ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

வில்லா - சினிமா விமர்சனம்

நெகட்டிவ் எனர்ஜி சூழ்ந்திருக்கும் வில்லன் 'வில்லா’!

மறைந்த தன் அப்பாவுக்குச் சொந்தமான, யாரும் பயன்படுத்தாத ஒரு பங்களாவுக்கு (வில்லா) குடி வருகிறார் நாவலாசிரியர் அஷோக். அங்கே அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களும், நடக்கவிருக்கும் சம்பவங்களும் ஓவியங்களாக வரையப்பட்டிருக்கின்றன. அதில் அஷோக் தன் காதலியைக் கொல்வது போலவும், எரியும் வில்லாவுக்குள் சிக்கி அஷோக் இறப்பது போலவும் திடுக் ஓவியங்களும் இருக் கின்றன. வில்லா ஓவியங்கள்  வாழ்க்கை யில் வரிசையாக நிஜமாக, அஷோக் தப்பித்தாரா என்பதே க்ளைமாக்ஸ்!

ஒன்லைனாகக் கேட்பதற்கும், கதையாகச் சொல்வதற்கும் எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறது? ஆனால், அந்த சுவாரஸ்ய திகிலை காட்சிகளில் ஏற்றாமல், கதையை விளக்குகிறேன் என்று பேசிப் பேசியே கடுப்ஸ் கிளப்புகிறார்கள்.

ஓவியங்கள் ஒளிந்திருக்கும் அறையை அஷோக் கண்டுபிடிப்பதும், அந்த க்ளைமேக்ஸ் திருப்பமும் மட்டுமே அறிமுக இயக்குநர் தீபன் ஸ்கோர் செய்யும் இடங்கள். ஒரு திகில் பேய்ப் படத்தில் முதல் 20 நிமிடங்கள் கதைக்குள்ளே வராமல், காரணங்களை மட்டும் அடுக்கிக்கொண்டிருந்தால் எப்படி பாஸ்?

ஒரு நாவலாசிரியர் கெட்டப்புக்கு, எப்போதும் உம்மென்றே இருக்கும் அஷோக் செல்வன் ஓ.கே-தான். ஆனால், தன் வாழ்க்கையில் பேரழிவுகள் நடக்க இருக்கின்றன என்று தெரிந்த பிறகும் அப்படியே ரியாக்ஷன் காட்டினால் எப்படி? பரமனுக்கு மரணபயத்தைக் காட்டியிருக்க வேண்டாமா?

சஞ்சிதா ஷெட்டி, திகில் பட அழகியாக வந்து போகிறார். படத்தில் மைக்ரோ கேரக்டரில் வந்தாலும் இயல்பாக ஈர்க்கிறார் 'பொன்ராம்’ காளி. வாழ்ந்துகெட்ட சோகத்தைச் சொல்லும்போதும், 'சண்டைனா சாதாரண சண்டை இல்லைங்க... மூணு நாலு தடவை என்னைக் கொல்லவே வந்துட்டான்’ என்று மிரளும்போதும், 'அந்த வில்லாவை வாங்கிராதீங்க’ என்று அஷோக்கைக் கெஞ்சும்போதும் பயம், ஈரம், பரிதாபம் என்று கலந்துகட்டி அசத்துகிறார்.

வில்லாவின் அசாதாரண நிகழ்வுகளை அடுக்கி அலறவைக்காமல், பாசிட்டிவ் எனர்ஜி, நெகட்டிவ் எனர்ஜி, கோயில், திருநீறு, ஜே.ஜே.தாம்சன் எஃபெக்ட் என்று அறிவியல்பூர்வ விளக்கங்களை இவ்வளவு லெக்சர் அடித்திருக்க வேண்டுமா? பேய் படம் என்று முடிவான பின்னர், அந்த லாஜிக் விளக்கங்கள் எதற்கு பாஸ்?

'ஹலோ வில்லாங்களா... பேய் எப்போ சார் வரும்?’ என்று கேட்கவைக்கிறது பெரும் திருப்பம் இல்லாத திரைக்கதை.

இருளும் நிழலுமான ஒளிப்பதிவு மூலம் முடிந்தவரை திகில் கூட்ட மெனக்கெடுகிறது தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவு. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையில் டெரர் டெம்போ!

க்ளைமாக்ஸ் திகிலை படம் முழுக்கக் கொண்டுவந்திருந்தால், நல்லா வந்திருக்கும் இந்த வில்லா!

- விகடன் விமர்சனக் குழு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!