ஆரம்பம் - சினிமா விமர்சனம் | arrambam, ஆரம்பம்

வெளியிடப்பட்ட நேரம்: 13:01 (07/11/2013)

கடைசி தொடர்பு:11:56 (15/10/2015)

ஆரம்பம் - சினிமா விமர்சனம்

ந்திய அரசின் ஊழல் பெருச்சாளிகளை வேட்டையாடும் போலீஸ் அஜித். அப்புறமென்ன அடி தூள் ஆரம்பம்தானே!

தரமற்ற புல்லட் புரூஃப் உடை காரணமாக உயிரிழக்கிறார் அஜித்தின் போலீஸ் நண்பன் ராணா. அந்த பேரத்தை முடித்த அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் பழிவாங்கக் கிளம்புகிறார் அஜித். ஆனால், அவர் மீதே கொலைப் பழி சுமத்தி, கொலை செய்கிறார்கள் வில்லன்கள். ஃபீனிக்ஸ் பறவையாக 'தல’யெடுத்து அஜித் வில்லன்களை துவம்சம் செய்யும் கதை!

மும்பை தாஜ் ஹோட்டல் தீவிரவாதிகள் தாக்குதலில், தரமற்ற புல்லட் புரூஃப் ஆடை அணிந்திருந்ததால் உயிரிழந்த போலீஸ் அதிகாரி ஹேமந்த் கார்கரேவின் கதையை அஜித் ரசிகர்களுக்கு ஏற்ப சஸ்பென்ஸ் த்ரில்லராகப் பின்னியதில் ஸ்கோர் செய்திருக்கிறார் இயக்குநர் விஷ்ணுவர்தன்.

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அஜித் செம ஸ்டைல். 'பில்லா’ பாணியில் நடக்கிறார், கூலர்ஸ் அணிகிறார்; நடக்கிறார்... கூலர்ஸ் அணிகிறார். இது அஜித் ரசிகர்களைக் குஷிப்படுத்தினாலும், வில்லனை மிரட்ட குழந்தையின் மீது சூடான அயர்ன் பாக்ஸை வைத்துவிடுவதாக மிரட்டும் இடத்திலும், நயன்தாராவுடன் எந்தக் 'கசமுசா’வும் நிகழ்த்தாமல், கடமையே கண்ணாக அஜித் செயல்படுவதும்... குட் ஷோ!

ஆர்யா அதிசயமாக மெனக்கெட்டு மேக்கப்புடன் 'குண்டு பையனாக’ நடிக்கவும் செய்திருக்கிறார். கேங்ஸ்டர் கேர்ளாக 'பில்லா’வில் செய்ததை இதிலும் டிட்டோ அடித்திருக்கிறார் நயன். அச்சுபிச்சு கேரக்டராக இருந்தாலும், 'ஹவ் ஸ்வீட்ட்ட்ட்’ டாப்ஸி! ஊழல் அமைச்சர் மகேஷ் மஞ்ச்ரேக்கர், 'டே போலீஸ் ஆபீஸர்... என் மூஞ்சியை எதுக்குடா பார்க்குறே..? வயரை பார்த்து கட் பண்றா!’ என்று சலம்பித்தள்ளும் க்ளைமாக்ஸில் பட்டாசு கொளுத்துகிறார்.

'மேக் இட் சிம்பிள்’ என்று பன்ச் பிடித்தது முதல் சிம்பிள் வசனங்களாலேயே காட்சிகளை நகர்த்துகிறது சுபாவின் திரைக்கதை ப்ளஸ் வசனம்.

'அஜித் யார்?, ஏன் இவ்வளவு கலாட்டா செய்கிறார்?’ என்று யோசிக்கவைக்கும் முன்பாதி ஜிவ்வென்று டேக்-ஆஃப் ஆகிறது. ஆனால், நீள ஃப்ளாஷ்பேக் 'சொய்ய்ய்ங்’ என்று அந்த டெம்போவை தரை இறக்கிவிடுகிறது. அஜித் போலீஸுடன் மல்லுக்கட்டுவதைவிட ஆர்யாவுடன்தான் அதிகம் மல்லுக்கட்டுகிறார். நேர்மை ப்ளஸ் திறமையான போலீஸ் கிஷோருக்கு, அஜித்தைப் பற்றி எந்தத் தகவலும் தெரிந்திருக்காதா? அத்தனை பாதுகாப்பு அம்சங்கள்கொண்ட வங்கியில் அஜித் அண்ட் கோ திருவிழாவில் குருவி ரொட்டி வாங்குவது கணக்காக லூட்டி அடிப்பதெல்லாம், உல்லுல்லாயி!

'ஆரம்பித்த’ ஜோரில் முடிக்காமல், ஜவ்வாக இழுத்திருக்கிறார்கள். ஆனால், அஜித் ரசிகர்களையும் திருப்திபடுத்தி, ஓர் ஆக்ஷன் த்ரில்லராகவும் பேலன்ஸ் செய்த வகையில் இயக்குநருக்கு இந்த ஆபரேஷன் சக்சஸ்தான்!

- விகடன் விமர்சனக் குழு

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close