பிரியாணி - சினிமா விமர்சனம் | பிரியாணி, biriyani

வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (26/12/2013)

கடைசி தொடர்பு:11:35 (26/12/2013)

பிரியாணி - சினிமா விமர்சனம்

ர் இரவு, ஒரு பிரியாணி, ஓர் அழகி, ஒரு கொலை... தடதடக்கும் துரத்தல் மிரட்டலே படம்!

உதவி இயக்குநர்: சார் கதை..?

வெங்கட் பிரபு: டோன்ட் வொர்ரி!

உ. இயக்குநர்: சார் லாஜிக்..?

வெ.பிரபு: கண்டுக்க மாட்டாங்கப்பா!

உ. இயக்குநர்: சார்..?!

வெ.பிரபு: அட, கார்த்தி இருக்காரு... ஹன்சிகா, பிரேம்ஜி இருக்காங்க... மற்றும் நம் உறவினர்கள் எல்லாம் இருக்காங்க... பார்த்துக்கலாம்!

- இப்படியாக முடிவெடுத்து, தனது பார்ட்டி பட்டாளத்துடன் 'பிரியாணி டின்னர்’ அடித்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. பீர், ஃபிகர், பிரியாணி, காமெடி, காதல், சஸ்பென்ஸ், க்ரைம், கிளப், மப்பு... என சகல மசாலாக்களையும் கலந்து கட்டியிருக்கிறார்கள். இடைவேளை ப்ளாக்கில்தான் கதையே ஆரம்பம். அதுவரை கார்த்தி - பிரேம்ஜி இடையிலான ஃபிகர் உஷார் அத்தியாயங்கள் மட்டுமே!

'உனக்காகத்தான் மச்சான் நம்பர் வாங்குனேன்... ஆனா பாரு, கொடுக்க மறந்துட்டேன்!'' என்று பிரேம்ஜியை சதாய்க்கும்போதும், பார்க்கும் பெண்களை எல்லாம் வசீகரமாகக் கவரும்போதும்... செம காஸனோவா கார்த்தி!

''நீ ஆசைப்படுறது எல்லாம் உனக்குக் கிடைக்குது ஓ.கே. ஆனா, நான் ஆசைப்படுறதும் உனக்கே கிடைக்குதே அது எப்படி?'' என்று போங்கு வாங்கிப் பொங்குவதும், புலி டான்ஸ் போடுவதுமாகக் கலகல பிரேம்ஜி. ஹன்சிகா இருந்தும், விசில் விசிறிகளுக்கு வேலை வைப்பது என்னவோ, 'ஹிட் ஹாட்’ மாண்டி தக்கர்.

'இவர் டைரக்டரோட க்ளோஸ் ஃப்ரெண்ட். டேட்ஸ் ஃப்ரீயா இருக்குனு நடிச்சுக் கொடுத்திருக்கார்’ என்று ஜெய்க்கு கார்டு போடுவதில் இருந்து, 'எனக்கு சண்டை சீன் இல்லையா?’ என்று சாம் ஆண்டர்சன் விரக்தியாவது வரை, பிரியாணியில் ஆங்காங்கே நச் நச் லெக் பீஸ்!

ஃபிரிட்ஜுக்குள் பிணம், டி.வி. சேனல் டிராமா, ஹிட் வுமன் அதிரடிகள், அத்தனை விவரமான சி.பி.ஐ. அதிகாரி, கார்த்தியை சட்டென நிரபராதி என்று நம்புவது... ம்ஹும்... எந்த லாஜிக்குக்கும் மெனக்கெடாமல் லெஃப்ட் இண்டிகேட்டர் போட்டு ரைட்டில் திரும்புகிறது திரைக்கதை!

100-வது படத்தில் 'டீன் டியூன்’ அடித்து இளமை விருந்து படைத்திருக்கிறது யுவனின் இசை!

'நீங்க ரெண்டு பேரும் காரைப் பத்தி மட்டும்தானே பேசிட்டு இருக்கீங்க?’, 'டேய்... போன உடனே வேலையை முடிச்சுடு... பாட்டுலாம் பாடிட்டு இருக்காத...’ - போன்ற 'அசைவ’ வசனங்கள், உங்களுக்கு அலர்ஜி இல்லையென்றால், சொல்லலாம் ஒரு பிளேட் 'பிரியாணி’!

- விகடன் விமர்சனக் குழு 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்