சிங்கம் 2 | சிங்கம் 2, சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா

வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (12/07/2013)

கடைசி தொடர்பு:13:45 (12/07/2013)

சிங்கம் 2

திருவான்மியூர், ஆந்திரா என்று சுற்றிக்கொண்டிருந்த சிங்கத்தை, ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி அதிரிபுதிரி செய்தால்... 'சிங்கம் 2’.  

'அண்டர்கவர்’ போலீஸாகத் தூத்துக்குடியில் என்.சி.சி. மாஸ்டர் வேடத்தில் உளவுபார்த்து வருகிறார் சூர்யா. ஒரு குபீர் சந்தர்ப்பத்தில் சர்வதேச போதை மருந்துக் கடத்தல் மன்னனைக் கைது செய்கிறார். தப்பிச் செல்லும் அவனை மீண்டும் கைது செய்தாரா துரைசிங்கம் என்பதே க்ளைமாக்ஸ். இரண்டு வரி ஸ்டேட்டஸ் கதையைத் திரைக்கதையால் ஊதி ஊதி நெருப்பாக்கி அனல் பறக்கவைத்திருக்கிறார் இயக்குநர் ஹரி!

'சிங்கம்’ டிட்டோவாக துரை சிங்கம் சூர்யா. கஞ்சி போட்ட துணிக்குப் போட்டியாக விறைத்த உடம்போடு அவர் எகிறி அடிக்கும் அடி ஒவ்வொன்றும் செம வெய்ட்டு. ஆனால், அவருக்கும் வாய் வலிக்க, நமக்கும் காது வலிக்க... உறுமிக்கொண்டேடேடேடே இருப்பதுதான்... ஸ்ஸ்ஸப்பா!  

ஸ்கூல் கவுன் மாட்டிவிட்டாலே பள்ளி மாணவியாகி விடுவாரா ஹன்சிகா? ஆனால், கண்ணீரோடு சூர்யாவைப் பிரியும் இடத்தில் பாப்பா நடிச்சிருக்கே! காட்சிகளில் முதிர்ச்சி முகம் காட்டும் அனுஷ்கா, டூயட்களில் விட்ட குறை தொட்டகுறைக்குப் பட்டையைக் கிளப்புகிறார்! ''பன்னிக்கு பஃபே வெச்சிருக்கானுங்க!'', ''பாவமன்னிப்பு, பாசமலர்லாம் கேக்க அவர் என்ன டி.வி.டி. கடையா வெச்சிருக்காரு?'' என்று சில இடங்களில் சலம்பும் சந்தானம், 'விஸ்வரூபம்’, 'எந்திரன்’ படங்களை ரீமிக்ஸும்போது, 'கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதீங்க சார்’ என்று சொல்லத் தோன்றுகிறது.  

'ஆபரேஷன் டி’ காட்சிகள் விறுவிறு சுறுசுறுதான். ஆனால், அதற்காக அதில் எத்தனை அத்தியாயங்களைத்தான் செருகுவது? சர்வதேச டான் டேனி ஆரம்பக் காட்சிகளில் பில்ட்அப் ஏற்றினாலும், பிறகு செல்போன் பேச்சில் 'துரை சிங்கத்தை எப்போ கொல்லுவீங்க?’ என்று கேட்டுக்கொண்டே இருப்பது... 'பிரபா ஒயின்ஸ்’ காமெடி!  

தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை, ப்ரியனின் ஒளிப்பதிவு... அச்சுஅசலாக சிங்கத்தின் ஜெராக்ஸ். நிகழாத திருமணம், மிச்சமிருக்கும் வில்லன்கள் என்று மூன்றாவது பாகத்துக்கான தூண்டிலையும் இப்போதே போட்டுவைத்திருக்கிறார்கள்.  

படம் நெடுக லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும், ஹரியின் திரைக்கதையும் சூர்யாவின் உடல் மொழியும் சிங்கத்தைக் கம்பீரமாகக் கர்ஜிக்கவைக்கிறது! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close