வணக்கம் சென்னை - சினிமா விமர்சனம்

தேனி அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பையனும், தென்னிந்தியக் கலாசாரத்தை புகைப்படம் எடுக்க வரும் லண்டன் வாழ் இந்தியப் பெண்ணும் சந்தித்துக்கொள்ளும் சண்டை ப்ளஸ் காதல் ஸ்பாட் 'வணக்கம் சென்னை’.

சென்னைக்கு வரும் சாஃப்ட்வேர் துறை இளைஞன் சிவாவுக்கும், லண்டனில் இருந்து வரும் ப்ரியா ஆனந்துக்கும் ஒரே ஃப்ளாட்டை ஏமாற்றி வாடகைக்கு விட்டுவிட்டு எஸ்கேப் ஆகிறார் போலி ஹவுஸ் ஓனர் சந்தானம். ப்ரியா ஆனந்த், ஏற்கெனவே லண்டனில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண். மோதல் கடைசியில் காதலாக எட்டிப்பார்க்க, இருவரும் ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா என்பதை கலகலப்பாகச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் கிருத்திகா உதயநிதி.

சிம்பிளான ஒரு வரிக் கதையை, கலகலப்பான காட்சிகள் மூலம் நகர்த்திய விதத்தில் பாஸ்ம£ர்க் வாங்குகிறார் அறிமுக இயக்குநர் கிருத்திகா. பாடல் காட்சிகளில், சின்னச் சின்ன நுணுக்கமான ஷாட்களில் கவனிக்க வைக்கிறார்.

'டோன்ட் கேர்’ கேரக்டருக்கு சிவா ஓ.கே.தான். ஆனால், எந்த சீனாக இருந்தாலும் பேன்ட் பாக்கெட்டில் கையை விடுவது, தலை முடியைக் கலைத்துவிடுவது என்று ரிப்பீட் மேனரிஸத்தால் அப்பீட் ஆகிறார். கொஞ்சம் நடிங்க பாஸ்!

சிவாவின் முன்பு ராகுல் ரவீந்திரனிடம் நெருக்கமாக இருக்கும் காட்சிகளில் தெரிகிற சங்கடம், ஓவர் மப்பில் சிவாவிடம் 'நீ ரொம்ப நல்லவன்டா’ என்று சொல்லும்போது குறும்பு, பாண்டிச்சேரி தியான மையத்தில் கண்களை மூடியதும் மனக்கண்ணில் சிவா வர ஏற்படும் குழப்பம்... என உணர்ச்சிகளை அளவாக, அழகாகக் கலந்துகட்டித் தருகிறார் ப்ரியா ஆனந்த்.

இரண்டாம் பாதியில்தான் சந்தானம் என்ட்ரி. ஆனாலும், காமெடி சிக்ஸர்கள் விளாசுகிறார் பார்ட்டி. அவரின் காதல் தோல்வி ப்ளாஷ்பேக்கும், பின்னணியில் ஒலிக்கும் 'நான் ஒரு முட்டாளுங்க’ பாடலும் கலகல.

நிழல்கள் ரவி, ஊர்வசி, மனோபாலா, நாசர், ப்ளாக் பாண்டி... என பலரும் படத்தில் வந்துபோகிறார்கள். ஒருசில காட்சிகள் வந்தாலும் பாசக்கார அம்மாவாக மனதில் பதிகிறார் ரேணுகா. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஷீரோவுக்காக ஹீரோயினை விட்டுக்கொடுப்பார்களோ இந்த ஃபாரின் மாப்பிள்ளைகள்?

ரிச்சர்ட் எம்.நாதனின் கேமரா, போடி மெட்டுவின் அழகியல் பிரமாண்டம், லண்டனின் ரிச்னஸ் இரண்டையும் கொண்டுவந்திருக்கின்றன. அனிருத்தின் இசை படத்துக்கும் பாடலுக்கும் பெரும் பலம். 'ஒசக்க... ஒசக்க’ பாடல் றெக்கைக் கட்டிப் பறக்கிறது என்றால், 'பெண்ணே... பெண்ணே’ மென் தூறல்.

பார்த்த கதை, யூகிக்க முடிந்த காட்சிகள்தான். ஆனால், கலகலப்புக்காக, சின்ன வணக்கம் வைக்கலாம்!

- விகடன் விமர்சனக் குழு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!