ஐந்து ஐந்து ஐந்து - சினிமா விமர்சனம்

சைக்கோ வில்லனிடம் இருந்து  தன்னையும் தன் காதலியையும் காப்பாற்றிக்கொள்ள, ஹீரோ போராடும் ஆக்ஷன் பேக்கேஜ்தான் 'ஐந்து ஐந்து ஐந்து’!

பரத் - சந்தானம் இருவரும் அண்ணன்-தம்பிகள். ஒரு விபத்தில் சிக்கும் பரத், அந்த விபத்தில் தன் காதலி மிருத்திகா இறந்துவிட்டதாக நம்புகிறார். ஆனால்,'உனக்கு அப்படி ஒரு காதலியே இல்லை. விபத்தின் காரணமாக, இல்லாத ஒன்றை இருப்பதாக உன் மூளை கற்பனை செய்துகொள்கிறது’ என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த மர்ம முடிச்சை பரத் அவிழ்க்கும்போது, ஒரு கும்பல் அவரைத் துரத்துகிறது. யார் அந்தக் கும்பல், பரத்துக்கு காதலி இருப்பது உண்மையா பொய்யா என்பது திக் திக் க்ளைமாக்ஸ்!

மென்மை பாணியில் இருந்து விலகி வன்மையும் வன்முறையும் நிறைந்த ஆக்ஷன் த்ரில்லரைக் கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் சசி.  யூகிக்க முடிந்த பல காட்சிகளுக்கு இடையில் சடாரென தலைகாட்டும் சில திருப்பங்கள்... சபாஷ்!  

அமுல்பேபி காதலன், மொட்டத் தலை நோயாளி, '8 பேக்’ ஹீரோ என விதவித கெட்டப்பும், அதற்கு ஏற்ற தனித்தனி நடிப்புமாக மொத்தப் படத்தையும் ஒற்றை ஆளாகத் தாங்கி நிற்கிறார் பரத்.  அவசரத்தில் மிருத்திகாவின் செல்போனை எடுத்து வில்லன் மேல் எறியும் ஆவேசத்தில்... அசத்தல்!  அப்போதுதான் பள்ளி முடிந்துவந்த சின்னப் பெண் போல க்யூட் பியூட்டி மிருத்திகா. பரத்துக்கு ஸ்பெஷல் பவர் இருப்பதாக நம்புவது, காதலை மனசுக்குள்ளேயே வைத்து அவஸ்தைப்படுவது, 'அவன் வேற’ என வில்லனிடம் சீறுவது என நடிப்பிலும், அழகிலும் ரசிக்க வைக்கிறார். 'அவளை ஜெனிலியானு நினைச்சேன். ஆனா அஞ்சலிப் பாப்பாவா இருக்காளே’ என்று ஹீரோயினை வாரும் இடத்தில் சிரிக்கவைக்கும் சந்தானம், குணச்சித்திர நடிப்பிலும் ஓஹோ!

த்ரில்லர் கதைக்கு விறுவிறுப்பு சேர்க்க வேண்டிய ஒளிப்பதிவு, காதல் கதை ரசனையில் பயணிப்பது... உறுத்தல். அவ்வளவு தடாலடி கில்லாடி திட்டங்கள் தீட்டும் வில்லன், சவப்பெட்டியை டம்மியாகக்கூட நிரப்பாமல் இருப்பது ஏன்?

மர்மங்கள், ரகசியங்களில்  கவனம் செலுத்திய இயக்குநர், ஒட்டுமொத்த திரைக்கதையின் வேகத்தை அதிகரித்திருக்கலாம். படத்தின் ஆரம்பத்தில் 'ரவுடி கேர்ள்ஸ்’ என்றொரு பாட்டு வருகிறது. க்ளைமாக்ஸில் சாவு பாட்டை நவீன  மாக இசைத்திருக்கிறார்கள். பரத் '8 பேக்’ வைத்திருக்கிறார். படத்துக்கு 'ஐந்து ஐந்து ஐந்து’ என்று தலைப்பு...  இதெல்லாம் எதற்கு சசி?

- விகடன் விமர்சனக் குழு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!