Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குட்டிப் புலி

கராறையே வரலாறாகக்கொண்ட 'குட்டிப் புலி’!

ஊருக்காக உயிரையே கொடுக்கும் சண்டியர் லால், அவரின் லேட்டஸ்ட் வெர்ஷன் மகன் சசிகுமார், மகனைத் திருத்த நினைக்கும் அம்மா சரண்யா, சசியைக் காதலிக்கும் லட்சுமி மேனன், இவர்களைச் சுற்றி முறைப்பும் விறைப்புமான வில்லன்கள். நிறையச் சத்தம், நிறைய யுத்தம்... இதுவே குட்டிப்புலி!

சங்கு அறுக்கும் மற்றுமொரு 'சசிகுமார் ஸ்டைல்’ படம். அதில் அம்மா சென்டிமென்ட் மசாலாவை அழுத்தமாகக் கலக்கி, பெண்களின் பெருமை பேச முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் முத்தையா. ஆனால், படம் நெடுகப் பல காட்சிகள் இதற்கு முன் வந்த பல 'தகராறு’ படங்களைத் தாறுமாறாக நினைவுபடுத்திச் செல்கின்றனவே?  

பில்டப் ஓப்பனிங், உச்ச டெஸிபல் ஹீரோயிசம், பஞ்ச் வசனங்கள் என சசிகுமார் 'புதிதாக’ ஒன்றை முயற்சித்திருக்கிறார். ஆனால், யாரை எதற்காக அடிக்கிறார், அவருடைய லட்சியம் என்ன என்று படத்தில் எந்த டீடெய்லும் இல்லாததால், புலியின் உறுமலில் வீரியம் இல்லை. 'லட்சுமி மேனனைக் காதலிக்காதே’ என்று எச்சரிப்பதற்காகத்தான் வில்லன், சசியைக் கூப்பிடுகிறான். ஆனால், அவனைப் பேச விடாமல் வாலன்டியராக வம்பிழுத்து,

அடிதடி நடத்திப் பிரச்னையைப் பெரிதாக்குகிறார் சசிகுமார். இதில் யார் வில்லன்?  

கன்னி தோன்றி காதல் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய 'நல்ல ரவுடியைக் காதலிக்கும் அமைதிப் பெண்’ கேரக்டர் லட்சுமி மேனனுக்கு. என்னத்தைச் சொல்ல..?

மகனுக்காக வீடு வீடாகச் சென்று மடிப்பிச்சை எடுப்பது, சசிகுமார் திருமணத்துக்குச் சம்மதித்ததும் சந்தோஷமும் கொண்டாட்டமுமாகத் தோழியிடம் பேசுவது என சரண்யா 'அக்மார்க் அம்மா’வாக அசத்தியிருக்கிறார். தமிழ்நாட்டில் 'அம்மா’ என்றால் 'அவர்’ நினைவுவருவதுபோல, தமிழ் சினிமாவில் 'அம்மா’ என்றால் சுங்குடிச் சேலையுடன் சரண்யா நினைவுக்கு வருவது... நமக்கும் அவருக்கும் நல்லதா... கெட்டதா? சிவந்த விழிகளும், கலைந்த தலையும், திமுதிமு உடம்புமாக அப்படியே 'அட்டாக் பாண்டி’யை நினைவுபடுத்துகிறார் வில்லன் ராஜசிம்மன்.

வழக்கமாக சசிகுமார் படங்களில் காமெடி பேக்கேஜ் பக்காவாக இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் வளமான காமெடிக் கும் பஞ்சம். வேலைவெட்டி இல்லாத நான்கு கேரக்டர்கள் வளவளவெனப் பேசிக்கொண்டே இருப்பது... வெயிலில் வெந்நீர் குடிப்பதுபோல வெறி ஏற்றுகிறது!  

வன்முறையால் வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வன்முறையை அப்படி வெறுக்கும் சரண்யா, கடைசிக் காட்சியில் அந்த முடிவை எடுக்கும் இடம் மட்டுமே திக்... திடுக்! ஆனால், சசிகுமார் கதாபாத்திரத்தின் மீது நமக்கு அழுத்தமான ஈர்ப்பு இல்லாததால், சரண்யாவின் அந்த முடிவு தேவையான சுரீர் விளைவைக் கொடுக்காமல் வேடிக்கையாக க்ராஸ் செய்கிறது. ஜிப்ரானின் இசையில் 'காத்து காத்து’ மட்டும் கேட்கிற ரகம். ஆனால், படத்தில் பின்னணி இசை தேவைப்படும் சந்தர்ப்பங்களில் இளையராஜா மெலடிகளால் நிரப்பியிருப்பது... நியாயமாரே?  

'ஆம்பளை கெட்டா, வாழ்க்கைதான் போச்சு... பொம்பளை கெட்டா, வம்சமே போச்சு!’, 'நீ ஆம்பளைனு நிரூபிக்கவும் ஒரு பொம்பளைதாண்டா வேணும்!’ - டைரக்டர் சார்... நாம எந்த ஜெனரேஷன்ல இருக்கோம்? பெண்கள் விண்வெளிக்கும், நீர்மூழ்கிக் கப்பல் பணிக்கும் செல்லும் ஜெனரேஷன் இது! இந்தக் காலத்தில் இப்படியரு பிற்போக்குப் பார்வை தேவைதானா?  

சாதி அடையாளங்கள் இல்லாமல் பார்த்தாலே, ஒவ்வோர் அம்மாவும் தன் பிள்ளைகளைக் காக்கும் வீராங்கனைதான். ஆனால், படத்தின் பல காட்சிகள் ஒரு குறிப்பிட்ட சாதிப் பெருமையையும் வீரத்தையுமே தூக்கிப் பிடிக்கிறதே... ஏன் சார்?  

குண்டுச்சட்டியில் குதிரைக்குப் பதில்... புலி!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்