Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆதலால் காதல் செய்வீர் - சினிமா விமர்சனம்

'ஆதலால் காதல் (மட்டும்) செய்வீர்’ படம்!

க்ளாஸ்மேட்  சந்தோஷ் ரமேஷ் (அறிமுகம்) - மனீஷாவுக்கு காதல். சின்னச் சின்ன சில்மிஷங்கள் 'ஓவர் தனிமை’ அளவுக்கு எல்லை மீற, கர்ப்பமாகிறார் மனீஷா. பெற்றோருக்குத் தெரியாமல் கருவைக் கலைக்க முயல்கிறார்கள். ஆனால், விஷயம் தெரிந்துவிடுகிறது. காதலர்கள் ஒன்றுசேர நினைக்க,  'கருவைக் கலைக்க வேண்டும்’ என்பதை சந்தோஷின் பெற்றோர் நிபந்தனையாக வைக்கிறார்கள். 'குழந்தைதான் ஒரே ஆதாரம்’ என மனீஷா மறுக்க, வயிற்றுப் பிள்ளையை வைத்து நடத்தப்படும் நாடக சென்ட்டிமென்ட் டால் காதலும் கருவும் என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ்!

நீண்டகாலத் தயாரிப்பாக இருந்தாலும், 'நாடகக் காதல்’ என்ற பதம் தமிழகத்தில் பரபரக்கும் சூழலில்  வெளியாகியிருப்பதால் 'டாபிக்கல் டச்’ சினிமாவாகிவிட்டது.  

'நான் ஹஸ்பண்ட்னு சொன்னா நம்ப மாட்டாங்க...’ என்று தன் காதலியின் கருவைக் கலைக்க நண்பனைக் கணவனாக நடிக்க வைக்குமிடம்... பெரியவர்களுக்கான பகீர். ஒரு கணம் உலுக்கியெடுக்கும் அந்த க்ளைமாக்ஸ் பாடல்... இளைஞர்களுக்கான திகீர். இந்த இரண்டும் ஓ.கே. ஆனால், மற்றபடி எந்தத் திருப்பமுமற்ற திரைக்கதை அலுப்பு!

நட்சத்திரப் பட்டாளம் இல்லாத மொத்தப் படத்தையும் ஒற்றைத் தூணாகத் தாங்கி நிற்பது மனீஷாவின் விழி, இதழ்களும் உடல் மொழிகளும் மட்டுமே! வீட்டில் காதலை மறைக்க மனீஷா செய்யும் சேட்டைகளும் குறும்புகளும்... ச்சோ ஸ்வீட்!  'உன்  பொண்ணு படுத்ததுக்கு எவ்ளோ காசு வேணுமோ, அதை வாங்கிட்டுப் போ’  என்று பஞ்சாயத்துக்களில் தெறித்து விழும் வார்த்தைகளின்போது, ஒரு வார்த்தைக் கூட பேசாமல் விம்மி அழும் காட்சியில் பதற வைக்கிறார் ஜெயப்பிரகாஷ். 'நீங்க மாமா ஆகிட்டீங்க’ என்று சந்தோஷை வாழ்த்தும்போது, 'நீங்க வேற... சீக்கிரமே அவன் அப்பாவே ஆகப் போறான்’ என்று கலாய்க்கும் இடங்களில் சிரிக்க வைக்கிறார் அர்ஜுன். இந்தக் கதாபாத்திரங்களுக்காக மெனக்கெட்ட அளவுக்கு, சந்தோஷின் பாத்திரத்தை வலுவாக்கவில்லையே டைரக்டர் சார். சைக்கிள் கேப்பில் பெல் அடிக்கும் ஸ்கோப்கூட இல்லாமல் திண்டாடுகிறார் சந்தோஷ்.  

'லவ்வர்ஸை அப்படியே விட்ரணும்... அவங்களா சண்டைபோட்டுப் பிரிஞ்சுடுவாங்க. நாம பிரிக்க நினைச்சாதான், அவங்க காதல் ஸ்ட்ராங் ஆகிரும்’, 'உங்க பொண்ணு செத்துட்டானு நினைச்சு வந்து சேருங்க’... சூழ்நிலைக்கேற்ற சுசீந்திரன் - கிளைட்டனின் நச் நச் வசனங்கள் படத்தின் பலம்! பாடல்கள், பின்னணி இசை இரண்டிலும் ஏன் இத்தனை ஆவரேஜ் ஸ்கோர் யுவன்? முன்பாதியில் கேம்பஸ் உற்சாக வண்ணங்கள் பொழியும் ஏ.ஆர்.சூர்யாவின் ஒளிப்பதிவு, க்ளைமாக்ஸ் காட்சிகளில் அழுத்தம் சேர்க்கிறது. ஆனால், காட்சிகளின் வீரியத்துக்காக அந்தப் பச்சைக் குழந்தையை படாதபாடு படுத்தியிருப்பது... பயங்கரம்!  

   'இளைய தலைமுறை இப்படி இருக்கிறதே’ என்ற இயக்குநரின் ஆதங்க அக்கறையை, அலட்சியமான சம்பவங்கள் அழுத்தமில்லாமல் வீரியமிழக்க வைத்துவிட்டது!      

- விகடன் விமர்சனக் குழு

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்