கெளரவம் | கெளரவம், பிரகாஷ்ராஜ், யாமி கெளதம்

வெளியிடப்பட்ட நேரம்: 17:32 (25/04/2013)

கடைசி தொடர்பு:17:32 (25/04/2013)

கெளரவம்

சாதி கௌரவத்துக்குப் பலிகொடுக்கப்பட்ட தனது நண்பனைத் தேடிச் செல்லும் ஓர் இளைஞ னின் பயணமே... கௌரவம்! 

கௌரவக் கொலைகள் எனும் சென்சிடிவ் பிரச்னையைக் கதைக்களமாக எடுத்த இயக்குநர் ராதா மோகனின் முயற்சிக்கு லட்சம் லைக்ஸ். கௌரவக் கொலை, மாணவர் சக்தி என டாபிக்கல் பரபரப்புகளை முடிச்சிட்டு ஒரு த்ரில்லர் கொடுக்க முனைந்திருக்கிறார் ராதா மோகன். ஆனால், கௌரவக் கொலைகள் தொடர்பாக நாளிதழ் செய்திகள், சேனல் க்ளிப்பிங்குகளில்கூடப் பகீர் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றனவே! ஓரிரு வசனங்கள் தவிர்த்து சாதிக் கொடுமையின் வீரியத்தையோ, கௌரவக் கொலைகளின் ஆழத்தையோ திரைக் கதை பிரதிபலிக்கவே இல்லை.  சாதிப் பிரிவினை தொடர்பான அடிப்படைப் புரிதலை அறிந்துகொள்ளும் ஒருவரின் முயற்சியாகவே பயணிக்கிறது படம்!    

அடர்த்தியும் அழுத்தமுமான பெர்ஃபார் மன்ஸ் தேவைப்படும் ஹீரோ வேடத்தில், அல்லு சிரிஷின் நடிப்பு... ஆவரேஜ். அறிமுக நடிகர் சிரமமான சீன்களில் தடுமாறினால் பரவாயில்லை. ஆனால், மிகச் சாதாரண முகபாவனைகளில்கூட சிரிஷ் தடுமாறுவது... வெரி ஸாரி! ஹீரோவின் நண்பராக வரும் தரண் உற்சாகத்திலும் உணர்ச்சிகளிலும் முத்திரை பதிக்கிறார். கதாநாயகி யாமி கௌதம் அழகாக இருக்கிறார், அழகாகச் சிரிக்கிறார்... அவ்வளவே! நடுநடுவே 'மானே... தேனே’ போட்டுக்கொண்டு 'பிரகாஷ்ராஜ் நன்றாக நடிக்கிறார்’ என்று இன்னும் சொல்லலாம்.  காணாமல்போன நண்பனின் தந்தையாக வரும் ஸ்ரீராம் நுணுக்கமான உடல்மொழியில் ஒரு தந்தையின் உணர்வுகளைக் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார். தலித் இளைஞனாக வரும் குமர வேலுவின் நடிப்பு ஒன்றே ஆறுதல்.

'மொழி’, 'பயணம்’ படங்களில் பளிச் வசனங் களில் கவர்ந்த விஜிக்கு என்ன ஆச்சு? பளீர்... சுளீர் வசனங்களில் விளாசியிருக்க வேண்டிய கதைக் களத்தில் மிகவும் அடக்கி வாசித்திருக்கிறார். தேநீர் கடை இரட்டை டம்ளர் முறைக் காட்சியின் வசனங்களில் இருக்கும் அழுத்தம், அதன் பிறகான எந்தக் காட்சியிலும் இல்லை.

படத்தின் ஆரம்பத்திலேயே அந்தக் காதல் ஜோடிக்கு என்ன நடந்திருக்கும் என்பது தெரிந்துவிடுகிறது. ஆனால், இடைவேளை தாண்டியும் 'அதை’க் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறார்கள். அதன் பிறகான நிகழ்வுகள் எதிர்பார்த்த சம்பவங் கள், அதிர்ச்சிகளுடன் நிறைவேறுகின்றன.

நண்பனைத் தேடி வரும் ஹீரோ குழுவுக்கு, தலித் குமரவேல் வெளிப்படையாக உதவுகிறார். ஆனால், இறுதி வரை அவர் நலமாக இருக்கிறார். நடைமுறையில் அப்படியரு கிராமத்தில் ஒருவர் உதவினால் முதல் பலி அவராகத்தானே இருக்கும். இப்படி சாதிகுறித்தோ, காலனிகளின் யதார்த்தம் குறித்தோ எந்தவிதப் புரிதலும் இல்லாமல் நகர் கிறது படம்.

மனதின் மென் உணர்வுகளை பாசிட்டிவ் காமெடி கலந்து தரும் தனது வழக்கமான ரூட்டில் இருந்து மாற முயற்சித்திருக்கும் இயக்குநர் ராதா மோகன், ஒரு சென்சிடிவ் விஷயத்தை க்ரைம், ஆக்ஷன், காதல், காமெடி கலந்த மசாலா பேக்கேஜில் சினிமா ஆக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அதற்கு 'கௌரவக் கொலைகள்’ இடம் கொடுக்கவில்லை!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்