'சிங்கம்-3’ வந்தால் எப்படி இருக்கும்? | சூர்யா, ஹன்சிகா, அனுஷ்கா, ஹரி

வெளியிடப்பட்ட நேரம்: 10:41 (22/07/2013)

கடைசி தொடர்பு:10:41 (22/07/2013)

'சிங்கம்-3’ வந்தால் எப்படி இருக்கும்?

'சிங்கம்-3’ வந்தால் எப்படி இருக்கும்? பார்க்கலாமா?

இந்தப் படத்துலேயும் சூர்யாவோட கல்யாணத்துக்கு அப்பா ராதாரவி சம்மதிக்க மாட்டாரு. காரணம், 'சிங்கம்-2’ல டேனியை வேட்டையாடிய கையோடு, போலீஸ் வேலையில் இருந்து விலகிவிடுகிறார் சூர்யா. வழக்கமா ஒரு எஸ்.ஐ., ஏ.சி-யாகி கமிஷனர் ஆகிறதுக் குள்ள தலைமுடி நரைச்சு, தொப்பை விழுந்திடும். ஆனா, நம்ம சூர்யா இன்னும் இளமையா, அழகா இருப்பார். அவரைக் கல்யாணம் கட்டிக்கொள்ளும் உன்னத லட்சியத்திற்காகவே, இந்தப் பூமியில் அவதரித்த வரான நாயகி அனுஷ்கா முழுக் கிழவியாகியும் காதலிப்பார். (அதான் 2- லேயே அரைக்கிழவி ஆகிட்டாங்களே).

கதை இதுதான். தமிழகமே அறிந்த போலீஸ் அதிகாரியான சூர்யா, கன்னத்துல ஒரு சின்ன 'மரு’ கூட ஒட்டிக்காம, தூத்துக்குடி மாவட்டத்தில் பத்திரிகை நிருபராகப் பணிபுரிவார். தமிழக மீனவர்கள் கடத்தல் பற்றி நேரடி ரிப்போர்ட் கொடுக்கும்படி, சூர்யாவுக்கு அவரது பத்திரிகையில் அசைன்மென்ட் கொடுக்கிறார்கள். அதற்காக போட்டோகிராஃபர் சத்யன் (காமெடிக்கு ஆள் வேண்டாமா?) உடன், நாட்டுப்படகில் கள்ளத்தனமாகக் கடலுக்குள் போகிறார் சூர்யா.

அப்போது நடுக்கடலில், இலங்கை-சீனக் கடத்தல்காரர்கள் ஆயுதக்கடத்தலில் ஈடுபடுவதைக் கண்டுபிடிக்கிறார். உடனே உள் துறை மந்திரி விஜயகுமாருக்கு போன் போட்டு, 'சார், நீங்க 'சிங்கம்-1’ கிளைமாக்ஸ்ல சொன்னது உண்மைதான். இங்க ஆயுதக்கடத்தல் நடக்குது' என்கிறார். அதிர்ச்சியாகும் விஜயகுமார், 'அவங்க எந்த நாட்டுக் காரங்கனு தெரியுதா?' என்று கேட்க, 'அவங்க மொகறையைப் பார்த்தா, இலங்கை, சீனாக்காரங்க போலத் தெரியுது சார்' என்று பதில் சொல் கிறார். 'ஓ... மை காட். இந்தியாவுக்கு மிகப் பெரிய ஆபத்து காத்திருக்கு. கூடங்குளத்தை அட்டாக் பண்ணி, தமிழ்நாட்டையே சுடுகாடு ஆக்குறது தான் அவங்களோட முதல் திட்டம்' என்று பதறுகிறார். 'சார்... ம்னு சொல்லுங்க சார். நான் உடனே டூட்டியில ஜாய்ன் பண்ணிக்கிறேன்' என்று என்னமோ ஃபேஸ்புக்ல ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுக்கிற மாதிரி கேட்கிறார் சூர்யா. அவரும் சரி என்று சொல்ல, கருவாட்டுப் பானைக்குள் இருந்து, காக்கி யூனிஃபார்மை எடுத்து அணிகிறார் சூர்யா.

அப்புறம் என்ன, ரசிகர்கள் பதறப் பதற ஒரே 'பஞ்ச்' டயலாக்தான். 'சிங்கத்தைக் காட்டுல பார்த்திருப்ப, கூண்டுல பார்த்திருப்ப, உங்க நாட்டுக் கொடியிலகூட பார்த்திருப்ப... நாட்டுப்படகுல பார்த்திருக்கியாடா?' என்று பறந்து பறந்து அடிப்பார். அவரது அடி தாங்காமல், சீனக் கப்பல் ஒன்று அப்படியே கடலில் மூழ்கிவிடும். சும்மாவா? ஒவ்வொரு அடியும் 1 டன் வெயிட்டாச்சே? அவர் ஏழெட்டு அடி அடிச்சதால பாரம் அதிகமாகி அந்தக் கப்பல் மூழ்கிடுது.

கரைக்கு வந்த கையோடு உள் துறை அமைச்சர் விஜயகுமாரைச் சந்திப்பார் சூர்யா. 'சார், இது மிகப் பெரிய ஆபரேஷன். இந்த ஆயுதக் கடத்தல் கும்பலைக் கூண்டோடு பிடிக்கணும்னா எனக்கு சில சிறப்பு அதிகாரங்கள் தேவை' என்று சைலன்டா இல்லாம வயலன்டாகக் கேட்பார்.

'எந்த நாட்டுல போயும், யாரை வேணுமின்னாலும் நீங்க அடிக்கலாம். எதிரி நாட்டு ராணுவமே வந்தாலும் அவங்களை அட்டாக் பண்றதுக்கு உங்களுக்கு ரைட்ஸ் தர்றேன். இதைக்கேட்க ஐ.நா. சபைக்கே அதிகாரம் கிடையாது' என்று சிறப்பு அதிகாரம் கொடுக்கிறார் விஜய குமார்.

வேற வழி? அவர் இயக்குநர் ஹரியோட மாமனாராச்சே? கதைக் குத் தேவைங்கிறப்ப சிறப்பு அனுமதி கொடுக்கிறதுக் குத்தானே, அவரை உள் துறை அமைச்சராக நியமித்திருக்கிறார் ஹரி.

அந்த சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, வில்லன்களைக் கதறக் கதற, பார்வையாளர்கள் பதறப் பதற சூர்யா வேட்டையாடுவதுதான் மீதிக் கதை. இந்த ஆபரேஷனுக்கு அவருக்கு உதவியாக எரிமலை விவேக்கும் வருகிறார்.

இதுவரைக்கும், திரு நெல்வேலி, தூத்துக்குடியைச் சுற்றியே படம் எடுத்த சூர்யா, முதல் முதலாக உலக சினிமா எடுக்கிறார். அதாவது வில்லன்களை விரட்டி இலங்கைக்குப் போறாரு. அவங்க அங்கிருந்து தப்பி சீனா போயிடுறாங்க. அங்கே போனா, அதுக்குள்ள அவங்க ஆஸாத் காஷ்மீர் வழியாக பாகிஸ்தானில் தஞ்சம் அடைஞ்சிடுறாங்க. பாகிஸ் தானுக்குப் போனா, அந்தப் பக்கிக ஆப்கானிஸ்தான்ல தலைமறைவாகிடு துங்க. அந்தப் பாலைவனத்திலும் சூர்யாவுக்குத் தண்ணி காட்டிவிட்டு, அமெரிக்காவுக்குப் போய்விடுகிறார் கள். கடைசியில் அவர்களை சூர்யா, என்கௌன்டர் செய்வதுதான் கிளைமாக்ஸ்.

இதற்கிடையில் 'பத்திரிகை தன் வரலாறு கூறுதல்’ என்று 8-ம் வகுப் பில் தமிழ் கட்டுரை எழுதுவதற்காக சூர்யாவின் பத்திரிகை அலுவலகத்தை சுற்றிப் பார்க்க வருகிறார் ஹன்சிகா. (இன்னும் சின்னதா ஸ்கர்ட் போட்டு, இன்னும் டைட்டா சட்டை போட்டா அவங்க எல்.கே.ஜி. பொண்ணாவே நடிக்க லாம் பாஸ். கதையா நமக்கு முக்கியம்? ஹி...ஹி...) அவங்களைப் பார்த்ததும் செகண்ட் பார்ட்ல செத்துப்போன ஹன்சிகா ஞாபகம் வந்து விடுகிறது சூர்யாவுக்கு. அந்தப் பாசத்தைத் தப்பாகப் புரிந்துகொண்டு, சூர்யாவை லவ் பண்ணுகிறார் இந்த ஹன்சிகா.

அந்தக் காதலை பாடல் காட்சி களில் மட்டும் பயன்படுத்திக்கொண்டு கெட்ட ஆட்டம் போடும் சூர்யா, இரண்டு பாடல்கள் முடிந்ததும் 'நான் உன்னைய என் குழந்தை போலத்தான் நினைச்சேன். எனக்கும் அனுஷ் காவுக்கும் முதல் பாகத்திலேயே கல்யாணம் முடிஞ்சிருந்தா, உன் வயசுல ஒரு பொண்ணு இருந்திருப்பா' என்று கண் கலங்கச் சொல்வார். அப்புறம் என்ன? இந்த ஹன்சிகா வையும் விஷத்தை வெச்சுக் கொன்னுட வேண்டியதுதான்.

3-வது பாகத்திலேயாவது அனுஷ்காவைக் கொன்னுட்டு, ஹன்சிகாவோடு சூர்யாவை ஜோடி சேர்ப்பார்கள் என்ற ஆசையோடு படத்திற்கு வந்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றம்தான். அதற்குத்தான் அஞ்சலி இருக்காங்களே! 'சிங்கம்-2’-ல் ஓப்பனிங் ஸாங்கில் குத்தாட்டம் போட்ட அஞ்சலி, அதில் இரண்டு ஆடைகளை மட்டும் குறைத்துக் கொண்டு, இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு நடனம் ஆடியிருக்கிறார். இது ரசிகர்களின் புண்பட்ட மனதிற்கு மருந்திடும் என்பதில் சந்தேகமே இல்லை!

- கே.கே.மகேஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close