Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொடூர சினிமாக்கள்!

ந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு என்பது சினிமாவாகத்தான் இருக்க முடியும். சொல்லில் அடங்காத கலைவெறியைத் தீர்க்கும் பொருட்டு உருவான எத்தனையோ திரைப்படங்கள் இன்றும் காலத்தைத் தாண்டி நிலைத்து நிற்கின்றன. ஆனால், மனித மூளை அடுக்குகளில் சொல்லப்படாத வக்கிரப் பக்கங்களும் இருக்கின்றன. அந்த வக்கிரப் பக்கங்களின் வெளிப்பாடாக உருவானதுதான் 'ஸ்னஃப் படங்கள் (snuff films)... மனித நாகரிகத்தின் ஒரு கரும்புள்ளி இது என்றே கூறலாம். அது என்னதான் ஸ்னஃப் படங்கள் என்கிறீர்களா?

 

ஒரு பெண்ணையோ ஆணையோ துன்புறுத்திக் கொலை செய்யும் காட்சிகளைத்தான் ஸ்னஃப் ஃபிலிம் வகையில் சேர்க்கிறார்கள். ஒருவரைக் கொலை செய்வதை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு அதை ரசிக்கும் மன நிலை மேற்கத்திய நாடுகளில் ரகசிய உலகமாக இயங்கியது. இந்த வகைப் படங்களை பெரும்பாலும் சீரியல் கில்லர்கள்தான் எடுத்தார்கள் என்று நினைத்தால், அது தவறு. சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் பலரின் இன்னொரு முகம்தான் இந்த ஸ்னஃப் படங்கள். ஸ்னஃப் படங்களில் எத்தனை வகை, அதில் என்னவெல்லாம் இருக்கும் என்பதை நிச்சயம் இங்கு எழுத முடியாது. அது கற்பனைக்கே அப்பாற்பட்ட கொடூரத்தைத் தாங்கியவை. ஆனால், இந்த வகைப் படங்களை மையமாக வைத்து உருவான சில படங்கள் ஹாலிவுட்டில் சக்கைப்போடு போட்டன.

1999-ல் ரிலீஸான 8 எம்எம் என்ற படம் மிக முக்கியமானதாகக் குறிப்பிடப்படுகிறது. ஜோயல் ஷூமேக்கர் என்பவரின் இயக்கத்தில் நிக்கோலஸ் கேஜ் டிடெக்டிவ் பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தின் துவக்கக் காட்சியில் ஒரு பெரும் பணக்காரச் சீமாட்டியின் வீட்டுக்கு நிக்கோலஸ் அழைக்கப்படுவார். அங்கு இறந்துபோன தன் பணக்காரக் கணவரின் ரகசிய அறையில் இருந்து ஒரு ஃபிலிம் சுருள் கிடைத்ததாகவும், அதில் ஒரு பெண் முகமூடி அணிந்த ஒரு மனிதனால் வக்கிரமாகக் கொலை செய்யப்படுவதைப்போல காட்சி இருப்பதாகவும் அவள் சொல்வாள். இது பொய்யா அல்லது நிஜமா எனக் கண்டுபிடித்துத் தரவும் கேட்டுக்கொள்வாள். அந்த ஃபிலிம் சுருள் உண்மையானது அல்ல, சித்தரிக்கப்பட்டது என சமாதானம் சொல்லும் நிக்கோலஸிடம், அப்படி எனில் ரகசிய அறையில் பாதுகாக்க வேண்டிய அவசியம் என்ன எனக் கேட்டு உண்மையைக் கண்டுபிடிக்கப் பணிக்கிறாள், அந்த மூதாட்டி. அப்போதுதான் ஹாலிவுட்டின் இன்னொரு முகம் அவருக்குத் தெரிய வருகிறது. சினிமா ஆசையில் ஓடிவரும் ஒரு பெண் ஸ்னஃப் கும்பலிடம் மாட்டி, அநியாயமாகக் கொலை செய்யப்படுகிறாள். அந்த ஸ்னஃப் படம் தயாரிக்கப்பட்ட வருடத்தில் அந்தப் பெரியவரின் வங்கிக் கணக்கில் இருந்து பெருந்தொகை டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டிருப்பதை வைத்து கலிபோர்னியாவில் ரகசியமாக இயங்கும் ஸ்னஃப் படங்கள் தயாரிக்கும் வக்கிர உலகத்தையும் நெருங்குகிறார். அதன் பிறகு என்னவானது என்பது க்ளைமாக்ஸ். இந்தப் படமே ஸ்னஃப் படங்களைப் பற்றிய தெளிவான பார்வையைக்கொண்ட, எல்லோரும் பார்க்க ஏதுவான சினிமா படம்.

2000-ல் ரிலீஸானது 'அமெரிக்கன் சைக்கோ’ என்ற படம். நடிகர் கிறிஸ்டியன் பேல் இந்தப் படத்தில் ஒரு மிகப் பெரிய பிசினெஸ் மேனின் இரவு வாழ்க்கையைப் பிரதிபலித்தார். நிஜத்தில் நம் வக்கிரக் குணம் தலை தூக்கினால், எந்த எல்லை வரை போகும் என்பதற்கு இந்தப் படம் ஒரு சாம்பிள். இந்த இரண்டுப் படங்களைத் தவிர, ஸ்னஃப்பைத் தழுவி எடுக்கப்பட்ட படங்கள் நிறைய உண்டு த்ரில்லர் வகையைச் சேர்ந்த அந்தப் படங்களில் சில : 1977-ல் வந்த 'லாஸ்ட் ஹவுஸ் ஆன் டெட் எண்ட் ஸ்ட்ரீட்’, 1979-ல் வந்த 'சிட்னி ஷெல்டன்ஸ் ப்ளட்லைன்’, 1980-ல் வந்த 'ஹானிபல் ஹோலோகாஸ்ட்’ , 1983-ல் 'வீடியோட்ரோம்’, 1986-ல் 'ஹென்றி; போர்ட்ரெய்ட் ஆஃப் எ சீரியல் கில்லர்’ என லிஸ்ட்  நீளம்.

இதோடு இன்றளவும் சில ஒரிஜினல் ஸ்னஃப் படங்கள் என அமெரிக்கக் காவல் துறை, குற்றப் பிரிவின் ஆவணப் பாதுகாப்பு மையத்தில் சில வீடியோ படங்களைப் பாதுகாத்து வருகிறது. அதில் மிக முக்கியமானது 1983 முதல் 85 வரையிலான காலங்களில் சார்லஸ் மற்றும் லியோனார்டு இருவரும் சேர்ந்து பெண்களைக் கொலைசெய்ததோடு அதைப் பக்காவாக வீடியோ படமாகவும் பதிவுசெய்து வைத்திருந்தது. அதேபோல கனடாவைச் சேர்ந்த பால் பெர்னார்டோ மற்றும் கர்லா ஹோமல்கா இருவரும் பாலியல் வன்புணர்வை வீடியோவாக பதிவுசெய்து வைத்திருந்தனர். ஜெர்மனியைச் சேர்ந்த கோர்சன் மற்றும் மைக்கேல் இருவரும் கூட்டாகச் சேர்ந்து ஒரு விலைமாதுவை கொலை செய்ததை வீடியோவாகப் பதிவுசெய்து அதை ஸ்னஃப் இண்டஸ்ட்ரியில் விற்க அதை வாங்கவும் ஒரு பெருங்கூட்டம் போட்டி போட்டதாம்.

ஸ்னஃப் என்ற வார்த்தை ஏதோ மேற்கத்திய நாட்டிற்கான ஒன்றாக நினைக்காதீர்கள். பல ஸ்னஃப் படங்கள் எடுக்கும் கும்பல்களைவிட கொடூரமான மனநிலையில் பாலியல் வன்புணர்வுகளும் கொலைகளும் மலிந்துபோன நாடாகி எவ்வளவோ நாளாகிவிட்டது நம் தேசம்!

-ஆர்.சரண்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்