பாண்டிய நாடு - சினிமா விமர்சனம் | பாண்டிய நாடு. paandiya naadu

வெளியிடப்பட்ட நேரம்: 11:49 (08/11/2013)

கடைசி தொடர்பு:11:49 (08/11/2013)

பாண்டிய நாடு - சினிமா விமர்சனம்

ன்னொரு 'மதுர’ சினிமா! அண்ணனைக் கொன்றவனைப் பழிவாங்கும், 'பதுங்கும் எலி... பின், பாயும் புலி’ கதை. அதை நேர்த்தியான பேக்கேஜில் ரசிக்கும் படி தந்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். விஷாலும் வில்லனும் நேருக்குநேர் மோதிக்கொள்வது, க்ளைமாக்ஸ் சண்டையில் மட்டும்தான். ஆனால், அதுவரையுமே 'திக்... திடுக்...’ டெம்போவை ஏற்றிக்கொண்டே சென்ற விதத்தில்... சபாஷ்!

அட, விஷாலா இது!? கோபத்தில் முறுக்கிக் கொள்ளாத அந்த 'ஷோல்டரை’ கட்டியணைத்துப் பாராட்டலாம். வெளியூருக்கு பஸ் ஏறாமல், மிரட்டல் வில்லன்களுக்கு சவால் விடாமல், பயமும் பதட்டமுமாக ஆயுதத்தைக் கையில் எடுக்கும் அண்டர்ப்ளே நடிப்பில் வெரைட்டி விருந்து படைக்கிறார். நண்பன் அடிவாங்குவதைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு, 'அடிடா அவனை’ என்று உதார் சவுண்ட் கொடுக்கும் அந்த இடத்தில், 'வின்னிங் ஃபார்முலா’வைப் பிடித்துவிட்டீர்கள் விஷால்!

அடக்கஒடுக்க அழகு லட்சுமிமேனன். ஸ்கூல் மிஸ் கெட்டப்பில் பாந்த உலா வருபவர், 'ஃபை ஃபை ஃபை’ பாடலில் கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார். இப்படியான 'அப்பா’ கேரக்டர்களை நிறையப் பார்த்திருந்தாலும், தன் குரல், உடல் மொழியில் பரிதவிக்கவைக்கிறார் பாரதிராஜா. அதிலும் க்ளைமாக்ஸில், உண்மை தெரிந்து விஷாலை கம்பீரமும் நன்றியுமாகப் பார்த்து கண்கலங்கும் இடத்தில், க்ளாஸ்! ஆட்கள் சுற்றிவளைத்த பின்னரும் அசராமல் வேட்டியை மடித்துக்கட்டி வில்லன் ஷரத் லோஹிதஸ்வா தெனாவட்டாக விளையாடும் இடம்... மிரட்டல்!

'பிரதருக்கு புதருக்குள்ள என்னடா வேலை?’ என்று லந்து நண்பனாக வந்தாலும், கதையை நகர்த்தவும் உதவுகிறார் சூரி.

அறிந்த கதை, தெரிந்த திருப்பங்கள் என்று பயணிக்கும் திரைக்கதையை அலுப்பு இல்லாமல் நகர்த்த உதவுகிறது சுசீந்திரன்-பாஸ்கர் சக்தியின் இயல்பான வசனங்கள். 'நான் கூப்பிட்ட உடனே நீங்க வந்துட்டீங்களே.. யார் கூப்பிட்டாலும் இப்படிப் போய்டுவீங்களா?’ 'ஒரு பொண்ணை பிக்கப் பண்றதுக்கு முன்னாடியே டிராப் பண்ற பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்? இன்னைக்கு டிராப் பண்ற இடத்துல வந்து நாளைக்கு பிக்கப் பண்ணிக்கவா?’ - பளிச் சாம்பிள்கள்.

'டையரே...’ பாடல் அத்தனை கலர்ஃபுல்லாக இருந்தாலும், படத்தை அந்த இழவுப் பாடலில் ஓப்பன் செய்திருக்கும் தைரியம்... ஆச்சர்யம். வைரமுத்து - மதன் கார்க்கி காம்பினேஷனில் 'டையரே...’, 'ஒத்தக்கடை மச்சான்...’, 'ஃபை ஃபை கலாய்ச்சி ஃபை...’ பாடல்களில் தாளம் போட வைக்கும் இமான், ஆக்ஷன் காட்சிகளின் பின்னணியில் மிரளவைக்கிறார். இருளும் ஒளியுமான மதுரையை இயல்பு மாறாமல் படம் பிடித்திருக்கிறது மதியின் ஒளிப்பதிவு.

அவ்வளவு பரந்த நெட்வொர்க் வைத்திருக்கும் வில்லன் குரூப், சூரி கொடுத்த செல்போனை நம்பிப் பயன்படுத்துவதும், அத்தனை ஷார்ப்பான வில்லன் ஆட்கள் ஒரு வருடமாக விஷாலை சந்தேகிக்காமலே இருப்பதும், 'எட்டு மணி மாட்டுத்தாவணி சந்திப்பு’ என்று பிரமாத பில்ட்-அப் வைத்த இடத்தில் 'ஃபை ஃபை ஃபை கலாய்ச்சி ஃபை’ பாடலைத் திணித்திருப்பதும்... வொய் கலாய்ச்சிஃபை?

'மதுரை என்றாலே ரத்தம் சத்தம் யுத்தம்’ என பழகிய ஃபார்முலாவானாலும், பளிச் கதாபாத்திரங்களுக்காகவும், 'குவாரி மோசடி’ என்று டாபிக்கல் சுவாரஸ்யம் சேர்த்ததற்காகவும், இந்தப் பாண்டிய நாட்டுக்கு ஒரு டிரிப் அடிக்கலாம்!

- விகடன் விமர்சனக் குழு

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்