வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம் | வருத்தப்படாத வாலிபர் சங்கம், சிவகார்த்திகேயன், சூரி, சத்யராஜ், ஸ்ரீதிவ்யா, பொன்ராம்

வெளியிடப்பட்ட நேரம்: 10:51 (12/09/2013)

கடைசி தொடர்பு:10:51 (12/09/2013)

வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்

கிராமத்தின் பெரிய தலைக்கட்டு 'சீரியஸ்’ சிவனாண்டியின் கெத்தை அடித்து நொறுக்கும் 'சிரிப்பு’ போஸ் பாண்டியின் ரகளை ராவடியே... 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’.

ஊரின் உதார் பார்ட்டி சிவகார்த்திகேயன், வெள்ளைக்காரன் கொடுத்த துப்பாக்கியுடன் தெனாவெட்டாக வளையவரும் ஊர்ப் பெரியவர் சத்யராஜின் பெண்ணைக் காதலிக்கிறார். 'காதல் நிறைவேறியதா’ என்பது காமெடி கலாட்டா. தமிழ் சினிமா டிரெண்ட், உலக சினிமாவுக்கான சீரியஸ் முயற்சி பற்றியெல்லாம் வருத்தப்பட்டுக்கொள்ளாமல், சீனுக்கு சீன் சிரிக்க வைத்தால் போதும் என்று இறங்கி அடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பொன்ராம்.  

அனைத்து ஹீரோக்களும் சம்பிரதாயமாக நடிக்கும் 'கிராமத்துக் காதல்’ கதையில், இது சிவகார்த்திகேய னுக்கான கோட்டா! மனுஷன் வெளுத்துக்கட்டி யிருக்கிறார். 'இந்தத் திருவிழாவில் ஆடலும் பாடலும் நடத்தத் தடை போட்டீங்கன்னா, இந்த நாட்டைவிட்டுப் போறதைத் தவிர எனக்கு வேற வழி தெரியலை’  என்று  சலம்புவதாகட்டும், காதல் தோல்வி சோகம் ததும்ப அமர்ந்திருக்கும்போது, 'அக்கா உங்களைக் கூப்பிட்டாங்க’ என்று சொல்லும் குழந்தையிடம், 'உங்க அக்கா நல்லா இருப்பாளா?’ என்று வருத்தக் குரலில் கேட்பதாகட்டும், தோழியின் கிண்டலுக்குப் பதில் சொல்ல முடியாமல், 'டக்குனு கலாய்க்க வரலையே’ என்று ஃபீலிங்ஸ் விடுவதாகட்டும்... அட்டகாசம் சிவா. அதிலும் ஹீரோயினை முதன்முதலாக சேலையில் பார்த்துவிட்டு அவரது பார்வைக்குக் கொடுக்கும் 'பட்டாம்பூச்சி பவுன்சர்’ ரியாக்ஷன்... நச்! அத்தனை பில்டப் முறுக்கு காட்டும் சத்யராஜையும் விட்டுவைக்காமல் காமெடி ஆட வைத்திருக்கிறார்கள்.

அறிமுக ஸ்ரீதிவ்யா... அழகு முகம்! பள்ளிச் சீருடை, பாவாடை தாவணி, பட்டுப் புடவை என அனைத்திலும் அழகும் பொலிவும் ததும்ப, உள்ளம் கொள்ளை கொள்ளும் நடிப்பும் ஆஹா! சிவாவின் சேட்டை கலாட்டாக்களுக்கு பக்கா பக்கவாத்தியமாக 'வார்த்தை’ சுழட்டுகிறார் சூரி!

பழகிய திரைக்கதை ஆங் காங்கே தரைதட்டி நிற்கும்போது எல்லாம், காமெடி பன்ச்களை ஏராள தாராளமாகத் தூவிக் கப்பலைக் கரை சேர்க்கிறது எம்.ராஜேஷின் வசனம்! 'ஊதா கலரு ரிப்பன்...’ பாடலில் மேளம் வெடிக்கிறது இமானின் இசை.  

ஒரு காட்சியில் சிவாவும் சூரியும் ரொம் பவே கோபமாகச் சண்டை போட்டுக்கொண்டிருக்க, நடுவே ஒரு பெரியவர், 'ஓரமாப்போய் விளையாடுங்கப்பா’ என்று அவர்களை விலக்கிவிட்டுச் செல்கிறார். இப்படி படத்தின் எல்லா இக்கட்டான சூழ்நிலைகளையும் ஒரு சிரிப்பு பன்ச் அடித்து, முடித்து வைக்கிறார்கள்.

'சினிமா மொழி, எத்தனை உன்னதமானது தெரியுமா? அதை வைத்துக்கொண்டு, இப்படி ஜாலி அரட்டை அடித்திருக்கிறீர்களே!’ என்று வருத்தப்பட மாட்டீர்கள் என்றால், இந்தச் சங்க நடவடிக்கையில் தாராளமாகப் பங்கெடுக்கலாம்!  

- விகடன் விமர்சனக் குழு

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close