மேன் குற்றங்களைத் தடுத்து நிறுத்தப் போராடிக்கொண்டிருக்கிறான். அவன் நம் ஹீரோ மைல்ஸுக்கு உதவ வாக்குகொடுத்த சில நிமிடங்களில் வில்லன் கிங்பின்னால் கொல்லப்படுகிறான். இறப்பதுக்கு முன்பு, மைல்ஸ் ஒரு மிஷனை ஸ்பைடர்மேனாக முடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இறந்துபோகிறான். நிர்க்கதியாய் நிற்கும் மைல்ஸுக்கு உதவ வருகிறார்கள் ஒன்றல்ல, இரண்டல்ல... ஐந்து ஸ்பைடர்மேன்/வுமன்கள். இவர்கள் எல்லாம் யார்?

Spiderman: Into the Spider-Verse

வில்லன் கிங்பின் தன் குடும்பத்தை ஒரு விபத்தில் பலிகொடுத்துவிட, நம் உலகைப் போலவே இருக்கும் வெவ்வேறு உலகங்களில் இன்னமும் உயிருடன் இருக்கும் அவன் குடும்பத்தாரை இந்த உலகுக்குக் கொண்டுவர எத்தனிக்கிறான். அவன் அதற்காக உருவாக்கும் மெஷின் வெவ்வேறு உலகிலிருக்கும் விதவிதமான ஸ்பைடர்மேன் மற்றும் வுமன்களை இங்கே கொண்டு வந்துவிடுகிறது. இவர்கள் நம் பூமியைப் போலவே இருக்கும் வெவ்வேறு பூமிகளில் (Multiverse) இருந்து வந்திருக்கும் சூப்பர்ஹீரோக்கள். இப்போது இந்த டீம் நம் மைல்ஸ் சிறுவன் ஸ்பைடர்மேனுடன் இணைந்து ஒரிஜினல் பீட்டர் பார்க்கர் கொடுத்த மிஷனை முடிக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான், அவரவர்களின் உலகுக்குத் திரும்ப முடியும். கிங்பின்னிடமிருந்து நகரையும் காக்க முடியும். தலை சுற்றுகிறதா? ஆனால், மிகவும் எளிமையான திரைக்கதை, குழந்தைகளை மனதில் வைத்து எழுதப்பட்ட கதை சொல்லும் பாணி அனைவரையுமே ஈர்க்கிறது.

இணைப் பிரபஞ்சங்கள் என்ற கூற்று பல்வேறு ஹாலிவுட் சயின்ஸ் ஃபிக்ஷன் படங்கள் வந்திருந்தாலும், அது சூப்பர்ஹீரோ படங்களில் பயன்படுத்தப்படும்போது அதன் சுவாரஸ்யம் இன்னமும் அதிகரிக்கும். அது என்ன இணைப் பிரபஞ்சங்கள் என்கிற Multiverse தியரி? விரிவாக... இங்கே படிக்கலாம்.

Spiderman: Into the Spider-Verse

இந்த Spider-Man: Into the Spider-Verse படத்தின் மிகப்பெரிய பலம் அதன் கதாபாத்திரங்கள். முக்கியமாக அந்த ஆறு ஸ்பைடர்மேன் ஹீரோக்கள். இறந்த பீட்டர் பார்க்கரின் சற்றே வயதான வெர்ஷனாக பீட்டர் B.பார்க்கர், க்வென் ஸ்டேசி ஸ்பைடர்வுமன், பன்றி வடிவ ஸ்பைடர்ஹேம், ஜப்பான் சிறுமி சூப்பர்ஹீரோ பென்னி பார்க்கர், பிளாக் அண்டு வொயிட் ஸ்பைடர்மேனான `ஸ்பைடர்-நோயர்' (Spider-Noir), இவர்களுடன் சிறுவன் மைல்ஸ் மோரல்ஸ் என அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து அமைக்கப்பட்டிருக்கிறது திரைக்கதை. அதிலும் ஸ்பைடர்-நோயர் 1930களிலிருந்து வந்தவன் என்பதால் அவன் மட்டும் பிளாக் அண்டு வொயிட்டில் இருப்பது, திரும்பச் செல்லும்போது அவன் பல வண்ணங்களைக் கொண்ட ரூபிக்ஸ் க்யூபை கொண்டு செல்வது என எண்டு கிரெடிட்ஸ் வரை சுவாரஸ்யப்படுத்துகிறார்கள். இந்த ஸ்பைடர்மேனுக்கு வாய்ஸ் கொடுத்தது வேறு யாருமல்ல! மூத்த நடிகர் நிக்கோலஸ் கேஜ்.

Spiderman: Into the Spider-Verse

புத்தகத்தை அப்படியே அனிமேஷன் படமாக மாற்றியிருக்கும் திரைமொழி, எதற்கெடுத்தாலும் எடக்குமடக்காகக் கலாய்க்கும் `டெட்பூல்' வகை கதாபாத்திரங்கள், கேப்பே விடாமல் தெறிக்க வைக்கும் மார்வெல்லின் டிரேட்மார்க் நகைச்சுவைக் காட்சிகள் என 2 மணி நேரங்களுக்கு கலர்புல் விருந்து படைத்திருக்கிறார்கள். இடையிடையே `கேப்' (Cape) வைத்திருக்கும் சூப்பர்ஹீரோக்களைக் கலாய்ப்பது, வார்னர்பிரதர்ஸின் ட்ரேட்மார்க் `That's all folks!' வசனத்தைச் சொல்லி ``இதுக்கும் கேஸ் போடுவாங்களோ?" என அவர்களையும் வம்புக்கு இழுப்பது, புகழ்பெற்ற ஸ்பைடர்மேன் வில்லன்களைக் கதையோட்டத்தில் சேர்த்துக்கொள்வது, பழைய ஸ்பைடர்மேன் படங்களின் முக்கியக் காட்சிகளை அனிமேஷனில் மீளூருவாக்கம் செய்து காட்டுவது என அடித்து நொறுக்கியிருக்கிறார்கள்.

Spiderman: Into the Spider-Verse

இது மார்வெல் ஸ்டுடியோஸ் இல்லாமல் `ஸ்பைடர்மேன்' கதாபாத்திரத்துக்குக் காப்புரிமை வைத்திருக்கும் சோனி நிறுவனம் தயாரித்திருக்கும் படம். முக்கியமாக, அனிமேஷன் படம் என்றாலும் தற்கால Performance Capturing டெக்னாலஜி எல்லாம் இல்லாமல் சாதாரண கம்ப்யூட்டர் அனிமேஷன் செய்து நடிகர்களை டப்பிங் பேச வைத்திருக்கிறார்கள். சுருங்கச் சொன்னால், இது கிட்டத்தட்ட ஒரு கார்ட்டூன் 3D படம். மார்வெல், DC காமிக்ஸ் இரண்டுமே இவ்வகை அனிமேடட் படங்களை வருடா வருடம் வெளியிடும். ஆனால், அவை திரையரங்குகளில் வெளியாகாது. சோனியின் மற்றொரு மார்வெல் காமிக்ஸ் படம் `வெனம்' இந்த வருடம் வெளியானது. அதை அடுத்து தன் ஆஸ்தான சூப்பர்ஹீரோவான ஸ்பைடர்மேனை வைத்து இந்த அனிமேஷன் படத்தை எடுத்திருக்கிறது. அதை உலகம் முழுவதும் திரையரங்கிலும் வெளியிட்டிருக்கிறது. அதற்குக் காரணம், இந்தக் கதையின் மேலுள்ள நம்பிக்கை என்றால் அது மிகையாகாது.

மார்வெல் காமிக்ஸின் பிதாமகன் ஸ்டேன்லீயின் மறைவுக்குப் பிறகு வெளியாகும் முதல் மார்வெல் காமிக்ஸ் படம் இந்த Spider-Man: Into the Spider-Verse. ஆனால், வழக்கம்போல தனக்கே உரித்தான கேமியோ ரோலில் தோன்றிக் கைதட்டல் பெறுகிறார் மனிதர். அதைத் தொடர்ந்து இறுதியில் அவருக்கு வைத்திருக்கும் ட்ரிப்யூட் கார்டு, அவர் இறந்தாலும் அவரின் படைப்புகளின் வழியே என்றும் நினைவில் இருப்பார் என்பதை உணர்த்துகிறது. அந்த மனிதரும் ஒரு வகையில் சூப்பர்ஹீரோதான்!

Spiderman: Into the Spider-Verse

சிலருக்கு இந்த கார்ட்டூன் வகை அனிமேஷன் அதுவும் 3D கண்ணாடியில் சற்றே எரிச்சல் அடையச் செய்யலாம். ஆனால், விடுமுறை நாளில் நாமும் குழந்தைகளோடு குழந்தையாக மாற இந்த ஸ்பைடர்மேன் மைல்ஸ் நமக்கு உதவுவான். சிலந்தி மனிதனாக தியேட்டருக்குப் பறக்க வேண்டிய தருணம் இது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close