ALL IN ALL அழகுராஜா - சினிமா விமர்சனம் | ALL IN ALL அழகுராஜா - சினிமா விமர்சனம்

வெளியிடப்பட்ட நேரம்: 15:19 (08/11/2013)

கடைசி தொடர்பு:15:19 (08/11/2013)

ALL IN ALL அழகுராஜா - சினிமா விமர்சனம்

கோயில் தெரியும் லொகேஷன்,  'வெட்டி பந்தா’ வேலையில் ஹீரோ, கல்யாண மண்டபத்தில் ஹீரோ-ஹீரோயின் சந்திப்பு, ஹீரோ அல்லது ஹீரோயினின் பெற்றோர்களுக்கு ஒரு பிரச்னை ஃப்ளாஷ்பேக், இந்த சம்பவங்களுக்கு நடுநடுவே சந்தானத்தை வைத்து 'மானே தேனே’ போட்டு கலாய் காமெடி... இதுதானே ராஜேஷ் படங்களின் ஃபார்முலா. அதேதான் 'அழகுராஜா’விலும். ஆனால், இந்த ஆட்டம் 'ஆல் இன் ஆல்’ போங்கு ராஜேஷ்!

ஒரு லோக்கல் சேனலை செம லோக்கலாக நடத்தி வருகிறார்கள் கார்த்தியும் சந்தானமும். அந்தச் சேனலை 'நம்பர் 1’ ஆக்கிவிட்டுத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்ற கார்த்தியின் லட்சியத்தில் இடி இறக்குகிறது காஜலின் அழகு. ஆனால், கார்த்தியின் அப்பா பிரபுவுக்கு, காஜல் குடும்பத்துடன் ஒரு முட்டல் ஃப்ளாஷ்பேக். காதல், மோதல், குடும்பப் பஞ்சாயத்துகளுக்குப் பிறகு என்ன நடக்கவேண்டுமோ, அதுவே நடக்கிறது!

அறிமுக நாயகனை வைத்து சரவெடி ஹிட் அடித்த ராஜேஷ், கார்த்தி-சந்தானத்தை வைத்து இப்படி ஒரு ஷோ காட்டுவாரா? நம்ம்ம்ப முடியவில்லை! ஃப்ளாஷ்பேக்கில் கார்த்தியை பிரபுவாக நடிக்க வைத்தது, சீனியர் சந்தானத்தின் பாடிலாங்வேஜ், எம்.எஸ்.பாஸ்கரின் நடன வகுப்பு என ஒரு சில ஐடியாக்கள் மட்டுமே அழகு ராஜா.

ஒரு ஃப்ரேம்கூட மிச்சம் வைக்காமல் துறுதுறுவென நடிக்கிறார், காதல் ரசம் பொங்க பார்க்கிறார், அந்தக் கால பிரபுவின் உடல், குரல்மொழி என படத்தில் கார்த்தி எல்லாம் செய்கிறார். ஆனாலும், என்ன செய்வார் பாவம்..? 'ஓஹோன்னனான்’ என்று காலரைத் தூக்கிவிட்டு காற்று ஊதும் இன்றைய கல்யாணம், வாய் நிறையக் குதப்பிக்கொண்டு 'டம்பி முட்டு’ என்று பேசும் அன்றைய காளியண்ணன் என இரண்டு கேரக்டர்களுக்கும் ஏக வித்தியாசம் காட்டுகிறார் சந்தானம். ஆனால், வெற்று வசனங்கள் கிச்சுகிச்சு மூட்டுவேனா என்கிறது!

கலைத் தாகத்துடன் சாதிக்கத் துடிக்கும் கேரக்டரில் காஜலுக்கு நடிக்க ஸ்கோப் கொஞ்சம் அதிகம்தான். அழகி, நடிக்கவும் செய்திருக்கிறார். ஆனாலும், 'இத்தனை லூஸுப் பெண்ணாக ஒரு ஹீரோயினா?’ என்ற நினைப்பு காஜலின் சேட்டைகளை ரசிக்கவிடாமல் நந்தியாக நிற்கிறது!

இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக சோதித்த பிறகு, கார்த்தி, நரேன் சொல்லும் அடாசு கவிதையும், அட்டு ஃப்ளாஷ்பேக்கும் ஆறுதல் அத்தியாயங்கள். ஃப்ளாஷ்பேக் ராதிகா ஆப்தேவுக்கு என்ன ஆச்சு பாஸ்?

த்ரில்லர், சஸ்பென்ஸ் படங்களில் யூகிக்கக் முடிந்த திருப்பங்களைப் பார்த்திருப்போம். அட, காமெடி காட்சிகளில் 'யூகிக்க முடிந்த திருப்பங்களை’ அழகுராஜா காட்டுகிறான். அதிலும் மிகப் பலவீனமான ஜோக்குகளுக்கு அத்தனை நீள பில்ட்-அப் ஏன்?

ரெட்ரோ பாடலாக ஒலிக்கும் 'உன்னைப் பார்த்த நேரம்’ வசீகரம். அந்தப் பாடலுக்கான மேக்கிங் மெனக்கெடலை படம் முழுக்கவே காட்டியிருக்கலாம்.

ஹிட் இயக்குநர்கள் தங்கள் அடுத்தகட்டப் பாய்ச்சலுக்கு அப்டேட் செய்துகொள்ள, ஓர் இடைவெளி தேவைப்படும். இயக்குநர் ராஜேஷ§க்கு இப்போது தேவை அந்த பிரேக்!

- விகடன் விமர்சனக் குழு

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்