6 மெழுகுவத்திகள் - சினிமா விமர்சனம் | பூனம் கவுர், சினிமா விமர்சனம், poonam kaur, cinema review

வெளியிடப்பட்ட நேரம்: 10:08 (26/09/2013)

கடைசி தொடர்பு:10:08 (26/09/2013)

6 மெழுகுவத்திகள் - சினிமா விமர்சனம்

ந்தச் சிறுவன், பெற்றோரைப் பரிதவிக்கவிட்டு காணாமல் போன தன் பிறந்த நாளில் ஊதி அணைத்தது, '6 மெழுகு வத்திகள்!’

தன் மகனின் ஆறாவது பிறந்த நாளன்று அவனை மெரினா பீச்சில் தொலைத்து விடுகிறார் ஷாம். காவல் நிலையத்தில் புகார் கொடுத்துக் காத்திருக்கிறார். அவர் மகனைக் கண்டுபிடித்துக் கொடுக்கவேண்டிய போலீஸோ, மெள்ள ஓர் இருட்டு உலகத்துக்கு அவரை அறிமுகப் படுத்திவிட்டு தன் பொறுப்பைக் கை கழுவுகிறது. சென்னையில் தொடங்கி ஆந்திரா நகரி, வாராங்கால், மகாராஷ்டிரத்தின் போபால், கோவா, மேற்கு வங்கத்தின் கொல்கத்தா... என இந்தியா முழுக்க குழந்தை களைக் கடத்திப் பல்வேறு இடங்களில் விற்கும் மாஃபியா வலைப்பின்னல் கும்பலை ஷாம் சந்திப்பதும், அதனூடான துயர அனுபவங்களுமே படம்!

இந்தியாவின் 'மலிவு விலைத் தொழிலாளர்’ ரகசியத்தையும், குழந்தைக் கடத்தல் நெட்வொர்க் எத்தனை வீரியமாகப் பரவியிருக்கிறது என்பதையும் சினிமாவில் ஆவணப்படுத்தியிருக்கும் இயக்குநர் வி.இஸட். துரையின் முனைப்பு, கிரேட்!

மகன் தொலைந்தபோது ஒரு தந்தையின் பரிதவிப்பை முழுமையாகக் கொண்டு வருவதில் திணறும் ஷாம், வெவ்வேறு பயண அனுபவங்களுக்குப் பிறகு சிக்குப் பிடித்து அடர்ந்த முடி, தாடியும் வீங்கிய கண்களுமாகப்  பரிதவிக்கும் காட்சிகளில் நம்மை ஆக்கிரமித்துக்கொள்கிறார். கடத்தப்பட்ட சிறுமி தப்பி வரும்போது அவளைக் காப்பாற்றுவதா, வேண்டாமா எனப் பதைப்பும் பதட்டமுமாகத் தவிக்கும் இடத்திலும், கொல்கத்தாவில், 'என்னைக் கூட்டிட்டுப் போங்க’ எனப் பல்வேறு மொழிகளில் குழந்தைகள் அவரைச் சூழ்ந்துகொள்ளும்போது உடைந்து நொறுங்கும் இடத்திலும்... பார்வை யாளர்களை நெகிழ வைக்கிறார்!

ஷாமின் மனைவியாக பூனம் கவுர். ஊனமுற்ற பிச்சைக்காரரின் காலில் 'அண்ணா...’ எனக் கதறி அழும் காட்சியில் மட்டும் அதிர்ச்சி கொடுக்கிறார்.

ஊனமுற்ற பிச்சைக்காரராக வரும் ஸ்ரீதர்,  கடத்தல் டான் திவாகராக வரும் அனில் முரளி இருவரும் அசத்தி இருக்கிறார்கள். பிச்சைக்கார வேடத்தில் நிழல் உலகத்துக்கே உளவு சொல்வது, காவல் துறையினரைக் கெத்தாக டீல் செய்வது எனப் பிரமாதப்படுத்தியிருக்கிறார் ஸ்ரீதர். 'ராம் சார்’, 'ராம் சார்’ என குரலில் கனிவும் செயலில் குரோதமுமாக வில்லத் தனம் செய்யும் அனில் முரளி, சூப்பர். ஆனால், நிழலுலக வில்லன் என்றாலே, அவர் பெண்மை கலந்த ஆணாக இருக்க வேண்டும் என்ற 'சித்தாந்தம்’ எரிச்சல்!  

'மேலே இருக்கிறவன் கீழே இருக்கிறவனுக்குப் பிச்சை போடற மாதிரி, கீழே இருக்கிற நான் மேலே இருக்கிற உனக்குப் போடற பிச்சை இது. பொறுக் கிட்டுப் போ!’, 'இங்கே இருக்கிற எல்லாருமே கௌதம்தானே’, 'உனக்கு எத்தனை பிள்ளை வேணும்னாலும் நான் பெத்துத் தர்றேன்... நீ இங்கே வந்துரு’ என சில இடங்களில் சூழ்நிலைக்கேற்ற  பொளேர் வசனங்கள் ஈர்க்கின்றன. ஆனால், படத்தில் அனைத்து பாத்திரங்களும் தன் தன்மை மீறி தத்துவம் பேசுவது, இறப்பதற்கு முன் முழுதாக இரண்டு நிமிடங்கள் பேசுவதெல்லாம்... அலுப்பு!

ஸ்ரீகாந்த் தேவாவின் இசை, பின்னணியில் விறுவிறுப்பு சேர்த்திருக்கிறது. மாட்டு இறைச்சிக் கூடமோ, மின்விளக்கு தயாரிப்பு ஆலையோ, ரகசியக் கிடங்குகளோ... அந்தந்த இருப்பிட இயல்பில் நம்மை நிலைநிறுத்துகிறது கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு.

வீட்டை விற்று குழந்தையை மீட்க முனைவது, மனைவியை விட்டு மாதக்கணக்கில் பிரிந்து குழந்தையைத் தேடித் திரிவது... என்று மகன் பாசத்தில் ஷாம் உழல்வதாகக் காட்டியிருக்கிறார்கள். ஆனால், அந்தளவுக்கான பாசப்பிணைப்பு கொண்ட மகனின் முகம் நம் நினைவிலேயே இல்லை. அவ்வளவுக்குத்தான் ஆரம்பக் காட்சிகளில் மகனின் கதாபாத்திரம் இடம்பெறுகிறது. இதனாலேயே, 'அச்சோ... அத்தனை சூட்டிகையான பையன் காணோமா...’ என்ற துடிப்பும், 'அந்தப் பிச்சைக்காரர்கள் கும்பலில் அந்தப் பையன் இருக்க வேண்டுமே’ என்ற பரிதவிப்பும் நமக்குத் தோன்றவே இல்லை!

குழந்தையைக் கடத்திய விவகாரத்தில் போலீஸ் தலையிடவில்லை... சரி. அட, ஏரியாவாரியாக தாதாக்களைப் போட்டுத் தள்ளிக்கொண்டே இருக்கிறார் ஷாம். அவரையுமா கண்டுகொள்ளாமல் விடுவார்கள்!? அதுவும் வில்லன்களே ஊர் ஊராக வழிகாட்டி அனுப்பி வைப்பதெல்லாம் என்னங்கப்பா? தேவைப்படும் சமயம் 'ஆக்ஷன் அவதாரம்’ எடுக்கும் ஷாமின் ஹீரோயிஸம் போன்ற லாஜிக் குறைபாடுகளின் தாக்கத்தால், '6 மெழுகுவத்தி’களின் சுடர் தட்டுத்தடுமாறி எரிகிறது!

ஆனால், படம் முடிந்த பிறகு தியேட்டரை விட்டு வெளியேறும் கும்பலில் தங்கள் குழந்தைகளின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறார்கள் பெற்றோர்கள். அந்தப் பெருவெளிச்சத்தைப் பாய்ச்சியதற்காக, இந்த மெழுகுவத்தியை உயர்த்திப் பிடிக்கலாம்!

- விகடன் விமர்சனக் குழு

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்