சினிமா விமர்சனம் : மரியான்

ரணத்தின் விளிம்புக்கே சென்ற 'மரியான்’ காதலால் மீண்டு(ம்) வருவானா..?

மீனவக் கிராமத்தின் 'கடல் ராசா’ தனுஷ். ஆனால், பார்வதியுடனான தனது காதலைக் காப்பாற்ற, பாலைவன சூடானுக்கு வேலைக்குச் செல்கிறார். இரண்டு வருட வேலை முடிந்து ஆசை ஆசையாக காதலியைப் பார்க்க ஊருக்குத் திரும்பும்போது, உள்ளூர் மாஃபியாக்கள் தனுஷைக் கடத்துகிறார்கள். பிறகென்ன நடந்தது என்பது 'நெஞ்சே எழு’ கதை!

'கடல் ராசா’ நாயகன், துளி நீர் இல்லாத பாலைவனத்தில் அல்லாடும் முரண் கதையோடு களம் இறங்கியுள்ளார் அறிமுக இயக்குநர் பரத் பாலா. நடிகனாக ஒரு ஃப்ரேமைக் கூட வீணாக்கவில்லை தனுஷ். ஆழ்கடல் வேட்டையின்போதும், முதல் முத்தத்துக்குப் பிறகான கிறக்க மயக்கத்திலும்,  'என்னா...? இவனுங்க சுட மாட்டானுங்கடா’ என்று ஆதங்கம், கோபம் கலந்து வெடிக்கும் இடத்திலும், பணிபுரியும் நிறுவனத்தை அழைப்பதற்குப் பதில், பார்வதியை அழைத்து ரகசியமாகப் பேசி இறுதியில் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் முத்தமிடுவதாகட்டும்... க்ளாஸிக் தனுஷ்!  

பார்வதி... இத்தனை நாட்களாக எங்கே போன ராசாத்தி? அத்தனை பெரிய கண்களுடன் காதல், கவலை, சோகம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி எனத் துல்லியமாக உணர்வுகளைக் கடத்திவிடுகிறார். பார்வதியின் பரிதவிப்பு தனுஷின் 'தப்பிக்க வேண்டுமே’ படபடப்பை நமக்கும் கடத்துகிறது. படம் முழுக்க தனுஷ், பார்வதி என இருவருமே ஆக்கிரமித்துக்கொள்வதால் அப்புக் குட்டி, இமான், சலீம் குமார், உமா ரியாஸ், ஜெகன் ஆகியோரின் கச்சித நடிப்பு கவனிக்கப்படாமலே கடக்கிறது.

'கடல் ராசா..’, 'நெஞ்சே எழு..’, 'எங்கே போன ராசா’, 'இன்னும் கொஞ்சம் நேரம்..’ பாடல்களில் வசீகரிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, பின்னணியிலும் தடதடக்கிறது. ஆழ்கடலுக்குள் நழுவுவதாகட்டும், பாலைவனத்தில் சோர்ந்து விழுவதாகட்டும்... மார்க் கோனிக்ஸின் ஒளிப்பதிவு அட்டகாசம். ஜோ டி குரூஸின் வசனங்கள் இயல்பு.

நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, வசனங்கள்... இவை எல்லாமே 'சூப்பர் ஃபிட்’ ஆகிவிட்டதே... இதற்கு மேல் என்ன வேண்டும் ஒரு சினிமாவுக்கு என்று நினைத்துவிட்டார்களோ? திரைக்கதை என்ற வஸ்து வேண்டுமே பாஸ்?  பலவீனமான திரைக்கதையில் பின்னப்பட்டிருக்கும் ஒவ்வொரு காட்சியும் மிக நீண்ட நெடிய கடல் பயண அலுப்பு. சூடானின் அந்தக் 'குழந்தை’ தீவிரவாதிகளிடமிருந்து தப்பிக்க தனுஷ் எடுக்கும் முயற்சிகள்... எல்.கே.ஜி. பில்டப்புகள்!

கள வேலைகளில் செமத்தியாக ஸ்கோர் செய்திருக்கும் இந்த மரியான், காகிதத்தில் கப்பல் விட்டதுதான் சிக்கல்!

- விகடன் விமர்சனக் குழு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!