Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

சூது கவ்வும்

திகாலை அலாரம் வைத்து அரக்கப்பறக்க எழுந்து குளித்து, உடைமாற்றி, அமர்ந்து சாவகாசமாகச் சரக்கு பாட்டிலைத் திறக்கும் ஒருவனில் ஆரம்பிக்கிறது காமெடிக் கச்சேரி!

இதுவரை தமிழ் சினிமா டெரராகக் காட்டிய ஆள் கடத்தல் சூதினை ஜாலி கலாட்டாவாகப் படைத்து மனதைக் கவ்வியிருக்கிறது 'சூது கவ்வும்’!

கடத்தலுக்கு ஐந்து விதிகளை வகுத்துக்கொண்டு 'மிக நேர்மையாக, இதய சுத்தியுடன்’ ஆட்களைக் கடத்தும் விஜய் சேதுபதி, நிதி அமைச்சரின் மகனைக் கடத்தினால் என்ன ஆகும் என்பதே... கெக்கேபிக்கே படம்! ஆனால் கதை, ட்விஸ்ட், க்ளைமாக்ஸ் என்று தொகுத்து விளக்க அவசியம் இல்லாத திரைக்கதை.

''இதை இட்லினு சொன்னா, சட்னிகூட நம்பாதுடா!''

''நீங்க நியூஸ் பேப்பரே படிக்கிறது இல்லையா?''

''டெய்லி டேட் மாத்தி விக்கிறான்... அதை எதுக்குப் படிக்கணும்?''

''சென்னைக்கு பிளானோட வந்தவன் எல்லாம் திரும்பப் போயிடுறான். பிளான் இல்லாம வந்தவன்தான் ஜெயிக்கிறான்!''

''சார்... எம் பொண்ணை ஒண்ணும் பண்ணிராதீங்க சார்!''

''அய்யய்யா... நீங்களே சொன்னாலும் நாங்க எதுவும் பண்ண மாட்டோம் சார். கவலைப்படாதீங்க. மூச்சை இழுத்து விடுங்க. இப்போ ஃப்ரீயா ஃபீல் பண்றீங்களா?''

''நான் கத்த மாட்டேன். தயவுசெஞ்சு அந்த கர்ச்சீப்பை வாய்ல திணிக்காதீங்க.. நாறுது!''

''ஃப்ராடுத்தனம் பண்றதுக்கு குருட்டுத் தனமான முட்டாள்தனமும், முரட்டுத் தனமான புத்திசாலித்தனமும் வேணும்!''

''டெய்லி 18 டீ குடிக்கிறான்... இவனைக் கடத்த பிளான் எதுவும் போடத் தேவை யில்லை. ஒரு டீக்கடை போட்டா போதும்!''

''நாளைக்கு சண்டே... நாங்க வொர்க்பண்ண மாட்டோம். திங்கட்கிழமை பணத்தை வாங்கிக் கிறோம்!''

- இப்படி சீனுக்கு சீன் சிரிப்பு மேளா நடத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் நலன் குமாரசாமி. ஆனால், அசட்டுக் காமெடிகளாக இல்லாமல் நினைத்து நினைத்துச் சிரிக்கும் அளவுக்கு ஒவ்வொரு ஒன் லைனும் அவ்வளவு இன்ட்ரஸ்டிங் ப்ளஸ் இன்டெலிஜென்ட். தமிழ் சினிமாவில் நலனுக்குக் கலகல வரவேற்பு!

படத்தில் ஹீரோ என்று யாரைச் சொல்வது? அமெச்சூர் கடத்தல்காரனாக வரும் விஜய் சேதுபதி, அதிகாலை சரக்குப் பார்ட்டி ரமேஷ், நயன்தாராவுக்குச் சிலைவைக்கும் சிம்ஹா, சாஃப்ட்வேர் பேர்வழி அசோக், நேர்மையான அரசியல்வாதி எம்.எஸ்.பாஸ்கர், அவருடைய பக்கா ஃப்ராடு மகன் கருணா, ஒரு வார்த்தை கூடப் பேசாமல் டெரர் கிளப்பும் திகில் போலீஸ் யோக் ஜெப்பி, சேஸிங்கில் கியர் தட்டும் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், பின்னணி இசையில் மிரட்டும் சந்தோஷ் நாராயணன் என எல்லாருமே அவரவர் வேலைகளில் செம ஃபிட். அரூபக் கற்பனையாக வந்தாலும் 'மாமா... மாமா...’ என்று விஜய் சேதுபதியைக் கொஞ்சிக் கொஞ்சியே கிளாமரும் ஹ்யூமருமாக வசீகரிக்கிறார் சஞ்சிதா ஷெட்டி.  

படத்தின் குறைகள்? நிறையவே! இவ்வளவு சொதப்பலாக ஒரு கடத்தல் கும்பல் இருக்க முடியுமா? ஒரு அமெச்சூர் கடத்தல் கும்பலுக்குப் பயந்து மாநில முதல்வரே கட்சி நிதியில் இருந்து கோடிகளைத் தூக்கிக் கொடுப்பாரா? பணப் பை ஜி.பி.எஸ். சிக்னலைப் பின்தொடராமல் போலீஸ் ஏன் வேடிக்கை பார்க்கிறது? கான்ஸ் டபிளைப் பார்த்தாலே உச்சா போகும் விஜய் சேதுபதி அண்ட் கோ, இன்ஸ்பெக்டர் பிரம்மா வுக்குத் தண்ணி காட்ட முடியுமா... போன்ற கேள்விகளுக்குப் பதில் யோசித்தாலே படத்தை ரசிக்க முடியாது. ஆனால், அது எதையும் யோசிக்கவிடாமல் அள்ளுகிறது காமெடி!

வெளியுலகை மறக்கடித்து, ஆறாம் அறிவை முடக்கிவைத்து, இரண்டு மணி நேரம் சிரித்துக் கொண்டே இருக்க முடியுமென்றால், இப்படியான 'சூது’களுக்கு நிச்சயம் விரிக்கலாம் சிவப்புக் கம்பளம்!

- விகடன் விமர்சனக் குழு

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement