நீதானே என் பொன்வசந்தம் | நீதானே என் பொன்வசந்தம், ஜீவா, சமந்தா, கெளதம் மேனன்

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (20/12/2012)

கடைசி தொடர்பு:12:40 (20/12/2012)

நீதானே என் பொன்வசந்தம்

'விண்ணைத் தாண்டி வருவாயா’ காதலில் பள்ளிப் பருவத்தையும் முன்னாள் காதலனின் திருமணத்துக்கு முந்தைய இரவையும் சேர்த்தால்... 'நீதானே என் பொன்வசந்தம்’.

 குழந்தைப் பருவத்தில் ஜீவா, சமந்தா இடையே கன்றுக்குட்டிக் காதல். ஈகோ மோதல். பிரிகிறார்கள். கல்லூரிப் பருவத்தில் மீண்டும் சந்திக்கும்போது, விட்ட இடத்தில் இருந்து காதல். இப்போதும் ஈகோ மோதல். பிரிகிறார்கள். திருமணத்துக்கு முந்தைய பருவத்தில் சந்திக்கிறார்கள். காதலே இல்லாமல் ஈகோ மோதல் மட்டுமே. பிரிகிறார்கள். முந்தைய இரண்டு தருணங்களிலும் ஜீவாவே சமந்தாவைச் சமாதானப்படுத்தியிருக்க, இப்போது சமந்தா சமாதானத்துக்கு வருகிறார். ஆனால், அப்போது ஜீவாவுக்குத் திருமணம் நிச்சயமாகி ரிசப்ஷனும் முடிந்திருக்கிறது. என்ன நடந்தது என்பது க்ளைமாக்ஸ்.

இன்ஜினீயரிங் கல்லூரி மாணவன், வசதியான வீட்டுப் பெண், காலேஜ் கல்ச்சுரல்ஸ், காபி ஷாப், ஈகோ, பிரிவு, காதலியைத் தேடிச் செல்லும் காதலன், கூடவே கௌதமின் கரகர குரல்... 'கௌதம் பட க்ளிஷே’க்கள் ஒன்றுகூட மிஸ் ஆகவில்லை. ஆனால், பழையன நிறையப் புகுந்ததில், புதியன எதுவும் இல்லாமல் போய்விட்டதே!

பிரிந்த காதலர்கள் காதலனின் திருமணத்துக்கு முந்தைய இரவில் சந்திக்கும் அத்தியாயத்தில் மட்டும் செம சிக்சர் அடிக்கிற கௌதம், மற்ற ஏரியாக்களில் சிங்கிள் ரன்தான் எடுக்கிறார்.

தன் காதலைத் தானே முறித்துக்கொண்டு பிறகு சமாதானம் தேடி அலையும் கொஞ்சம் நெகட்டிவ் பாத்திரத்தில்... ஜீவா! பள்ளி, கல்லூரிக் கட்டங்களில் க்யூட்டாகக் கவர்கிறார். இறுக்கம் இல்லாத திரைக்கதையிலும் நம்மை ஈர்த்துப் பிடிப்பது சமந்தாவின் குழந்தை முகமும் குறும்புக் கண் களும்தான். சாய்ந்து சாய்ந்து பார்த்து கன்னக் கதுப்புகளில் வெட்கம் புதைத்துப் புன்னகைக்கும்போது... ஸோ ஸ்வீட் சமந்தா!  

'சுடிதாருக்குச் சாயம் போனாத்தானே உங்களுக்கு பேன்ட், ஷர்ட்லாம் கண்ணுக்குத் தெரியும்!’, 'சில்-அவுட் மச்சான்’ - மாறி மாறி வரும் ஊடல் கூடல் வசனங்களுக்கு மத்தியில், சந்தானத்தின் ஒன் லைன் பஞ்ச்கள்தான் சின்ன ஆறுதல்.

ஸ்டேட்டஸ் வித்தியாசம் கருதி சமந்தாவிடம் இருந்து வம்படியாக விலகுவது ஜீவாதான். ஆனால், கடைசியில் ஏதோ சமந்தாதான் ஜீவாவை ஏமாற்றியதுபோல அவரைக் குறுகுறுக்க வைப்பது என்ன நியாயம்?

'நீ ஏற்காடு போனதில்லையா... செம இடம். நான் இந்த சம்மருக்குப் போறேன். ஆமா நீ எங்கே போற?’ 'ஆஸ்திரேலியா!’, 'எல்லா குட்டிக் குட்டி பாக்ஸையும் டிக் அடிச்சிட்டு, கடைசியா என் பாக்ஸுக்கு வந்தியா?’, 'உன் கல்யாணத்துக்கு மூணு மணி நேரத்துக்கு முன்னாடி இதைச் சொன்னேன்னு ஞாபகம் வெச்சுக்கோ’ என்பதுபோன்ற சில இடங்களில் மட்டுமே கௌதம் டச்.

ஃபீலிங் படத்தை செம ஜாலியாக எடுத்திருப்பார்கள்போல. 'வி.டி.வி.’ சிம்புவை சந்தானம் கலாய்க்கிறார். 'டேட்ஸ் இல்லை. அநேகமா நான் இல்லாமதான் அடுத்தடுத்த சீன்லாம் நடக்கும்’ என்று டயலாக் பேசுகிறார். என்ன சார் நடக்குது அங்கே!  

படத்தின் ஹீரோ, பலம்... இரண்டும் இளையராஜாதான். காதலர்கள் இணையும்போது வரும் காதல் கீதமாகட்டும், பிரியும்போது வரும் சோக கீதமாகட்டும்... ராஜா, ஏன் ராஜா என்பதை நிரூபிக்கிறார்.  

காதலர்கள் அடிக்கடி பிரியக் காரணமே 'ஸாரி’ என்ற வார்த்தையை அவர்கள் சொல்லத் தயங்கும் ஈகோதான். ஆனால், நாங்கள் சொல்கிறோம்.. ஸாரி கௌதம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்