Sarvam Thaala Mayam Review | பீட்டர் பீட்... கிணற்று நீரை அருவி ஆக்குகிறதா? - சர்வம் தாளமயம் விமர்சனம்

வெளியிடப்பட்ட நேரம்: 13:11 (02/02/2019)

கடைசி தொடர்பு:15:24 (02/02/2019)

பீட்டர் பீட்... கிணற்று நீரை அருவி ஆக்குகிறதா? - சர்வம் தாளமயம் விமர்சனம்

பன்னெடுங்காலமாகக் குறிப்பிட்ட சாராரிடம் மட்டுமே அடைபட்டுக்கொண்டிருக்கும் ஓர் இசையை, அந்த இசையின் கருவியை அதே பன்னெடுங்காலமாக உருவாக்கிக்கொண்டிருக்கும் ஒருவரது மகன், அதன் சர்வத்தையும் கற்று, தாளமயத்தோடு வாசிக்க ஆசைப்படுவதுதான் இந்த `சர்வம் தாளமயம்'.

பீட்டர் பீட்... கிணற்று நீரை அருவி ஆக்குகிறதா? - சர்வம் தாளமயம் விமர்சனம்

`கலைமாமணி' விருது வென்ற மிருதங்கம் செய்யும் கலைஞன் தஞ்சை ஜான்சனின் மகன், பீட்டர் ஜான்சன். அக்கௌன்ட்ஸ் எக்ஸாமா `மெர்சல்' படமா என்றால், `மெர்சல்' என `பீட்டர் பீட்ட ஏத்த' செல்பவர். மிருதங்க இசையின் சக்கரவர்த்தியாக, சினிமாப் புகழ் போன்றவற்றிலிருந்து ஒதுங்கி நின்று கச்சேரிகளில் மட்டும் வாசிப்பவர் வேம்பு ஐயர். வேம்பு ஐயரிடம் சீடராக விரும்புகிறார் பீட்டர் ஜான்சன். அதற்கு முட்டுக்கட்டை போடுகிறார் வேம்பு ஐயரின் முதன்மைச் சீடர் மணி. சிற்சிலப் போராட்டங்களுக்குப் பின்னர் சீடரான பீட்டர், தனது அடையாளத்தை வைத்து கேள்விக்குள்ளாக்கப்படுகிறான். ஜாதியச் சீண்டல்களையும், சர்ச்சைகளையும் கடந்து பீட்டர் ஜான்சன் தான் ஆசைப்பட்டதை எப்படிச் சாதிக்கிறார் என்பதைச் சொல்கிறது சர்வம் தாளமயம்.

Sarvam Thaala Mayam GV

 

பீட்டர் ஜான்சனாக, ஜி.வி.பிரகாஷ். படத்துக்கு மிருதங்கம் கற்றுக்கொண்டதில் ஆரம்பித்து படம் நெடுகிலும் அவரது நடிப்பில் அவ்வளவு யதார்த்தம். பீட்டர் மீட்டரில் ஸ்கோர் செய்கிறார். பீட்டர் ஜான்சனின் அப்பாவாக வரும் குமாரவேல் கச்சிதமான தேர்வு. மிருதங்கம் செய்யும் ஒருவரின் லாகவத்தை, தன் கைக்குள் கொண்டுவந்ததில் இருக்கிறது அவரது வெற்றி. இதுபோக வினித், அபர்ணா பாலமுரளி, டிடி, பாடகர்கள் ஸ்ரீநிவாஸ், உன்னி கிருஷ்ணன், சிக்கில் குருச்சரண், கார்த்திக் எனப் பக்காவான காஸ்டிங். இசை சப்ஜெக்ட்டில் இத்தகைய ரியல் லைஃப் நபர்கள் வருவது படத்தின் உண்மைத் தன்மையை அதிகப்படுத்துகிறது. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வரும் ஒரு நபரை நகலெடுத்து வினித்தாக நக்கல் அடித்திருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய பிளஸ் நெடுமுடி வேணு. வேம்பு ஐயராக பெர்ஃப்க்ட் சாய்ஸ். எந்த ரோலாக இருந்தாலும், அதில் மிளிர்கிறார் மனிதர். தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை என்றாலும், அதை அங்கீகரித்து அதை ஏற்றுக்கொள்ளும் மனம் கொண்டவராக மாறும் காட்சி, ருத்ராச்சம் தொலைந்து போகும் காட்சி, மிருதங்கம் வாசிக்கும் காட்சிகள் என அவர் வரும் ஃபிரேம்களில் எல்லாம் அவர்தான் ஹீரோ. வினித்தின் கதாபாத்திரத்தில் இருக்கும் செயற்கைத்தனம் அவரது பாத்திரத்தின் மீது எந்தப் பாதிப்பும் வரவிடாமல் செய்கிறது.

Sarvam Thaala Mayam GV

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பெரிய திரைக்கு வந்திருக்கிறார், ராஜீவ் மேனன். இசை ஏன் ஒரு குறிப்பிட்ட கிணற்றுக்குள் இருக்கும் நீராகவே இருக்கிறது. அது அருவியாக, நதியாக சமுத்திரத்தில் சங்கமிக்க வேண்டும் என்பதை கதைக் களமாக எடுத்திருக்கிறார். அதை ஓரளவுக்குச் சரியாகவும் சொல்லியிருக்கிறார். அப்பப்போ வாங்க ராஜீவ்.

`இசைக்கருவி வாசிக்கறவனுக்குப் புகழையும், கேட்கறவனுக்கு சந்தோஷத்தையும், செய்றவனுக்கு வறுமையத்தான கொடுக்குது' என வசனங்கள் மிக இயல்பானவையாக இருப்பதுதான் படத்தின் சிறப்பு. குறிப்பாக ஜிவிபிக்கும் அவரது அப்பா குமரவேலுக்குமான உரையாடல்; நெடுமுடி வேணு பேசும் வசனங்கள்; க்ளைமாக்ஸில் அந்த ஷோவின் நடுவர்களாக வரும் சீனிவாசன், உன்னிகிருஷ்ணன், சிக்கில் குருசரண், வினீத் ஆகியோருக்குள் இயல்பாக நடக்கும் உரையாடல்கள் என்று பலவும் அளந்து எழுதப்பட்ட கச்சிதம்! அதே சமயம், இசை கற்பதில் நிகழும் சில சச்சரவுகளை வெறுமனே கடந்து போவதும், அதற்கான வசனங்களும்தான் உறுத்தல்.

`மின்சார கனவு', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' ராஜீவ் ரஹ்மான் காம்போ, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இந்தப் படத்திலும் செய்திருப்பது ஒரு மியூஸிக்கல் ட்ரீட். விஜய்யின் ரசிகனாக வரும் பீட்டர் `பீத்த ஏத்து' ஆகட்டும், தேசத்தின் இசைக் கருவிகளை சங்கமிக்க வைக்கும் `சர்வம் தாளமயம்' பாடல் ஆகட்டும், காதலைச் சொல்லும் `மாயா மாயா'வாகட்டும் இளைஞர்களின் சார்ட்பீட், ஹார்ட்பீட்ஸ். பல உரையாடல்களின்போது அமைதியாகவும், வேண்டிய நேரங்களில் மெதுவாகப் படத்தின் காட்சிக்கு ஏற்ப நமக்குள் ஊடுருவும் இசையை வழங்கியிருக்கிறார், ஏ.ஆர்.ரஹ்மான். ராஜீவ் மேனனின் கம்போஸிங்கில் வரும் `வரலாமா உன்னருகில்' பாடல் அடிபொளி சேட்டா! க்ளைமாக்ஸ் காட்சியின் இசைக்கருவிகள் கட்ஸ் ஆன்டனி ஸ்பெஷல். பாடல்களை மேலும் அழகாக்குகிறது ரவி யாதவின் ஒளிப்பதிவு.

Sarvam Thaala Mayam GV Scene

மலையாள மணம் கமழும் காதல் காட்சிகள் படத்தின் ஸ்பீட் பிரேக்கர்கள். பீட்டருக்கு மிருதங்கம் கற்றுக்கொடுப்பதில் யாருக்கும் பெரிய சிக்கல் இல்லை. அதே போல் அவருடன் பழகுவதில், அவருக்கு லேப்டாப் தருவதில், வாய்ப்பு வழங்குவதில் பிரச்னை இல்லை. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பது திறமையை மட்டுமே வைத்து முடிவு எடுக்கிறது. சர்வம் தாளமயத்தில் இப்படி ஆங்காங்கே கிளேஷக்கள். நாடு இவ்வளவு சுபிக்ஷ்மாக இருந்துவிட்டால், யாருக்கும் யாதொரு பிரச்னையும் இல்லையே ராஜீவ் மேனன் ப்ரோ!.

அழகான, அழுத்தமான தற்போதைய சூழலுக்குத் தேவையான ஒரு கதையை இன்னும் கள யதார்த்தத்துடன் பதிவு செய்திருந்தால் சர்வமும் தாளமாய் இசைத்திருக்கும்.

 

`வந்தா ராஜாவாதான் வருவேன்' விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.


டிரெண்டிங் @ விகடன்