கண்ணா லட்டு தின்ன ஆசையா

திர்வீட்டு அழகியை மூன்று வெட்டி ஆபீஸர்கள் கரெக்ட் பண்ண முயல, ஃபிகர் யாருக்கு என்பதே கதை. 'இன்று போய் நாளை வா’ படத்தின் கதையா அல்லது சந்தானத்தின் 'மனதில் உதித்த கதை’யா என்பது... பஞ்சாயத் துக்கு உட்பட்டது.

 'காமெடியே துணை’ என்று முடிவெடுத்த பிறகு, எதைப் பற்றியும் கவலைப்படாமல் தரை இறங்கி தகர அடி அடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கே.எஸ்.மணிகண்டன்.

'கல்யாணம் டு காரியம்’ வரை கான்ட்ராக்ட் எடுத்துச் செய்யும் 'கேக்கே’ சந்தானம், காதல் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாகச் சொல்லி நண்பர்களுக்குச் சரக்கு வாங்கிக் கொடுத்துச் சாய்ப்பது, 'பர்பி கீழே கிடக்குது’ என்று பவர் ஸ்டாரின் குடும்பக் கௌரவத்துக்கு ஜிஞ்சர் கொடுப்பது என வழியெங்கும் ரகளை. 'நான் காமெடியன்னு எனக்குத் தெரியும். ஆனா, நீயோ காமெடியன்னு தெரியாமலே பெர்ஃபார்ம் பண்ணிட்டு இருக்கியே!’ என்று ரீலுக்கு ரீல் பவருக்கு பல்பு கொடுத்தும் பட்டாசு கிளப்புகிறார்.

கண் கூசும் கலர்களில் டி-ஷர்ட், த்ரீ-ஃபோர்த், குண்டக்க மண்டக்க ஹேர்ஸ்டைல் எனப் படம் முழுக்கக் காமெடிக் கூத்து கட்டுகிறார் பவர் ஸ்டார். நடிப்பு, டான்ஸ் என எதுவுமே பவருக்கு வரவில்லை. ஆனால், காமெடி பாடிலாங்குவேஜ் முழுக்க ஜாலிலோ ஜிம்கானா. நடன வகுப்பில் ரசிகர்களைக் கூட்டி அலப்பறை செய்வதும், பிறந்த நாளுக்கு ஊரெல்லாம் ஃப்ளெக்ஸ் அடித்து மிரட்டுவதுமாக தன்னைத்தானே கிண்டல் அடித்துக்கொண்டு, நம்மையும் சிரிக்கவைப்பது பவரின் 'பவர்’. (அட... பவர் நடிப்புக்காக தியேட்டரில் நிஜமாகவே 'ஓடுகிறது’ இந்தப் படம்.) உள்ளூர் விளம்பர மாடலாக சேது ஓ.கே.

இந்தி வாத்தியாருக்குப் பதில் சங்கீதச் சக்ரவர்த்தி, டிரில் மாஸ்டருக்குப் பதில் பரத குரு, ரேஷன் அரிசிக்குப் பதிலாக பிரியாணி எனப் புதிய பாத்திரத்தில் பரிமாறப்பட்டு இருந்தாலும், 'இ.போ.நா.வா’-வில் இருந்த இனிப்பும் இன்னொசன்ஸும் இந்த லட்டில் இல்லை. ஒரு கட்டத்துக்குப் பிறகு ஒரிஜினலைக் கிண்டலடிக்கும் லொள்ளு சபா தொனி பிரதிபலித்ததையும் தவிர்த்து இருக்கலாம்.

படத்துக்கு ஒரு முடிவு வேண்டுமே? சிம்புவை வம்பாக உள்ளே இழுத்திருக்கிறார்கள்.

ஜெராக்ஸ் பிரதிதான். ரைமிங் டைமிங் டயலாக் காமெடிதான். இருந்தாலும், கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது காமெடிச் சரக்கு பக்காவாக வொர்க் அவுட் ஆவது இந்த லட்டுவின் ஹிட்டு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!