தீக்குளிக்கும் பச்சை மரம் | தீக்குளிக்கும் பச்சை மரம்

வெளியிடப்பட்ட நேரம்: 13:41 (12/07/2013)

கடைசி தொடர்பு:13:41 (12/07/2013)

தீக்குளிக்கும் பச்சை மரம்

விறைத்துப்போன பிணங்களுடன் பணிபுரியும் நேர்மையான ஹீரோவின் மனதை மரத்துப்போகச் செய்யும் முயற்சிகள் அரங்கேறுகின்றன. அப்போது அந்தப் பச்சை மரம் என்ன செய்தது என்பதே 'தீக்குளிக்கும் பச்சை மரம்’!

அப்பாவின் வளர்ப்பில் நல்லவனாக வளரும் பிரஜன் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்படுகிறார். வாலிபனாக விடுதலையாகி வருபவர், ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்கிறார். குடும்பப் பாரம் அழுத்த அரசு மருத்துவமனைப் பிணவறையில் உதவியாளராக வேலைக்குச் சேர்கிறார். அந்தப் பிணவறை மர்மங்களும் அது பிரஜன் வாழ்க்கையில் உண்டாக்கும் திடுக் நிகழ்வுகளும் பின்பாதி திகீர்!

சம்சாரம், சாராயம் என்று வாழும் ஒருவனின் வாழ்க்கையில் பிணவறை ரகசியங்களைப் புதைத்து அதிரவைத்திருக்கிறார்கள் அறிமுக இரட்டை இயக்குநர் கள் வினீஷ் - பிரபீஷ்.

அழுக்கு, முரட்டு ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கிறார் 'சாக்லேட் பாய்’ பிரஜன். முரடனாக, குடி நோயாளியாக அலைந்து திரியும்போதும், மனம் திருந்தி வீட்டுச் சூழல் உணர்ந்து கலங்கும்போதும், பிணவறை அதிர்ச்சிகளைக் கண்டு மிரளும்போதும் மனதில் நிறைகிறார். க்ளைமாக்ஸைத் தவிர, மற்ற நேரமெல்லாம் ஹீரோயிசத்துக்கு வேலை இல்லாத கேரக்டரின் அழுத்தம் புரிந்து, அதற்கேற்ப அடக்கி வாசித்து வசீகரிக்கிறார்!

ஹீரோயின் சரயூ, 'நிழல்கள்’ ரவி, சரயூவின் அக்கா சாஷா, மருத்துவர் வீரா, இன்ஸ்பெக்டர் மணிமாறன், பிணவறையில் வேலை செய்யும் ரவிராம், டி.பி.கஜேந்திரன் என ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக்கும் காட்சி அமைப்புக்கும் கச்சிதம். ரொம்பவே சீரியஸ் படத்தின் சின்ன ரிலாக்ஸ்... 'டுபாக்கூர் ரௌடி’ எம்.எஸ்.பாஸ்கர். ''பரமசிவம் விடிய விடியப் பேசியே கொல்வானே தவிர, விஷம் வெச்சுக் கொல்ல மாட்டான்! இதை யார் சொன்னா? பரமசிவமே சொன்னான்'' என்று போதையில் தன்னைப் பற்றியே சலம்புவது ஒரு ஊறுகாய் பதம்.  

பிரஜன் பிணவறையில் வேலைக்குச் சேர்வதற்கான காரணங்களை விரிவாக விளக்கி விவரிப்பதிலேயே மெனக்கெடும் நீளமான, அலுப்பான முதல் பாதியை மறக்கவைக்கிறது தடதட இரண்டாம் பாதி. சடலங் களின் உடல் உறுப்புத் திருட்டு, பிணத்துடன் பாலியல் உறவு, கொலையைத் தற்கொலையாக்கும் பி.எம். ரிப்போர்ட், இன்ஷூரன்ஸ் காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் மருத்துவக் கொலைகள் எனப் பல ரகசியங்களைப் பொளேரென்று அம்பலப்படுத்துகிறார்கள். சடலத்துக்கு அருகில் அமர்ந்து டீ, பன் சாப்பிட்டுக்கொண்டே 'மண்டையை அப்படித்தான் பொளக்கணும்’, 'அப்படியே ஸ்கெட்ச் போட்டு நெஞ்சைக் கிழிக்கணும்’, 'கொடலை உருவி வெளியே போடணும்’ என ரவிராம் பேசும் காட்சி... திக் திடுக்!

பிணவறை மர்மங்களின் ஊடாகப் பயணிக்கும் மது அம்பட்டின் ஒளிப்பதிவு... க்ளாஸிக். ஜித்தன்  ரோஷனின் இசையும், ராஜலக்ஷ்மியின் எடிட்டிங்கும் மிக மினிமம் பட்ஜெட் படத்தின் நேர்த்திக்கு அழகு சேர்க்கின்றன. தேவையிருந்தும் பிணவறைக் காட்சிகளில் கண்ணியம் ப்ளஸ் நாகரிகம் காத்தவர்கள், க்ளைமாக்ஸில் மட்டும் குமட்டல் அதிர்ச்சி கொடுத்தது ஏன்?

கலகல கமர்ஷியல், கல்லா கட்டும் கட்டுப்பெட்டி சினிமாக்களுக்கு இடையில், கவனிக்கத்தக்க வீரியமான முயற்சி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்