``ஆக்‌ஷன் ஹீரோ ஆக டைம் இருக்கு பிரனவ் மோகன்லால்..!" - `#IrupathiyonnaamNoottaandu' படம் எப்படி?! | Irupathiyonnaam Noottaandu Malayalam Movie Review

வெளியிடப்பட்ட நேரம்: 15:58 (30/01/2019)

கடைசி தொடர்பு:15:58 (30/01/2019)

``ஆக்‌ஷன் ஹீரோ ஆக டைம் இருக்கு பிரனவ் மோகன்லால்..!" - `#IrupathiyonnaamNoottaandu' படம் எப்படி?!

படத்தின் டைட்டில் கார்டு ஆரம்பிக்கும்போது, மோகன்லாலின் பெயர் பல நொடிகளுக்குத் திரையை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அரங்கத்திலும் கைதட்டல்கள் பறக்கின்றன. அதன்பிறகே பிரனவ்வின் பெயர் சேர்ந்து பிரனவ் மோகன்லால் என முழுமை பெறுகிறது. பிரனவ் மோகன்லாலுக்கு இது இரண்டாவது படம். ஆனாலும், தனது அப்பாவின் நட்சத்திர அந்தஸ்தின் மூலமே தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார்.

``ஆக்‌ஷன் ஹீரோ ஆக டைம் இருக்கு பிரனவ் மோகன்லால்..!

மிகச்சரியாக ஓராண்டு கழித்து பிரனவ் மோகன்லாலின் இரண்டாவது படமான, `21-ஆம் நூற்றாண்டு (இருபத்தியொன்னாம் நூட்டாண்டு)' வெளியாகியுள்ளது. கடந்த வருடம் வெளியான, தனது முதல் படமான `ஆதி'யின் அவரேஜ் வெற்றியைத் தொடர்ந்து சென்டிமென்டாக ஏறக்குறைய அதே தேதியில் (கடந்த வருடம் ஜனவரி 26-ல் `ஆதி' வெளியானது.) இந்தப் படத்தையும் ரிலீஸ் செய்திருக்கிறார்கள். ஆனால், குறைந்தபட்சம் `ஆதி'யைப் போன்று ஓரளவுக்கு சுவாரஸ்யமான கதை, திரைக்கதை உடைய படத்தைத் தேர்ந்தெடுத்து நடித்திருக்கலாம். 

Irupathiyonnaam Noottaandu

கோவாவில் வசிக்கும் அப்பு (பிரனவ் மோகன்லால்) ரிடையர்டு தாதா பாபாவின் மகன். தனது அப்பா வாங்கிய கடனை அடைப்பது, எந்தச் சண்டை சச்சரவுகளுக்கும் போகாமல் அமைதியாக குடும்பத்தை வழி நடத்துவது என இருக்கிறான். ஆனால், அவனது அப்பாவுக்கோ தனது மகனை தாதாவாக்கிப் பார்க்க ஆசை. இதற்கிடையில் கோவாவுக்கு வரும் ஸாயா (ஸாயா டேவிட்) அப்புவுக்கும், அவனது குடும்பத்துக்கும் நெருக்கமாகிறாள். அப்புவும், ஸாயாவும் கமர்ஷியல் பட இலக்கணத்திற்கேற்ப காதலிக்கிறார்கள். அவர்களது காதலுக்கு சாதி, வர்க்கம் ஆகியவற்றைவிட மதத்தினால் ஏற்படும் மற்றொரு வித்தியாசப் பிரச்னை ஒன்று தடையாய் இருக்க, ஒட்டுமொத்தக் கேரளாவே காதல் ஜோடிக்கு எதிராகக் கொந்தளிக்கிறது. இதையெல்லாம் மீறி நாயகன், நாயகியைக் கைப்பிடித்தானா என்பதே, படத்தின் கதை. 

படத்தின் முதல் பாதி முழுவதும் கோவாவில் நடக்கிறது. வழக்கம்போல கோவா என்றாலே நினைவுக்கு வரும் மது, மது சார்ந்த இடங்கள்தான் காட்டப்படுகின்றன. எல்லோராலும் விரும்பப்படும் அப்பு என்ற கதாபாத்திரம் பிரனவ்விற்கு! ஆனால், அதற்குப் பொருந்தும்படி எதையும் செய்யவில்லை அவர். இயலாமை, கோபம், வெறுப்பு எனப் பல உணர்ச்சிகளுக்கு ஒரேமாதிரியான முகபாவனைகளைக் கொடுத்திருக்கிறார். கோவாவில் நடைபெறும் முதல் பாதி முழுவதும் கோர்வையற்ற காட்சிகளாய் எந்தவோர் அழுத்தமும் இல்லாமல் தேமேவென்று செல்கிறது. முதல்பாதியின் குறைந்தபட்ச ஆறுதல், ஸாயாவாக வரும் ஸாயா டேவிட்டும், அப்புவின் நண்பன் மக்ரோனியாக நடித்திருக்கும் அபிரவ் ஜனன்.

பிரனவ் மோகன்லால்

அர்த்தமற்ற ஜோக்குகள் அடிப்பது, அதிகப் பிரசிங்கியாக நடந்துகொள்வது என வழக்கமான ஹீரோயின் பாத்திரம்தான், ஸாயாவுடையது. ஆனால், அந்தக் காட்சிகளில் அவர் செய்வது அழகாக இருக்கிறது. முதல் படத்திலேயே நன்றாக நடித்துள்ளார். க்ளைமாக்ஸ் காட்சியில் அவரது பெர்ஃபாமன்ஸ் செம்ம! மலையாள சினிமாவுக்கு வார்ம் வெல்கம் கொடுத்திருக்கிறார், ஸாயா. இவர்கள் கூடவே வரும் அபிரவ் ஜனனின் குரலும் அவரது ஒன்லைன் கவுன்டர்களும் நம்மை ஆங்காங்கே ஆசுவாசப்படுத்துகிறது. மற்றபடி, மனோஜ் கே.ஜெயன், கலாபவன் சஜோன், இளவரசு எனப் பலர் ஏன் நடிக்க வைக்கப்பட்டார்கள் என அவர்களுக்கே தெரியவில்லை. மனோஜ் கே.ஜெயனின் பாபா கதாபாத்திரத்தில்கூட எவ்விதப் பிடிப்பும் இல்லை.  

படத்தின் டைட்டில் கார்டு ஆரம்பிக்கும்போது, மோகன்லாலின் பெயர் பல நொடிகளுக்கு திரையை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அரங்கத்திலும் கைதட்டல்கள் பறந்தன. அதன்பிறகே, பிரனவ்வின் பெயர் சேர்ந்து, `பிரனவ் மோகன்லால்' என முழுமை பெறுகிறது. இவருக்கு இது இரண்டாவது படம். ஆனாலும், அப்பாவின் நட்சத்திர அந்தஸ்தின் மூலமே தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார்.

படத்தின் பெயர்கூட மோகன்லாலின் பிரபலமான `இருபதாம் நூற்றாண்டு' படத்திலிருந்தே எடுக்கப்பட்டுள்ளது. தவிர, படத்திற்கும் தலைப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. `இருபதாம் நூற்றாண்டு' படத்தில் மோகன்லாலும், சுரேஷ் கோபியும் இணைந்து நடித்திருப்பார்கள். அதுபோன்று இந்தப் படத்தில் சுரேஷ் கோபியின் மகன் நடிகர் கோகுல் சுரேஷ் சில நிமிடங்கள் கௌரவத் தோற்றத்தில் வருகிறார். மோகன்லாலின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அசைவுகளையும், உடைகளையும் மீட்டுருவாக்கம் செய்கிறார், பிரனவ் மோகன்லால். ஆனால், அவை வெறும் கைதட்டல்களுக்காகத்தானே அன்றி, கதைக்கு எந்த உதவியும் செய்யவில்லை. இதில், துல்கர் சல்மானை வேறு வம்புக்கு இழுத்திருக்கிறார். 

Irupathiyonnaam Noottaandu

ஆக்‌ஷன் படங்களுக்கே உரிய அமைதியான முதல்பாதி, அதிரிபுதிரியான இரண்டாம் பாதி... என வழக்கமான திரைக்கதை டெம்ப்ளேட்டயே பயன்படுத்தியுள்ளனர். ஆக்‌ஷன் படங்களுக்கே உரிய முடிவற்ற சேஸிங் காட்சிகள், நீளமான சண்டைக் காட்சிகள் என எல்லாம் இருந்தும் அவை எல்லாம் மிக சுமாராகப் படமாக்கப்பட்டுள்ளன. பீட்டர் ஹெய்ன், கோபி சுந்தர், விவேக் ஹர்ஷன், அபிநந்தன், தபஸ் நாயக் போன்ற சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இருந்தும், படம் அயர்ச்சியையே தருகிறது. அபிநந்தனின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம். `பேட்ட' படத்துக்குப் படத்தொகுப்பு செய்த விவேக் ஹர்ஷன்தான், இந்தப் படத்துக்கும் படத்தொகுப்பு செய்தாரா எனக் கேட்க வைக்கிறது அவரது படத்தொகுப்பு. பல இடங்களில் கன்டியுனிட்டி இல்லாமல் ஜம்ப் ஆகிறது.

முக்கியமாக, சண்டைக் காட்சிகளில் படத்தொகுப்பு கோர்வையாக இல்லாமல், விசிறியடிக்கிறது. பீட்டர் ஹெய்னின் சண்டைக்காட்சிகளும் அப்படித்தான். க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி கீரின்மேட்டில் எடுக்கப்பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. கோபி சுந்தரின் பின்னணி இசை, காட்சிகளுக்குத் தொடர்பே இல்லாமல் ஏகத்துக்கும் இரைச்சலாய் இருக்கிறது.  இவ்வளவு குறைகள் இருந்தாலும், அந்த இடைவேளை ட்விஸ்ட், குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள் குறித்த விழிப்பு உணர்வு... என ஆங்காங்கே ஆச்சர்யம் காட்டுகிறார், இயக்குநர் அருண் கோபி. 

Irupathiyonnaam Noottaandu

கம்யூனிஸ முழக்கம், அபிமன்யூவின் கொலை, பாதிரியார்களின் பாலியல் குற்றங்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை, சமூக மத நல்லிணக்கம், பொய் செய்திகளைப் பரப்புவதன் விளைவுகள்... எனக் கேரளத்தின் நடப்புப் பிரச்னைகளைக் காட்சிகளாகவும், கதாபாத்திரங்களின் வழியாகவும் பேச நினைத்திருக்கிறார், இயக்குநர். படத்தின் டைட்டில் கார்டில்கூட, கும்பலால் கொலை செய்யப்பட்ட இளைஞன் மது, கேரள வெள்ளத்தின் ஹீரோக்களான மீனவர்கள், அபிமன்யூ... எனக் கேரளாவையொட்டியே வடிவமைத்துள்ளார். ஆனால், ஆங்காங்கே ஹீரோயின் கதாபாத்திரத்தை வைத்தே பெண்ணியக் கருத்துகளைக் கிண்டலடிப்பது எந்த வகையில் நியாயம்?! ஹீரோயின் கதாபாத்திரத்தைக்கூட அரைகுறையாகவே எழுதியுள்ளார். பெண்ணின் நம்பிக்கையின்மையின் வலியைத் தொடர்ந்து ஹீரோ கதாபாத்திரம் மூலம் குத்திக் காட்டுவது எதற்காக?! 

பிரனவ் மோகன்லாலுக்கு இது இரண்டாவது படம். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கவும் நடிப்பில் இன்னும் பயிற்சி மேற்கொள்ளவும் நிறைய நேரம் இருக்கிறது. அதற்குள் ஆக்‌ஷன் ஹீரோவாக மாற நினைப்பது, '21-ஆம் நூற்றாண்டு' போல பலத்த காயங்களை உண்டாக்கலாம்.


டிரெண்டிங் @ விகடன்