நேரம்

கெட்ட நேரம், நல்ல நேரம்... இரண்டுக்கும் இடையில் அல்லாடுபவனின் 'நேரம்’!

டைட்டில் ஸ்லைடில் 'தேங்க்ஸ் டு மை எக்ஸ் கேர்ள் ஃப்ரெண்ட்...எஸ்பெஷலி தி லாஸ்ட் ஒன்’ என்று திரையிடு வதில் ஆரம்பிக்கும் குறும்புச் சேட்டை இறுதிக் காட்சி வரை தடதடக்கிறது!  

ஒரு நாளின் விடியலில் ஹீரோ நிவினுக்கு கடன், காதல், சொந்தம் என அனைத்துத் தரப்பில் இருந்தும் சிக்கல்கள். அந்த நாளின் முடிவுக்குள் ஹீரோவின் நேரம் எப்படி அனைத்தையும் சரிசெய்கிறது என்பதே படம். எப்படியும் நாயகன் ஜெயிப்பார் என்றாலும், எப்படி ஜெயித்தார் என்பதை செம ஜாலி, கேலிக் கலாட்டாவாகச் சொன்ன விதத்தில் கவனிக்கவைக்கிறார் அறிமுக இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்தரன்.

கேரள இறக்குமதியான (!) அறிமுக ஹீரோ நிவின்... பதற்றம், கவலை, கோபம் என எல்லா உணர்வுகளையும் ஹீரோயிஸமே இல்லாமல் செய்து பாஸ் மார்க் வாங்கிவிடுகிறார். கொஞ்சம் சமந்தா, கொஞ்சம் காஜல் என நெஞ்சில் ஜில்ஜில் மீட்டுகிறார் அறிமுக நாயகி நஸ்ரியா நசீம். நடிப்பிலும் செம ஸ்கோர். க்யூட் ஸ்வீட் எக்ஸ்பிரஷன்களால் மனதைச் சீண்டியவரைப் பெரும் பகுதி நேரம் மறைவிடத்தில் பதுக்கிய திரைக்கதையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

'10 ஆயிரம் ரூபா போன்ங்கிற... பட்டனே இல்லே’ என்று அத்தனை ரணகளத்திலும் கிச்சுகிச்சும் சிம்ஹா, 'சின்ன வயசுல சரவணன்... இப்போ சரவணர்’ என்று தனக்குத்தானே மரியாதை கொடுத்துக்கொள்கிற தம்பி ராமையா, 'தியாகராஜ பாகவதருக்கே பாட்டு கத்துக்கொடுக்குறியா?’ என்று எகிறும் ஜான் விஜய், 'ஆவ்சம்... ஆவ்சம். கம்ப்யூட்டர் தம்பிக்கு நிறையத் தெரிஞ்சிருக்கு’ என்று கெத்து காட்டும் நாசர், பீட்டர் இங்கிலீஷ் மாணிக் எனப் படத்தின் ஒவ்வொரு பாத்திரமும் வசனமும் வெல் பில்ட். சரவணர், லைட் ஹவுஸ், கட்ட குஞ்சு, வட்டி ராஜா, காளான் எனக் கதாபாத்திரங்களின் விதவிதமான பெயர்கள்... ரசனை மாமே!  

சென்னை வீதிகளை அத்தனை அழகாகக் காட்டி அசரடிக்கும் ஆனந்த்.நீ சந்திரனின் ஒளிப்பதிவும் ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசை யும் படத்துக்குப் படா தோஸ்த்துகள். அதிலும் அர்த்தமே இல்லாத 'பிஸ்தா’ பாடல் இளமைத் துள்ளல். அடுத்தடுத்து படையெடுக்கும் ஃப்ளாஷ்பேக் காட்சிகளைக் குறைத்திருக்கலாம்.

'ஹே சுருக்க ரிகா முக்கா மொழம் போட்டு மரிக்கொழுந்து கபத்துல மாட்டி பிடிச்சு பிஸ்தா சும்மா கீர சோமாரி ஜமாக்கிராயா’-வாக ஒரு படம். தியேட்டரில் இருக்கும் வரை நல்ல நேரமாக இருக்கிறது!

- விகடன் விமர்சனக் குழு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!