மூன்று பேர் மூன்று காதல்

 ‘காதல் ஸ்பெஷல் இயக்குநர் வஸந்த், மூன்று காதல்களோடு களம் இறங்கிய படம்! 'காதல் என்பது எடுத்துக்கொள்வது அல்ல; கொடுப்பது’ என்பதுதான் கதையின் ஒன் லைன்.  

விமலுக்கு லாசினியைக் கண்டதும் காதல். ஆனால், லாசினிக்கு ஏற்கெனவே அவரது காதலனுடன் நிச்சயமாகி இருக்கிறது. திடீரென லாசினியின் காதலில் பிரிவு நேர, அந்த இடைவெளியில் தன் காதலைத் தெரிவித்து லாசினியை ஏற்றுக் கொள்ளவைக்கிறார் விமல். எல்லாம் சுபமாகப் போகும் வேளையில், தானாகவே காதலை முறித்துக்கொள்கிறார் விமல். காரணம், சேரன்- பானு மற்றும் அர்ஜுன்- சுர்வீன் ஜோடிகளைப் பற்றி அவர் அறிந்துகொள்ளும் உண்மைகள். அது என்ன உண்மைகள் என்பதே நீளமான மீதிப் படம்!

'கேளடி கண்மணி’,  'ஆசை’, 'ரிதம்’, 'சத்தம் போடாதே’ படங்களில் காதலை அழகிய பழகியலாகப் பதிவுசெய்த வஸந்த் படமா இது? ஒன்றுக்கு மூன்றாக இருக்கும் காதல்களில் ஒன்றில்கூட வஸந்த் ஸ்பெஷல் டச் இல்லையே!  

மூன்று ஜோடிகளில் சேரன் - பானுவிடம் மட்டுமே காதலுக்கான சமிக்ஞைகள் இருக்கின்றன. விமல்-லாசினி, அர்ஜுன் -சுர்வீன் இடையிலான உரையாடல் தொடங்கி சம்பவங்கள் வரை அனைத்திலும் படர்ந்திருக்கிறது செயற்கை!  

நாகர்கோவிலில் தொண்டு நிறுவனம் நடத்தும் சேரனை மனப்பூர்வமாகக் காதலிக்கும் பாத்திரத்தில் பானு அசத்தல். மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாகத் தயக்கமும் துணிச்சலும் கலந்து கட்டிய பெண்ணாக வசீகரிக்கிறார். சேரனின் துளியும் மிகை இல்லாத நடிப்பு... சிறப்பு. லாசினியை இம்ப்ரெஸ் செய்ய விமல் பேசுவதற்கெல்லாம் லாசினி சிரிக்கிறார்... காமெடியாம். செம காமெடி! தன்னிடம் நீச்சல் கற்கும் மாணவியையே காதலிக்கும் பயிற்சியாளராக அர்ஜுன். என்ன லாஜிக் சொன் னாலும் அர்ஜுன்-சுர்வீனுக்கு இடையிலான நெருக்கத்தில் காதல் இல்லவே இல்லை!  

மூன்று காதல்களுக்கும் இடையிலான தொடர்பு இயல்பாக இல்லாததால், இதை எதற்கு ஒரே படமாக எடுக்க வேண்டும் என்ற கேள்வி எழாமல் இல்லை. பாடல் களிலும் காதல் ஹம்மிங்குகளின்போதும் யுவன்ஷங்கர் ராஜா இசை ஸ்பெஷல் ஸ்கோர். 'ஆஹா... காதல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுதே’, 'மழை... மழை’ பாடல்களில் நா.முத்துக்குமாரின் வரிகள் காதலும் காதல் நிமித்தமுமாகப் பொங்கித் ததும்புகிறது. மலையும் மலை சார்ந்த இடமும், கடலும் கடல் சார்ந்த இடமும், நிலமும் நிலம் சார்ந்த இடமும் எனப் பிரிந்திருக்கும் கதைக் களத்தை போஜன் கே.தினேஷின் ஒளிப்பதிவு அழகாக வித்தியாசப்படுத்துகிறது.

படத்தில், 'உடம்புல சின்னக் காயம்கூட படாத ஒரே விளையாட்டு, நீச்சல்’ என்கிறார் அர்ஜுன். ஆனால், படத்தில் மூன்று காதல்கள் இருந்தும், மனசில் சின்னக் காயம்கூட ஏற்படுத்தவில்லையே வஸந்த்!?

- விகடன் விமர்சனக் குழு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!