தேசிங்கு ராஜா - சினிமா விமர்சனம் | தேசிங்கு ராஜா, விமல், பிந்து மாதவி

வெளியிடப்பட்ட நேரம்: 13:21 (31/08/2013)

கடைசி தொடர்பு:13:21 (31/08/2013)

தேசிங்கு ராஜா - சினிமா விமர்சனம்

கொட்டைப்பாக்கால் ஏற்பட்ட இரண்டு ஊர்ப் பரம்பரைப் பகையைத் தீர்த்து வைக்கும் காதலே... 'தேசிங்கு ராஜா’!

கிளியூரைச் சேர்ந்த விமல் குடும்பத்துக்கும் புலியூரைச் சேர்ந்த பிந்துமாதவி குடும்பத்துக்கும் பாட்டன், முப்பாட்டன் காலத்தில் இருந்தே பகை. பிந்துமாதவியின் அப்பா, 'விமலைக் கொல்ல வேண்டும்!’ என்று கொலைவெறியோடு தேடிக்கொண்டிருக்க, விமலோ, பிந்துமாதவி மேல் காதல்கொள்கிறார். காதலுக்குச் சம்மதிப்பதுபோல விமலைத் தீர்த்துக்கட்ட முயற்சிக்கிறார்கள் பிந்துமாதவி குடும்பத்தினர். இதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் கிளியூர்காரர்கள், பிந்துமாதவியின் கண் முன்னாலேயே அவரின் அப்பாவைக் கொன்றுவிட, இருவரும் சேர்ந்தார்களா? குடும்பப் பகை என்ன ஆனது? என்பது கிச்சுகிச்சு க்ளைமாக்ஸ்.

சிரிக்கவைத்தால் போதும் என்று முடிவு எடுத்துவிட்டார் போல இயக்குநர் எழில். லாஜிக், கன்டினியூட்டி, எடிட்டிங் என்று எதைப் பற்றியும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எங்கோ ஆரம்பிக்கும் கதை, ஏகப்பட்ட யு-டர்ன்கள் அடித்து எங்கோ போய் நிற்கிறது. காமெடிப் படம் எடுக்கலாம் பாஸ்... காமெடியாப் படம் எடுக்கலாமா?

இதற்கு முந்தைய படங்களில் எப்படி நடித் தாரோ...  அப்படியே இதிலும் விமல். அப்பப்போ கொஞ்சம் வாயைத் திறந்து பேசுங்க பாஸ். பிந்துமாதவியின் அப்பா அரிவாளால் வெட்ட வரும்போதுகூட அசமந்தமாக நிற்பது ஏன்? இந்தக் கதைக்கு இது போதுமோ?  

அழகான பிந்துமாதவிக்கு, அவ்வளவாக நடிக்க ஸ்கோப் இல்லை. முதல் பாதியில் ஹோம்லி டிரெஸ்ஸில் கிளாமர் காட்டுபவர், இரண்டாம் பாதியில் ஒல்லி வில்லி அவதாரம் எடுக்கிறார் அவ்வளவே...!  

மொத்தப் படத்தையும் தாங்கி நிற்பது, சிங்கம்புலி - பரோட்டா சூரி - சாம்ஸ் கூட்டணி. ''தாலியை அத்துக்கிறது உங்க குடும்ப வழக்கம்னா, உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் பிரச்னை வரும்போது பண்ணுப்பா!'' என்று பஞ்சாயத்தில் எகிறும் சிங்கம்புலியின் அலம்பலுக்கும், ''எவ்வளவு பேர் வந்தாலும் மூளை, இதயம், கிட்னி எல்லாத்தையும் தனித்தனியா எடுத்துப் பிரிச்சுவைப்போம்'' என்று கலவர பூமியில் சூழல் தெரியாமல் கறி விருந்து பற்றி பேசும் பரோட்டா சூரியின் சலம்பலுக்கும் தியேட்டரில் அப்படி ஒரு அப்ளாஸ்.

காமெடி வில்லனாக வரும் ரவி மரியா, முதலில் கத்திக் கத்தி கடுப்ஸ் ஏத்தினாலும் 'இப்போ நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்னு உனக்குத் தெரியாது’ என்று பரோட்டா சூரியை புரட்டியெடுக்கும்போது கெக்கேபிக்கே சிரிப்பு..  

விமலை கொல்ல தன் குடும்பமே கொந்தளிக்கும்போது பிந்துமாதவி கிளியூர் வந்து ஒரு கில்மா பாட்டு பாடுவது, இரு குடும்பத்தின் தனிப்பட்ட பகைக்கு இரண்டு ஊரே அடித்துக்கொள்வது என அரதப்பழசான கதையில் அம்புட்டு ஓட்டைகள்.

பரம்பரைப் பகை, எதிர் துருவக் காதல், கொலைகள் என்று ரூட் எடுக்கும் கதையின் க்ளைமாக்ஸில் சியர் கேர்ள்ஸ், ஷகிராவின் 'வாஹா... வாஹா...’ பாட்டு, வில்லனின் கங்கணம் ஸ்டைல் டான்ஸ் எல்லாம் வருகிறது. உட்கார்ந்து யோசிச்சீங்களா பாஸ்?

- விகடன் விமர்சனக் குழு

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்