ஆஃப் ஸ்பின்னர் ஐஸ்வர்யா... ஆல் அமைதி சிவகார்த்திகேயன்... மேஜிக் பலித்திருக்கிறதா? - கனா விமர்சனம் | 'kanaa' movie review

வெளியிடப்பட்ட நேரம்: 18:33 (21/12/2018)

கடைசி தொடர்பு:18:36 (21/12/2018)

ஆஃப் ஸ்பின்னர் ஐஸ்வர்யா... ஆல் அமைதி சிவகார்த்திகேயன்... மேஜிக் பலித்திருக்கிறதா? - கனா விமர்சனம்

ஆஃப் ஸ்பின்னர் ஐஸ்வர்யா... ஆல் அமைதி சிவகார்த்திகேயன்... மேஜிக் பலித்திருக்கிறதா?       - கனா விமர்சனம்

காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த விவசாயி, முருகேசன். தன் தந்தையின் இறுதிச்சடங்கின் இடையில் கூட கிரிக்கெட் ஸ்கோர் பார்க்க மறக்காதவர். அந்தளவிற்கு கிரிக்கெட் பைத்தியம்! அப்பாவிடமிருந்து மகள் கௌசல்யாவுக்கும் `கிரிக்கெட்' தொற்றிக்கொள்கிறது. ஒருமுறை, இந்திய அணி தோற்றபோது துன்பத்தில் கலங்கிய அப்பாவின் கண்களில், தான் இந்திய அணியில் ஆடி ஜெயித்து ஆனந்தக் கண்ணீர் வரவழைக்க வேண்டுமென ஆசைபடுகிறாள் கௌசல்யா. இன்னொரு புறம், வறட்சி வஞ்சித்தாலும் விவசாயத்தை விட மாட்டேன், நிலத்தையும் விற்கமாட்டேன் என அடம் பிடிக்கிறார் முருகேசன். இருவரின் பயணங்களும் இலக்கினை அடைந்ததா, அவர்களின் பாதையில் குறுக்கிடும் தடைகள் உடைந்ததா என பயணிக்கிறது திரைக்கதை.

கனா

 

கௌசல்யாவாக ஐஸ்வர்யா ராஜேஷ். அப்பாவுக்கு அன்பு மகளாக, அம்மாவுக்கு அடங்காத மகளாக, வெற்றி பெற்றிட வேண்டுமென்கிற வெறியைக் கண்களில் நிரப்பிக்கொண்டு, பந்தைச் சுழற்றி எதிரிகளை திணறடிக்கும் ஆஃப் ஸ்பின்னராக, மற்ற எல்லாவற்றுக்குமாக எல்லாமுமாய் இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். மிக கச்சிதமான தேர்வு! விவசாயி முருகேசனாக சத்யராஜ். படத்தின் நாயகன் அவர்தான்! வழக்கம் போல் அசத்தலாய் நடித்துக் கொடுத்திருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷை ஒருதலையாய் காதலித்து உருகும் முரளியாக, புதுமுகம் தர்ஷன். முகத்தில் உதயநிதியும் உடம்பில் சிவகார்த்திகேயனும் தெரிகிறார்கள். சிறுவயது கௌசல்யாவாக நடித்த சிறுமி, சிறப்பு. கோச் நெல்சன் திலீப்குமாராக சிவகார்த்திகேயன். பாத்திர வடிவமைப்பு கொஞ்சம் க்ளீசேதான், இருந்தாலும் இவ்வளவு அடக்கமான சிவகார்த்திகேயனை இதுவரை நாம் பார்த்ததேயில்லை. அம்மாவாக ரமா, சத்யராஜின் நண்பனாக இளவரசு, ஐஸ்வர்யா ராஜேஷின் கிராமத்து டீமில் விளையாடும் ஆட்கள், இந்திய அணியில் விளையாடும் பெண்கள், தர்ஷனின் நண்பர்களான சச்சின் மற்றும் டெண்டுல்கர் எல்லோருமே குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள். சச்சின் மற்றும் டெண்டுல்கர் பேசும் வசனங்கள் பெரும்பாலும் நான்-சின்க்லேயே இருப்பதால், இந்த கதாபாத்திரங்கள் படத்திற்கு தேவைதானா என்ற கேள்வியை எழுப்பிவிடுகிறது. அந்த `கைத்தட்டும்' கதாபாத்திரம் ஃபீல் குட் படங்களுக்கான முக்கிய மூலப்பொருள். மறக்காமல் சேர்த்து சுவை கூட்டியிருக்கிறார் இயக்குநர்!

'கனா'

ஒரு பக்கம், எட்டாத உயரத்திலிருக்கும் கிரிக்கெட். இன்னொரு பக்கம், எட்டிப்பார்க்க கூட ஆளில்லாத விவசாயம். இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்து கதை சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் அருண்ராஜா காமராஜ். இரு வாழ்க்கை போராட்டங்களையும் ஒரே கோட்டில் `சின்க்' செய்து அமைத்திருக்கும் திரைக்கதை, பழக்கபட்டதாய் இருந்தாலும் பார்க்க சுவாரஸ்யமாய் இருக்கிறது. வசனங்கள் படத்தின் முதுகெலும்பு. பாட்டாகவே பாடியிருக்கிறார் அருண்ராஜா. ஒன்றிரண்டு இடங்களில் அவைதான் கதையையே நகர்த்துகிறது. சில இடங்களில் மட்டும் சம்பந்தமில்லாமல், செயற்கையாய் துருத்திக் கொண்டு நிற்கிறது. திபு நினன் தாமஸின் பின்னணி இசை ஆவ்ஸம்! பாடல்கள் செம எனர்ஜி. அடுத்தடுத்த ஆல்பங்களுக்கு வெயிட்டிங் பாஸ்! தினேஷ் கிருஷ்ணனின் கேமரா, பொட்டல் காட்டின் புழுதியையும் மைதானத்தின் பிரமாண்டத்தையும் பிரமாதமாய் படம் பிடித்திருக்கிறது. குறிப்பாய், கிரிக்கெட் விளையாடும் காட்சிகளில் நிஜ கிரிக்கெட் பார்த்த உணர்வு. திரைக்கதையின் சுவாரஸ்யத்திற்கு, ரூபனின் படத்தொகுப்பும் பக்காவாய் ஒத்துழைத்திருக்கிறது.  ஸ்போர்ட்ஸ் படங்களுக்கான அதே ஃபார்மூலாவில் ஃபீல் குட் படங்களுக்கான ட்ராமாக்களால் ஆன திரைக்கதைதான். அடுத்தடுத்து என்ன நடக்குமென முன்கூட்டியே தெரிந்தாலும், சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

கனா

`கனா', உள்ளியது உள்ளிய அளவு உயரவில்லை என்றாலும், படத்தை தள்ளாது திரையில் காணலாம்.  


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close