Published:Updated:

அம்மாவைத் தேடற கதைதான்... ஆனா இப்படியா சிரிக்க வெப்பீங்க? #EnteUmmantePeru படம் எப்படி?

ர.சீனிவாசன்

தன்னைத் தொலைத்த அம்மாவைத் தேடும் ஒருவன், தொலைந்துபோன ஓர் அம்மாவிடம் தஞ்சம் அடைகிறான். காமெடி, சென்டிமென்ட் எனக் கலந்து கட்டும் #EnteUmmantePeru படம் எப்படி?

அம்மாவைத் தேடற கதைதான்... ஆனா இப்படியா சிரிக்க வெப்பீங்க? #EnteUmmantePeru படம் எப்படி?
அம்மாவைத் தேடற கதைதான்... ஆனா இப்படியா சிரிக்க வெப்பீங்க? #EnteUmmantePeru படம் எப்படி?

தன் தந்தை இறந்துவிட யாருமில்லாத அநாதை ஆகிறான் ஹமீத். நிறையச் சொத்துகள் இருந்தும் தனியாள் என்பதால் பெண் தர மறுக்கிறார்கள். இதனிடையே தன் தந்தைக்கு இரண்டு மனைவிகள் என்பது அவனுக்குத் தெரிய வருகிறது. அதில் யாரோ ஒருவர்தான் தன் தாயாக இருக்க முடியும் என்று நினைத்து அவர்களைத் தேடி செல்கிறான். ஹமீத் தன் தாயைக் கண்டறிந்தானா? அந்த இரண்டு அம்மாக்களின் வாழ்க்கை இப்போது எப்படி இருக்கிறது? இவ்வளவு சீரியஸான கதையை சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கும் படம்தான் #EnteUmmantePeru (என் அம்மாவின் பெயர்).

அறிமுகமான ஆறே வருடங்களில் சடசடவென படங்கள் நடித்துவிட்ட மலையாள உலகின் சமீபத்திய சென்சேஷன் டொவினோ தாமஸின் படம். இந்த வருடம் 'மாரி 2' உட்பட மனிதர் 7 படங்களில் நடித்துள்ளார். இதில் அப்பாவியான மகன் கதாபாத்திரம். வெகுளித்தனம்தான் கொஞ்சம் செயற்கையாகவே இருக்கிறது. அசடு வழிவது, பொய் கோபம் கொள்வது, சிணுங்குவது... அந்த பாடி லாங்வேஜுக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமே டொவினோ! கிளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே நமக்கு டொவினோ தெரிகிறார். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சாரே! ஹீரோயின் 'அறிமுகம்' சாய்பிரியாவுக்குப் பெரிதாக வேலையில்லை. ஆனால், இது ஹீரோயினுக்கான ஸ்கிர்ப்ட் இல்லை என்பதால் அது உறுத்தலாக எங்குமே தெரியவில்லை.

படத்தின் பலம் ஊர்வசிதான். படம் ஆரம்பித்து பாதிக்குமேல் வரும் கதாபாத்திரம்தான் என்றாலும், இரண்டாம் பாதி முழுக்க தோளில் சுமந்தது இந்த 'அம்மா'தான். சுயநலம்தான், கஞ்சத்தனம்தான், செய்வது எதுவுமே சரி இல்லைதான்... ஆனாலும் அவர் பக்கமே நியாயம் இருப்பதாக டொவினோவை மட்டுமல்ல நம்மையுமே நினைக்க வைக்கிறார். மீன்காரனிடம் 10 ரூபாய் கொடுத்து பேரம் பேசுவது, சிக்கன் பிரியாணி, குருமா கேட்டு லக்னோவில் டொவினோவை டார்ச்சர் செய்வது, வேண்டுமென்றே அவரை அலைக்கழிப்பது என ஏகப்பட்ட குறும்புத்தனங்கள் அவர் 'இப்படித்தான் எப்போதுமே!' என்பதைப் புரிய வைக்கின்றன. டொவினோவுக்குப் பெண் தர மறுப்பவரிடம் வாதம் செய்வது, அவர் நண்பன், அப்பாவின் நண்பன் என எல்லோரையும் ஜஸ்ட் லைக் தட் டீல் செய்வது... அந்த ஐஷு அம்மா கதாபாத்திரம் இவரை மனதில் வைத்தே எழுதப்பட்டதோ என்னவோ!

அவருக்கு அடுத்து படத்தில் ஈர்ப்பது டொவீனோவின் நண்பனாக வரும் பீரன். இரண்டாம் பாதி ஊர்வசி வசம் என்றால், முதல் பாதியைக் கரை சேர்ப்பது இவர்தான். 'புரொஃபசனல்' டான்ஸராக கல்லடிப்படுவது, சகட்டுமேனிக்கு எல்லோருக்கும் கவுன்டர் கொடுப்பது, நண்பனின் 'போலி' சென்டிமென்ட்டுக்கு உருகுவது எனக் கிடைத்த காட்சிகளில் எல்லாம் ஸ்கோர் செய்கிறார். "ஹெல்மெட் போட்டுட்டே யாருனு கேட்டா எப்படித் தெரியும்?" எனக் கேட்டுவிட்டு, வந்தவர் ஹெல்மெட்டை கழட்டியவுடன், "இப்பவும் நீங்க யாருனு தெரியல... நீங்க பேசாமா ஹெல்மெட்டே போட்டுகோங்க!" எனச் சதாய்ப்பது, "இவங்க அப்பா நான் லூலூ மால் கூப்பிடதுக்கே வரல... அவரா லக்னோ வரைக்கும் போயிருப்பார்?" என சிரியஸான காட்சியிலும் நக்கல் செய்வது, இரண்டாம் பாதியில் ஊர்வசி சொல்லும் வேலைக்கு எல்லாம் பயந்து பழைய விளக்கைத் தேய்த்தால் பூதம் வருகிறதா என 'செக்' செய்வது என அதகளம் செய்திருக்கிறார்.

இயக்குநர் ஜோஸ் செபாஸ்டியனுக்கு இது முதல் படம். தாயைத் தேடும் மகன் என்ற அரதப் பழைய கான்செப்ட்தான். ஆனால், நகைச்சுவைக் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார். அவர் எதிர்பார்த்த சென்டிமென்ட்தான் மக்கர் செய்திருக்கிறது. அவ்வளவு தூரம் ஊர்வசியும், டொவினோவும் செய்யும் அட்டகாசங்களுக்கு எல்லாம் சிரித்துவிட்டு திடீரென ஒரு சீரியஸ் காட்சியை வைக்கும்போது அதனுடைய வீரியம் குறைந்துதான் போகிறது. ஒருவேளை அந்த சென்டிமென்ட்டையும் அவர்கள் கதாபாத்திரங்களின் ஜாலி சைடை வைத்தே டீல் செய்திருந்தால் வித்தியாசமான முயற்சியாக இருந்திருக்கோமோ என்னவோ! கோபி சுந்தரின் இசையில் 'சஞ்சாரமே' பாடலும் அது காட்சிப்படுத்தப்பட்ட விதமும் ஈர்க்கின்றன. இனிய கேரளா, நெரிசலான லக்னோ என ஒளிப்பதிவாளரின் கேமரா ஓவர்டைம் பார்த்திருக்கிறது.

காமெடி சூப்பர்தான். இருந்தாலும் அந்த லாட்ஜில் வரும் கசமுசா ஜோக்குகள், ஒருவரின் இறப்பைக் கிண்டல் செய்யும் காட்சிகள், அதை நகைச்சுவை எனத் திணிப்பது... இதெல்லாம் கமர்ஷியல் சினிமாவுக்கு ஓகே! ஒரு ஃபீல்குட் குடும்பப் படத்தில் இதெல்லாம் வேணுமா சாரே? கதையும் டொவினோவும் காப்பாற்றாத இந்தப் படத்தை நகைச்சுவையும் ஊர்வசியுமே அம்மாக்களைப் போல நின்று காக்கிறார்கள்.

ர.சீனிவாசன்

Creative Writer | Movie Observer | Science Enthusiast | Still Human